“தலித்துகள் சுதந்திரமாக சிந்திப்பதை நரேந்திர மோதி விரும்பவில்லை”

  • 31 ஆகஸ்ட் 2018

தமது வீட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தொடர்பாக, செயற்பாட்டாளரும் பேராசிரியருமான ஆனந்த் டெல்டும்டே, "நான் ஒரு மோசமான குற்றவாளி, பயங்கரவாதி என்பது போல இந்த சோதனையை மேற்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதனை என்னிடமே விசாரித்து இருக்கலாம். என்னை காவல் நிலையம் வர சொல்லி இருந்தால் கூட சென்று இருப்பேன். ஆனால், உண்மையில் அவர்கள் நோக்கம் என்னை பயங்கரவாதி போல சித்தரிப்பதுதான்." என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டி கடந்த செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனந்த் டெல்டும்டே வசிக்கும் கோவா மேலாண்மை கல்விநிலைய பேராசிரியர்கள் குடியிருப்பில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.சோதனை செய்யப்பட்ட போது தம் வீட்டில் யாரும் இல்லை என்றும், பாதுகாப்பு பணியாளர்களை மிரட்டி சாவி பெற்று வீட்டில் சோதனை மேற்கொண்டு இருக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறார் ஆனந்த்.

இப்படியான சூழ்நிலையில் பிபிசி தமிழின் செய்தியாளர் மு. நியாஸ் அகமது, மின்னஞ்சல் வழியாக ஆனந்தை தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு ஆனந்த அளித்த பதில்களை இங்கே தொகுத்துள்ளோம்.

அண்மையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அதனை தொடர்ந்த கைதுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

"இப்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கையுடன் இருப்பதை இது காட்டுகிறது. மக்கள் உரிமைக்காக செயல்படுபவர்களை அவர்கள் குறி வைத்திருக்கிறார்கள். இந்த செயல்பாட்டாளர்கள் மக்கள் உரிமைக்காக வியத்தகு முறையில் செயலாற்றி வருபவர்கள். அவர்களின் சாதனைகளோடு இங்கு எந்த அரசியல்வாதி புரிந்த செயல்களையும் ஒப்பிட முடியாது. இப்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்குரல்களை ஒடுக்கும் நடவடிக்கை. எதிர்குரல்களே இருக்கக் கூடாது என அரசாங்கம் விரும்புகிறது. இந்த ஃபாசிச அரசாங்கம், தம்மை யாரும் கேள்வி கேட்க கூடாது என்று நினைக்கிறது. கேள்விகேட்காத இணக்கத்தை விரும்புகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆனந்த் டெல்டும்டே

மஹாராஷ்டிராவின் பீமா கோரேகான் பகுதியில் ஜனவரி 1 ஆம் தேதி வெடித்த வன்முறைக்கு யார் உண்மையில் காரணமோ அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றம் அரசிடம் இருக்கிறது. அதற்காகதான் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறது.

உண்மையான குற்றவாளிகளுக்கு, அன்று அரசு உடந்தையாக இருந்தது வெளிப்படையாக தெரிகிறது. அன்று ஜனவரி 1 ஆம் தேதி, போதுமான போலீஸ் இல்லை. சிலரால் மோசமான செயல்கள் திட்டமிடப்படுகிறது என்று தெரிந்த பின்னரும் போதுமான போலீஸை நிறுத்தாமல் இருந்தது யார் தவறு?

அவர்களை காக்கதான், ஜிக்னேஷ் மேவானி மீதும், உமர் காலித் மீதும் தொடக்கத்தில் குற்றஞ்சாட்டியது அரசு. பின் சில தலித் செயற்பாட்டாளர்களை குறி வைத்தது. தலித்துகள் மேற்கொண்ட எல்கர் பரிஷத் பேரணியை ஒருங்கிணைக்க மாவோயிஸ்டுகள் பணம் கொடுத்தார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. ஆனால், இதனை ஒருங்கிணைத்த முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.

எந்த உறுதியான ஆதாரமும் இல்லாமல், அரசுக்கு ஆதரவாக இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த கொடுமையான நடவடிக்கையை நியாயப்படுத்த அவர்கள் மோதியை கொல்ல திட்டம் தீட்டப்படுவதாக கூறிவருகிறார்கள். கடந்த காலத்தை கொஞ்சம் பார்த்தால், மோதியின் செல்வாக்கு எப்போதெல்லாம் குறைகிறதோ அப்போதெல்லாம் இவ்வாறான செயல்களில் இறங்கி இருக்கிறார்கள் என்பது புரியும். போலி மோதல் (encounter) சாவுகளையும் உண்டாக்கி இருக்கிறார்கள். என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட பலர் அப்பாவிகள் என பிந்தைய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது"

அறிவுஜீவிகளின் குரலை இந்த அரசு ஒடுக்கப் பார்க்கிறதாக நீங்கள் கருதுகிறீர்களா?

"ஆம். அதில் என்ன சந்தேகம்? இந்தியாவில் கருத்து சுதந்திரம் அச்சத்தில் உள்ளது. இந்த அரசு துதிப்பாட வேண்டும். அவ்வாறு துதிப்பாடுபவர்களுக்கு மட்டும்தான் இங்கு இடம். இங்கு சில தொலைக்காட்சிகள் அவ்வாறாகதான் செயல்படுகிறது. அரசை விமர்சிப்பவர்களை தவறாக சித்தரிக்கிறது. இந்த நாடு அறிவுஜீவிகள் அற்ற நாடாக மாற வேண்டும் என இந்த அரசு விரும்புகிறது. கேள்வி கேட்பது அறிவு ஜீவிகளின் வேலை. அதனால் அதனை அவர்கள் விரும்பவில்லை. அறிவற்ற கூட்டம் விரைவாக 'பக்தாள்'-களாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது."

படத்தின் காப்புரிமை Getty Images

அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, 'நாங்கள் அம்பேத்கரை கெளரவித்தது போல வேறு எந்த அரசும் கெளரவிக்கவில்லை' என்றார். தம் அரசு ஏழைகளுக்கான அரசு என்று தொடர்ந்து கூறி வருகிறார். இது குறித்து?

"இந்த அரசு துன்புறுத்தியது போல வேறு எந்த அரசும் தலித்துகளை துன்புறுத்தியது இல்லை என்பதையும் சேர்த்து கொள்ளுங்கள். அம்பேத்கரை தெய்வமாக்குவதும், அவருக்கு நினைவிடம் கட்டுவதும் இந்த அரசின் தந்திரம். ஒரு பக்கம் சுதந்திரமான தலித்துகளின் குரல்களை ஒடுக்கி இன்னொரு பக்கம் அவருக்கு நினைவிடம் கட்டுவது சூழ்ச்சி அன்றி வேறில்லை. சுதந்திரமான குரல்கள் எழுப்புபவர்கள்தான் அம்பேத்கர் மூலம் உத்வேகம் பெற்றவர்கள். ஆனால், மோதி தலித்துகள் சுதந்திரமாக சிந்திப்பதை விரும்பவில்லை. அவர்களை அம்பேத்கரின் வெறும் பக்தர்களாக மாற்ற நினைக்கிறார்.

இந்த அரசாங்கம் பெரும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வளத்தை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வழங்கி இருக்கிறது. இவர்கள் யாருக்காக அரசு நடத்துகிறார்கள்; இது யாருடைய அரசு என்பதை இதன் மூலமாக புரிந்து கொள்ளலாம். சமத்துவமின்மை உச்சத்தில் இருக்கிறது. உலகில் சமத்துவமின்மைமிக்க நாடாக இந்தியாவை மாற்றி இருக்கிறார்கள். அதே பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்து வலதுசாரிகள் 'இது தலித்துகளுக்கான அரசு' என்று நம்பிக்கையாக கோயபல்ஸ் வழியில் பொய் சொல்லி வருகிறார்கள்."

படத்தின் காப்புரிமை Getty Images

சமகால தலித் அரசியல் எந்த பாதையில் செல்கிறது?

"கடந்த பல ஆண்டுகளாக, தலித் அரசியல் பல துண்டுகளாக சிதறி, சித்தாந்த திசைவழி தெரியாமல் திக்கற்று நின்றது. இந்த புதிய தலைமுறை தலித்துகள் தெளிவாக இருக்கிறார்கள். பெரும் புரிதல் அவர்களிடம் இருக்கிறது. நில உரிமை, கல்வி உரிமை, மரியாதையான வாழ்வுக்காக போராடுகிறார்கள். சர்வதேச பார்வை அவர்களிடம் இருக்கிறது. சாதி அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற விஷயத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள். இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான சிறு அமைப்புகள் இதற்காக வீரியமாக செயலாற்றி வருகிறார்கள். இது பெரும் நம்பிக்கை அளிக்கிறது."

'தேச துரோகி', 'மாவோயிஸ்ட்' போன்ற பதங்கள் எவ்வாறாக இப்போது பயன்படுத்தப்படுவதாக நினைக்கிறீர்கள்?

"கொள்கை ரீதியாக அரசுடன் முரண்படுவர்களை குறிக்க தேச துரோகிகள், மாவோயிஸ்டுகள் போன்ற சிக்கலான பதங்களை பயன்படுத்துகிறார்கள். இதற்கு, மேலாக 'நகர மாவோயிஸ்டுகள்' (Urban Maoist) என்ற புதிய பதத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அரசுடன் தோழமை பாராட்டாத, கேள்வி கேட்கும் செயற்பாட்டாளர்களை, சிந்தனையாளர்களை இந்த வார்த்தையின் கீழ் கொண்டு வந்துவிடுகிறார்கள்."

பிற செய்திகள்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பதக்கம் வென்று தந்த 'வூசூ': தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்