கருணாநிதி புகழஞ்சலி கூட்டம்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திமுகவின் முயற்சியா?

  • 31 ஆகஸ்ட் 2018

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அகில இந்தியத் தலைவர்களை அழைத்து தி.மு.க. நடத்தி முடித்திருக்கும் புகழஞ்சலிக் கூட்டம், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மீதான பிற கட்சிகளின் எதிர்பார்ப்பையும் கட்சி செல்லவேண்டிய திசையையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தும் கூட்டங்களை அக்கட்சி மாநிலத்தின் பல பகுதிகளிலும் நடத்தியது. அதன் உச்ச கட்டமாக சென்னையில் தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற பெயரில் பிற மாநில தலைவர்களையும் தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் அழைத்து வியாழக்கிழமையன்று சென்னையில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தியது தி.மு.க.

முன்னதாக இந்தக் கூட்டத்திற்கு பா.ஜ.க. தலைவர் அமித் ஷா அழைக்கப்பட்டது கட்சித் தொண்டர்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் வராமல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த விழாவுக்கு வருகைதந்தார்.

சென்னையின் பிரதானமான பகுதியில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மிகப் பிரம்மாண்டமான அளவில் செய்திருந்தது தி.மு.க. தொண்டர்கள் உட்காரும் இடம் அனைத்தும் தகரம் வேயப்பட்டு, நாற்காலிகள் போட்டப்பட்டிருந்தன. மேலும் கூட்டத்திற்கு வரும் எல்லோரும் தலைவர்களை நெருக்கத்தில் பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மிகப் பெரிய திரைகள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

பா.ஜ.க. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில், தெலுங்கு தேசம், தேசிய மாநாடு, திருணமூல் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ் என பா.ஜ.கவுக்கு எதிரான நிலைப்பாடுள்ள கட்சிகளும் தேசிய அளவிலான தலைவர்களை அனுப்பியிருந்ததால் மிகுந்த முக்கியத்துவமுள்ள கூட்டமாக இந்தக் கூட்டம் பார்க்கப்பட்டது. இதற்கு முன்பாக முரசொலி பவளவிழாவின்போது ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களை அழைத்து பிரம்மாண்டமான கூட்டத்தை தி.மு.க. நடத்தியிருந்தது.

ஆனால், அந்தத் தருணத்தில் மு. கருணாநிதி உயிரோடு இருந்தார். மேலும் அந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்கவில்லை. அப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த ஒரு கூட்டமாக அந்தக் கூட்டம் பார்க்கப்பட்டது.

வியாழக்கிழமையன்று நடந்த இந்தக் கூட்டதில் முதலில் தெலுங்குதேசம், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எச்.டி. தேவேகவுடா ஆகியோர் கருணாநிதி குறித்த புகழஞ்சலிகளைச் செலுத்தி பிறகு, பா.ஜ.கவின் நிதின் கட்கரி பேசினார். அமித் ஷா விழாவில் பங்கேற்காத நிலையில், நிதின் கட்கரி என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு வெகுவாகவே இருந்தது.

பாரதீய ஜனதாக் கட்சியும் தி.மு.கவும் இணைந்து செயல்பட்ட தருணங்களை நினைவுகூர்ந்த நிதின் கட்கரி, திருக்குறள் மீது இரு கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான பார்வை இருக்கிறது என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் அரசு அறிவித்த நெருக்கடி நிலைகாலத்தில் கருணாநிதி எப்படி ஒரே எதிர்க்குரலாக செயல்பட்டார் என்றும் நினைவுகூர்ந்தார்.

இதற்குப் பிறகு பேசிய தலைவர்களில் மிகவும் கவனிக்க வைத்தவர் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டெரிக் ஓ பிரையன். தனது உரை முழுவதையும் எழுதிவைத்து தமிழில் படித்தார் அவர். இதற்கு கூட்டத்தினரிடம் பெரும் வரவேற்பு இருந்தது. நிதின் கட்கரி மேடையில் இருக்கும்போதே பாரதீய ஜனதாக் கட்சியைக் கடுமையாக தாக்கிப் பேசினார் அவர். "கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் கட்சிகள் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து பா.ஜ.கவின் ஆட்சிக்கு முடிவுகட்டி தில்லி நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டவர், பா.ஜ.கவுக்கு எதிராக மேடையில் இருப்பவர் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டுமென்றும் கூறினார்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது பிராந்திய அடையாளத்தை வலியுறுத்துவதே கருணாநிதிக்குச் செய்யும் முக்கியமான அஞ்சலியாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார். தனது பேச்சை முடிக்கும்போது ஜெயலலிதா பாணியில் "நான் ரெடி, நீங்க ரெடியா?" என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேள்வியெழுப்பவும் செய்தார்.

ஆவேசமாக பேசிய ஃபரூக் அப்துல்லா

இதற்குப் பிறகு பேசவந்த சி.பி.எம்மின் சீத்தாரம் எச்சூரி, தனக்கு சிறிதளவு தமிழ் பேசத் தெரியுமென்றாலும் தேசியத் தலைவர்களுக்குப் புரிய வேண்டுமென்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாகப் பேசிய டெரிக் ஓ. பிரையனின் பிராந்திய அடையாளம் குறித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் தேசிய அடையாளத்தை வலியுறுத்தியவர், பா.ஜ.கவை கடுமையாகச் சாடினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர்களிலேயே மிக ஆவேசமாகப் பேசியவர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஃபரூக் அப்துல்லாதான். "இன்றைக்குள்ள கொடுங்கோல் ஆட்சி ஒரு நாள் அகற்றப்படும். ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் இறந்தபோது நாட்டு மக்கள் நிம்மதி அடைந்தார்கள். அந்த நிம்மதியை மக்களிடத்தில் கொண்டுவர வேண்டுமென்றால் தீவிரமாக உழைக்க வேண்டும். கொடுங்கோலர்கள் கையில் உள்ள பாஸிச ஆட்சியை அகற்றுவோம்" என்று குறிப்பிட்டார்.

பிற தலைவர்கள் பா.ஜ.கவுக்கு எதிரான தேசிய அளவிலான கூட்டணி குறித்துப் பேசியபோதும் பெரும் உற்சாகம் தெரிவித்தார் ஃபரூக் அப்துல்லா. ஆனால், நிதின் கட்கரி தான் பேசி முடித்த உடனேயே புறப்பட்டுவிட்டார்.

இந்தக் கூட்டத்தில் இறுதியாகப் பேசிய குலாம் நபி ஆசாத், மற்ற தலைவர்களைவிட அதிக நேரம் பேசினார். பலரும் காங்கிரஸ் கொண்டுவந்த நெருக்கடி நிலையை கருணாநிதி எதிர்த்தது பற்றிக் குறிப்பிட்ட நிலையில், "நெருக்கடி நிலையை கொண்டுவந்ததற்கு இந்திரா காந்தியே வருந்தினார்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் நிதின் கட்கரி கலந்துகொண்டிருந்ததால் மாநிலத் தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் ஆகியோரும் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

நிதின் கட்கரி தவிர்த்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எல்லாத் தலைவர்களுமே மதச்சார்பின்மைக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு கருணாநிதி ஆற்றிய பங்கைக் குறிப்பிட்டு, அந்த பணியை மு.க. ஸ்டாலினும் தொடர வேண்டுமென வலியுறுத்தினர். பா.ஜ.கவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்குவதில் தி.மு.க. முக்கியப் பங்கை வகிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இரு நாட்களுக்கு முன்பாக, தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட பின் பேசிய மு.க. ஸ்டாலின், நாட்டுக்கு காவி வண்ணம் பூச நினைக்கும் மோடி அரசை வீழ்த்துவோம் என்று குறிப்பிட்டதே,வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி இருக்காது என்பதை உறுதிப்படுத்தியது. தேசிய அளவில் தி.மு.கவின் நீண்டகாலக் கூட்டாளியான காங்கிரசிற்கும் ஆசுவாசமளித்தது. கருணாநிதி அஞ்சலி விழாவுக்கு அமித் ஷாவை அழைத்ததால் தொண்டர்களுக்கு ஏற்பட்டிருந்த மனக்குறையையும் நீக்கியது.

மேற்குவங்கத்தில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் திருணமூல் காங்கிரஸ் கட்சி - சி.பி.எம், ஆந்திராவில் எதிர்க் கட்சிகளாக இருக்கும் தெலுங்கு தேசம் - காங்கிரஸ், தில்லியில் எதிரும் புதிருமாக இருக்கும் ஆம் ஆத்மி - காங்கிரஸ் என தேசிய அளவில் எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகளின் தலைவர்களை இம்மாதிரி ஒரே மேடையில் கொண்டுவந்து நிறுத்தியது, மு.க. ஸ்டாலினின் ஒருங்கிணைக்கும் பண்பைக் காட்டுவதாகவும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"உண்மையில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாநிலக் கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்கிற மம்தாவின் கருத்தையே டெரிக் ஓ பிரையன் முன்மொழிந்து பேசினார். "திமுக நாற்பதில் வென்றால்,திரிணாமுல் 42 இல் வென்றால்..." என்று அவர் ஆசைப்பட்டார். இப்போது எல்லோருக்கும் முன்புள்ள ஒரே வாய்ப்பு காங்கிரஸ் + இடதுகள் + மாநிலக்கட்சிகள் என்கிற கூட்டணிதான். இன்று ஃபரூக் அப்துல்லா பேசிய பேச்சும் சீதாராம் யெச்சூரி பேசிய பேச்சும்கூட மிக முக்கியமானவை. சொல்லப்போனால் டெரிக், ஃபரூக், சீதாராம் மூவருமே பழைய திமுக அரசியலைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் பேசினார்கள்" என்கிறார் அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான ஆழி செந்தில்நாதன்.

இந்தக் கூட்டம் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடத்தப்பட்ட ஒன்றாக இருந்தாலும் பா.ஜ.கவுக்கு எதிராக தேசிய அளவிலான கட்சிகள் அணி திரள தயாராக இருப்பதையும் அதில் தி.மு.க. முக்கியப் பங்கை வகிக்க முடியும் என்று சுட்டிக்காட்டுவதாகவுமே இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்