பெரியாரும், அம்பேத்கரும் ஆண்களுக்கு மட்டும்தானா? #beingme
பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் இரண்டாம் கட்டுரை இது.

பட மூலாதாரம், Getty Images
நம் தமிழ் சமூகம் முற்போக்கான சமூகம் என்று சொல்லும்போது பெருமை கொள்ளும் நாம், அதிலிருந்து ஒரு பெண் முற்போக்கு சிந்தனையுடன் இருந்தால் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை.
காலம்காலமாக பெண்களை அடிமைப்படுத்தும் பழக்க வழக்கங்களை எதிர்த்து நின்றாலோ, ஆணுக்கு பெண் அனைத்து வகையிலும் சமம் என்று சொன்னாலோ ஏன் தனக்கு பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலோ கூட அவர்கள் இந்த சமூகத்தில் இருந்து தள்ளி வைத்தே பார்க்கப்படுகிறார்கள்.
கதைகளிலும், கவிதைகளிலும் முற்போக்கு பெண் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு பாராட்டுபவர்கள் எல்லாம் நிஜத்தில் அதை தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.
பத்திரிகைத்துறையில் பணிபுரியும் ஒரு முற்போக்கு சிந்தனையுடைய பெண் நான். பொதுவாக சாதாரண பெண்களை விட முற்போக்கு கொள்கைகளை பின்பற்றுகிற பெண்களிடம் பத்திரிகை துறை நிறையவே எதிர்பார்க்கிறது.
திறமையாக இருந்தாலும் சரி, சமூக பொறுப்பாக இருந்தாலும் சரி. அதற்கு காரணம் அவர்களுக்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கும்; ஒரு விஷயத்தை அப்படியே நம்பாமல் அதனை பகுத்து பார்ப்பார்கள், சாதாரணப் பெண்களை விட வித்தியாசமான கோணங்களில் சிந்திப்பார்கள் என்ற எண்ணம் பத்திரிகைத்துறையில் இருக்கும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல; அத்தகைய கொள்கைகளில் இல்லாதவர்களுக்கு கூட இருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
சித்தரிப்புப் படம்
முற்போக்கு பேசுகின்ற பெண்கள் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் என அனைத்தையும் முழுமையாக கரைத்துக் குடித்தவர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எல்லோருமே தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்தபடிதான் வளர்ந்திருப்பார்கள்.. பழமையை கேள்வி கேட்காமலேயே ஏற்றுக் கொண்டிருப்பார்கள். முற்போக்கு கருத்துகளை உள்வாங்கும்போது ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வந்த அறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தன்னை தானே செதுக்கி கொண்டிருப்பார்கள். அன்றாட வாழ்வில் அனிச்சை செயலாக மாறிவிட்ட விஷயங்களை கூட இது தேவையா? இல்லையா என மறு ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள்.
முந்தைய கட்டுரை:கறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை? #BeingMe
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நொடிதோறும் கற்றுக்கொண்டிருப்பார்கள். இத்தகைய சமயத்தில், அறியாமையின் காரணமாக கொண்ட கொள்கைக்கு எதிரான ஒரு முடிவை எடுத்துவிட்டால் அல்லது ஒரு செயலை செய்துவிட்டால் அது நகைப்புக்குரிய, நம்பிக்கையின்மைக்குரிய விஷயமாக மற்றவர்களால் பார்க்கப்படும்.
"முற்போக்கு கொள்கை நோக்கி நடை போட்டு கொண்டிருக்கிறார்கள், போக போக சரியாகிவிடுவார்கள்" என்ற எண்ணம், தெளிவுள்ள கொள்கையாளர்களுக்கு இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு அந்த தெளிவு இருக்காது. சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி, கொள்கையை பின்பற்ற தகுதி இல்லாதவர் என்பது போல பின்நோக்கி இழுப்பார்கள்.
போராட்டங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டியவர்கள்?
முற்போக்கு கொள்கைகளை முன்னெடுப்பதால் பல விஷயங்கள் சாதகமாக இருந்தாலும், ஒரு சில பிரச்சனைகளையும் பல சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தை பொறுத்தவரையில், முக்கிய பொறுப்பில் பணியாற்றும் நபர்களை பொறுத்து, பிரச்சனைகளின் அளவு பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கலாம். குறைந்தபட்ச ஜனநாயகம் கொண்டவர்களாக உயர் அதிகாரிகள் இருந்தால்கூட முற்போக்கு பெண்களுக்கான அடையாளம் மதிக்கப்படும். குறைந்தபட்ச ஜனநாயகம் இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டால் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
தொடங்கும்போதே நம்மை பற்றிய தவறான முன்கணிப்பை வடிவமைத்துக் கொள்வார்கள். சண்டைக்காரி இவர்களுக்கு பேனா முனை சரியாக இருக்காது, இவர்கள் போராட்டங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டியவர்கள் என்ற மேம்போக்கான கருத்துகளுக்குள் சென்று நம்மை எப்போதுமே நம்பிக்கையற்ற கண்களில் பார்ப்பார்கள். அப்படியான இடங்களில் முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படாது; உரிய அங்கீகாரம் கிடைக்காது. நம் ஒவ்வொரு எழுத்தின்மீதும் சந்தேகப்படுவார்கள். இத்தகைய இடங்களை தவிர்ப்பது நலம். அப்படியே தவிர்க்க முடியாமல் அத்தகைய இடங்களில் வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டால் சிக்கல்களை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்க வேண்டும்.
முற்போக்கு பேசும் பெண்களின் எழுத்து மட்டுமல்ல உடை, நடை, பாவனை, செயல்பாடு என அத்தனையும் உற்று பார்க்கப்படும். ஏன் அதை செய்கிறாய்? இதை செய்கிறாய் என்ற கேள்விகள் சீரியசாகவும், நகைச்சுவையாகவும் வந்து நம்மை பதம் பார்க்கும்..
முற்போக்கு சிந்தனையை ஏற்றுக் கொள்கிறதா இந்த சமூகம்?
இது என்னுடைய சொந்த அனுபவம்.. ஒருமுறை இரவு 10 மணிக்கு மேல் சாலையில் சென்று கொண்டிருந்த போது, சிக்னல் போட்டிருந்த நேரத்தில் யாருமற்ற இடத்தில் என்னை வழிமறித்த ஒருவன் துப்பட்டாவை பிடுங்கி கொண்டு, சில சேட்டைகளை செய்து என்னை அவமானப்பட வைத்தான்.. (இந்த சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அப்போது என்னை அழ வைத்த, அவமானப்படுத்திய அந்த சம்பவம் இப்போது நடந்தால் என்னுடைய நடவடிக்கை வேறாக இருந்திருக்கும், ஏனென்றால் எதற்கு அவமானப்பட வேண்டும்? எதற்கு அவமானப்படக்கூடாது என்பதை 2 ஆண்டுகளில் தான் நான் கற்றிருக்கிறேன்.)
முதல் நாள் பாதிப்பில் இருந்து மீளாமல் மறுநாள் அலுவலகத்திற்கு சென்ற நான், மதிய பணிக்கு சீக்கிரம் வந்துவிட்டு இரவு 9 மணிக்கு கிளம்பிவிடுகிறேன் என்று உயர் அதிகாரியிடம் கூறினேன்.. அவருக்கும் எனக்கும் ஏற்கெனவே கொஞ்சம் கருத்து வேறுபாடு இருந்த நிலையில், என் கோரிக்கைக்கு அவர் பதில் சொல்லவில்லை. நான் அந்த இடத்தில் இருந்து சென்றதும்,”இதுகிட்டவெல்லாம் யாராவது வம்பிற்கு வருவார்களா? சீக்கிரம் வீட்டிற்கு போக வேண்டுமென்பதற்காக ஏமாற்றுகிறாள்'' என்று கூறியுள்ளார். முதல்நாள் சந்தித்த அவமானத்தை விட, மறுநாள் உயர் அதிகாரியாய் இருந்தவர் நடந்து கொண்ட விதம் என்னை எரிச்சலடைய வைத்தது.
தன்னை விட பெண் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் குறைந்தவள் என்ற எண்ணம் இந்த சமூகத்தில் பெரும்பான்மையான ஆண்களுக்கு உண்டு. பத்திரிகை மற்றும் மீடியாத்துறையும்கூட அதற்கு விதிவிலக்கல்ல. முற்போக்கு பேசும் பெண் எப்போது சறுக்கி விழுவாள் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்கள். நேராக வாக்குவாதம் செய்து வீழ்த்த நினைப்பது ஒரு வகை என்றால், நம் முன் சிரித்து பேசிவிட்டு, பின்புறம் திமிர் பிடித்தவள் இப்படித்தான் வேண்டுமென்று சிரித்து மகிழும் நபர்களோடு தான் நாம் தினமும் நடைபோட வேண்டும்…
முற்போக்கு பேசும் பெண்களை கண்டால் பெரும்பான்மையான ஆண்களுக்கு பிடிப்பது இல்லை.. நீயும், நானும் சமம் என்றாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள்..
சமூகத்தில் ஆணும், பெண்ணும் சமமாக பார்க்கப்பட்டிருந்தால், மதிக்கப்பட்டிருந்தால் பெண்களை பொருளாக பார்க்காமல், சக மனுஷியாக பார்த்திருப்பார்கள். ஆனால் துர்வாய்ப்பாக சிறு வயது முதலே பெண்ணை சமமாக மதிக்கும் போக்கை இந்த சமூகம் கற்றுக் கொடுப்பதில்லை.
இத்தகையவர்களை சந்திக்கும்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நமக்கு உறுத்தும் விஷயத்தை, அவர் சரியென நினைத்துக்கொண்டிருக்கும் விஷயத்தை தவறு என போட்டுடைக்க வேண்டும். ஒருவேளை அந்த இடத்தில் நாம் அமைதியாக இருந்துவிட்டால், அவர் செய்யும் தவறு சரியாகிவிடும், எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருந்தால் நாம் அதற்கு உடந்தை என்றாகிவிடும்.
குடும்பங்களின் ஆதரவு கிடைக்கிறதா?
முற்போக்கு பேசுகின்ற பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது.... குடும்பங்களும், உறவுகளும், சுற்றியிருக்கிற மக்களும் சேர்ந்து தான் சமூகமாகிறார்கள்.. எனவே வழக்கம்போல குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையே சமூகத்திலும் கிடைக்கும்.. அலுவலகத்தில், பொது வெளியில் சந்திக்கும் சவால்களுக்கு இணையாக குடும்பத்திலும் முற்போக்கு சிந்தனையுடைய பெண்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும்.
பட மூலாதாரம், Getty Images
ஆம் குடும்பம்... முற்போக்கு பெண்களை பின்னுக்கு இழுக்கும் விஷயமாகத்தான் இன்றளவும் உள்ளது. ஓரளவு முற்போக்கு கொள்கைகளை கொண்ட குடும்பங்களில் இருந்து வரும் பெண்கள் சமாளித்துவிட முடியும். அவர்களுக்கு குடும்பங்களில் பெரிய தடைகள் இருக்காது.. தடைகள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிக்காது. ஆனால் எந்தவித கருத்தியலும் இல்லாத சாதாரண குடும்பங்களில் இருந்து வரும் பெண்கள் மிகப்பெரிய சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அத்தகைய குடும்பங்களில் இருந்து பெண்கள் முற்போக்கு நோக்கி வெளியே வருவதே குதிரைக்கொம்பு. அப்படியும் வெளிவந்துவிட்டால் அவளை இயங்கவிடாமல் தடுக்க ஆயிரக்கணக்கான விஷயங்கள் முளைக்கும். ஒவ்வொரு நாளையும் நகர்த்துவதே மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
முற்போக்கு பேசும் பெண்கள் வாழ்க்கையில் எத்தனை உயரத்திற்கு போனாலும் திமிர்பிடித்தவள்.. அடங்காதவள் என்ற பெயரே பெரும்பாலான நேரங்களில் மிஞ்சுகிறது. முற்போக்கு பெண்களோடு வாழும் பக்குவம் முற்போக்கு பேசும் ஆண்களுக்கு கூட அத்தனை சீக்கிரம் வந்து விடுவதில்லை…
திருமணம்…. முற்போக்கு பெண்களுக்கு சவாலான மற்றொரு விஷயம். திருமணம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் அவசியமான ஒன்று என்றே இந்த சமூகம் கட்டமைத்திருக்கிறது. பழமையான வழிகாட்டுதலில் 20 ஆண்டுகளுக்கு மேல் வளரும் பெண்கள், முற்போக்கு கருத்துகளால் ஈர்க்கப்பட்டாலும் கூட அவர்களால் திருமணத்தை ஒதுக்கி வைக்க முடியாது. தனது கொள்கைக்கு ஏற்ற ஒருவரை தேடி குடும்பத்தாரிடம் அனுமதி பெற்று வாழ்க்கை அமையும் என்பதெல்லாம் கனவில் நடப்பது போன்றவையே.
பெண்ணுக்கு முற்போக்கான துணைவர் தேவையென நினைத்தால் அவரது குடும்பத்தினருக்கோ சாதி, மதம், அந்தஸ்து போன்றவை இணையாக இருக்க வேண்டும். ஏதோ ஒருகட்டத்தில் வீட்டில் காட்டும் நபரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நரகம் தான்… முற்போக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சாதாரண வாழ்க்கையை தொடர வேண்டியது தான்.
முற்போக்கு பேசும் பெண்களின் மிகப்பெரிய ஆறுதல் வீட்டில், வேலையில், குடும்பத்தில் என எந்த இடத்தில் சிக்கல் என்றாலும் ஆறுதல் படுத்திக்கொள்ள நண்பர்கள் இருப்பார்கள்.
நண்பராக இருக்கும் நபர் முற்போக்கு கொள்கை கொண்டவராக இருந்தாலும், அவ்வாறு இல்லாவிட்டாலும் கூட ஆறுதல் தருபவராக இருப்பர். நம் மீது அக்கறை கொள்வர்… நம்மோடு நட்பு கொள்வதை பெருமையாக உணர்பவர்கள் நட்பை தொடர்வார்கள்… அவ்வாறு இல்லாதவர்கள் நம்மை விட்டு ஒதுங்கியே இருப்பார்கள்…
மொத்தத்தில் குடும்பத்தில், பணியில், சமூகத்தில் என எந்த இடமாக இருந்தாலும், முற்போக்கு பேசும் பெண்கள் ஒவ்வொரு நாளும் தன்னை செதுக்குபவர்களாகவும், தன்னை சுற்றியிருப்பவர்களை செதுக்குபவர்களாகவும் வலம் வருவார்கள்…
(தனியார் ஊடகம் ஒன்றில் பணியில் இருக்கும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் அனுபவங்களின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும் இந்த #beingme தொடர் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது.)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்