கணக்கில் வராத பெண்களின் மரணங்கள்: விவசாயத் துயரம்

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

இந்தியாவில் பெரும்பாலான பெண் விவசாயிகளின் தற்கொலைகள் விவசாயத் தற்கொலையாக பதிவு செய்யப்படுவதில்லை, விவசாயத் தொழிலில் முழுமையாக பெண்கள் ஈடுபட்டாலும், அரசு ஆவணங்களில் விவசாயிகளாக அவர்கள் முன்னிறுத்தப்படுவதில்லை என பத்திரிக்கையாளர் சாய்நாத் தெரிவித்துள்ளார். 

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் யுனைட் (தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களின் சங்கம்) நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சாய்நாத், விவசாயத் தொழிலில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு இருந்தாலும், விவாசயத்தில் ஏற்படும் நஷ்டம், கடன் காரணமாக அவர்கள் இறந்தால், அவர்களின் இறப்பு பெண்களின் தற்கொலை என்ற தலைப்பில் பதிவாகின்றன என்றும் பல நேரங்களில் பெண்களின் பெயரில் நிலம் இல்லாததால், அவர்கள் விவசாயிகள் என்றே பதிவு செய்யப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். 

80 சதவீதம் அவர்களே

"விவாசய வேலைகளில் சுமார் எண்பது சதவீத பணிகளைப் பெண்கள் மேற்கொள்கிறார்கள். நாற்று நடப்படுவதில் இருந்து பயிர்கள் விளைந்து, அறுவடை செய்வது வரை பெண்களின் உழைப்பு கணிசமானது. வீட்டு வேலைகளை செய்துவிட்டு, விவசாய வேலைகளை செய்யும் பெண்கள் பலரும் விவசாயிகள் என்று அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆண்கள் இடம்பெயர்ந்து வேலைதேடி நகரங்களுக்குச் சென்றுவிட்டால், முழு சுமையும் பெண்கள் சுமக்கவேண்டியுள்ளது,'' என்று கூறினார். 

18 ஆண்டுகாலமாக விவசாயம் மற்றும் கிராமப்பொருளாதாரம் குறித்து எழுதிவரும் பத்திரிகையாளர் சாய்நாத் விவசாயிகளின் மரணங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வருபவர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப் படம்

"ஒரு விவசாயக் குடும்பத்தில் கடன் காரணமாக படிப்பைவிட்டு நிறுத்தப்படும் பெண் குழந்தை இறந்துபோனால், அது விவாசயம் காரணமாக ஏற்பட்ட மரணமாக கருதப்படுவதில்லை. அந்த பெண் குழந்தை விவசாய நிலத்தில் வேலை செய்திருந்தாலும், வறுமை காரணமாக அவள் இறந்துபோய்விட்டால், அந்த குழந்தையின் இழப்பு ஒரு பெண் குழந்தையின் இறப்பாக கணக்கில் கொள்ளப்படும். விவசாயிகளின் மரணம் என்ற கணக்கில் இந்த குழந்தையின் இறப்பு பதிவாகாது. இதுபோல பல நேரங்களில் பெண்கள், பெண் குழந்தைகளின் மரணங்கள் விவசாயிகளின் மரணங்களாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை,'' என்று அவர் கூறினார். 

குடும்பஸ்ரீ அமைப்பு

கேரளாவில் குடும்பஸ்ரீ அமைப்பு மூலம் பெண் விவசாயத் தொழிலாளர்கள் செய்துவரும் சாதனைகளை சுட்டிக்காட்டிய சாய்நாத், ''கேரளாவில் குடும்பஸ்ரீ அமைப்பின் கீழ் சுமார் 70,000 பெண் விவசாயக் குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களில் பெண்கள் இணைந்து விவசாயம் செய்கிறார்கள். உற்பத்தியின் முடிவில், குழுவில் உள்ள பெண்கள் தங்களது தேவைக்கு போக மீதமுள்ள தானியங்களை விற்பனைக்கு கொண்டுவருகிறார்கள். இதன்மூலம் ஒவ்வொருவரும் தங்களின் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள். தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு சுமார் ஏழு கோடி ரூபாயை அவர்கள் நிவாரண நிதியாக அளித்துள்ளார்கள் என்பதில் இருந்து அவர்களின் உழைப்பை அறிந்துகொள்ளலாம்,'' என்கிறார். 

வரிச்சலுகை பெருநிறுவனங்களுக்கு தேவையா? 

பட மூலாதாரம், Getty Images

பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பதோடு, இந்திய அரசாங்கம் அவர்களுக்கு நிலம் மற்றும் நீர் ஆதாரங்களை இலவசமாகவும், சிலருக்கு மிகவும் குறைவான கட்டணத்தோடும் பயன்படுத்த அனுமதிக்கிறது என்று கூறிய சாய்நாத், ''விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய யோசிக்கும் அரசு, பணக்கார தொழிலதிபர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் செலுத்தவேண்டிய வரி மற்றும் கடனை செலுத்தாமல் போனால் அவற்றை தள்ளுபடி செய்ய துளியும் யோசிப்பதில்லை. விவசாயத் தொழிலில் ஈடுபடும் ஒரு குடும்பம், தங்களைப் பாதுகாப்பதோடு, அந்த குடும்பத்தால் சமூகத்திற்கு உணவை கொடுக்கிறது. ஆனால், பெருநிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆட்களை எடுத்து, குறுகிய காலத்தில் அவர்களை பயன்படுத்தி லாபத்தை சம்பாதித்துக்கொண்டு, அந்த தொழிலாளியை பணியில் இருந்து நீக்கிவிட்டு, அவனை கடனாளியாகிவிடுகிறது. யாருக்கு வரிச்சலுகை தேவை, யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை நாம் சிந்திக்கவேண்டும்,'' என்று கூறினார். 

மேலும் அவர், "உலகளவில் வளர்ந்த நாடுகளில் கூட விவசாயிகளுக்கு மானியங்கள் அளிக்கப்படும் நிலையில், இந்தியா போன்ற நாடுகளில் மானியம், கடன் தள்ளுபடி அளிக்கப்படுவதில் என்ன சிக்கல் உள்ளது என்று யோசிக்கவேண்டும். பெருநிறுவனங்களை விட அதிக எண்ணிக்கையில் விவசாயத்துறை வேலைவாய்ப்பை அளிக்கிறது, உணவு பாதுகாப்பை கொடுக்கிறது என்கிறபோது, விவாசயத்துறைக்கு தானே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்?,'' என்று கேள்வி எழுப்புகிறார் சாய்நாத். 

டெல்லியில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள விவசாயிகளின் பேரணி தொடர்பாக பேசிய அவர், "தற்போது இந்தியாவில் விவாசயத்துறை நெருக்கடியான சமயத்தை சந்தித்து வருகிறது. விவசாயத்தில் உள்ள சிக்கல்கள், உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய விவசாயிகளின் பிரச்சனைகளை நாடாளுமன்றம் விவாதிக்கவேண்டும் என அகில இந்திய விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தி நவம்பர் மாதம் டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் ஒவ்வொருவரும் விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்,'' என்றும் அவர் தெரிவித்தார். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :