கறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை? #beingme
பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் முதல் கட்டுரை இது.

பட மூலாதாரம், Getty Images
தமிழ் சமூகத்தில், பல சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட நிறம் கறுப்பு. ஆனால் மனிதர்கள் கறுப்பாக இருந்தால்? அதுவும் பெண் என்றால்? பார்த்த நொடியில் உங்கள் தகுதி, குணம் என்று எதையும் யோசிக்காமல் உங்கள் நிறத்தை கொண்டு எடைபோட்டு ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள்.
நம்மில் பலரும் இதனை பிறர் கூற கேட்டு இருப்போம் "பொண்ணு கறுப்பா இருந்தாலும் கலையாக இருக்கா" என்று. எனக்கு எப்போதும் இது புரிந்ததே இல்லை. இந்த வாக்கியத்தை கூறுபவர்கள் அந்த பெண் அழகாக இருப்பதாக குறிப்பிடுகிறார்களா? அல்லது அந்த பெண் அழகாக இருந்த போதிலும் அவள் கறுப்பு நிறத்தில் உள்ளதால் அதனை ஒரு குறையாக அவர்கள் குறிப்பிடுகிறார்களா? அவ்வாறு அவளது குறையை சுட்டிக் காட்டுகிறார்கள் என்றால் அவளது நிறம் எந்த வகையில் ஒரு குறையாகும்? என்பன போன்ற கேள்விகள் என் மனதில் எப்போதும் ஒடிக்கொண்டிருக்கும். நானும் கறுப்பு நிறத்தில் உள்ள ஒரு பெண் தானே. என்னையும் இப்படித்தான் கூறுவார்களோ? என்று பல நேரங்களில் எண்ணியது உண்டு.
இப்போது பெண்ணியம் பேசும் அனைவரும் பெண்ணின் பெருமைகள் குறித்து போதனை செய்கின்றனர். ஆணுக்கு பெண் சமம் என்று கூறும் அவர்கள் பெண்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா? என்ற கருத்து குறித்து சிந்திப்பது இல்லையோ என தோன்றுகிறது.

என்னை போன்ற ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு பெண்ணியம் குறித்து நினைக்க நேரம் இல்லை. உலகில் நடக்கும் அநீதிகள் குறித்து எனக்கு கவலை இருந்தாலும் நான் சற்று சிகப்பாக இருந்திருந்தால் எனது திருமணம் குறித்து என் தாய் கவலைப்பட்டிருக்க மாட்டார் என்பதே எனது பெரிய கவலையாக இருக்கும்.
'வெள்ளையாக இருந்து வேறு குறை இருந்தால் பரவாயில்லையா?'
கறுப்பு நிறத்தில் இருப்பது ஒன்றும் குற்றம் இல்லையே என்று எண்ணலாம். ஆனால் நான் பிறந்து வளர்ந்த இந்த நாட்டில் பெண்கள் கறுப்பு நிறத்தில் இருப்பதும் ஒரு வகையான ஊனம் தான். ஒரு பெண் பிறந்த நாளிலிருந்து அவளது நிறம் மூலமாகவே அடையாளம் காணப்படுகிறாள்.
எனது உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியான நிகழ்வில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அந்தப் பெண் குழந்தை மிகவும் அழகான கண்களுடன் என்னைப் பார்த்தது.
அப்போது நான் புன்னகையுடன் அந்த குழந்தையின் பாட்டியிடம் சென்று "பெண் குழந்தை மிகவும் அழகாக உள்ளது, வாழ்த்துக்கள்" என்றேன்.
உடனே அந்த குழந்தையின் பாட்டி, "அட போ மா, குழந்தை இப்பவே இவ்வளவு கறுப்பா இருக்கு, வளர வளர ரொம்ப கறுப்பா ஆக போறா, இவள எப்படி கட்டிக் கொடுக்க போறோமோ?" என்று கூற நான் வெறுப்பில் திகைத்து போனேன்.
மனம் பொறுக்காமல் அந்த பாட்டியிடம் "அம்மா, குழந்தை நல்ல சிகப்பா இருந்து கண் தெரியாமல் இருந்தாலோ இல்ல காது கேக்காம இருந்தாலோ இல்ல வேற ஏதாவது குறை இருந்தாலோ பரவாயில்லையா" என்று கேட்டேன். அதற்கு அவர் வாயடைத்து போய் அங்கிருந்து சென்று விட்டார்.

"என்ன ஏம்மா கறுப்பா பெத்த?" என்று பல குழந்தைகள் தங்கள் அம்மாக்களிடம் கேட்பதுண்டு. இந்த கேள்விக்கு பின்னால் உள்ள வலியும் வேதனையும் அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது. தானும் பிறரைப்போல்தான் என்ற உணர்வுடன் இந்த சமூகத்திற்குள் நுழையும் ஒரு குழந்தை நிறத்தால் அடையாளம் காணப்படுவது மிகவும் வேதனையான ஒன்று.
கறுப்பு எந்த விதத்தில் தரக்குறைவு?
போதைப் பொருளுக்கு அடிமை ஆவதைப் போல் நிறத்திற்கு அடிமையாகியுள்ள இந்த சமுதாயத்தை எவ்வாறு மாற்றுவது? சமுதாயத்தை விடுங்கள், என் தாயின் எண்ணங்களையே என்னால் மாற்ற முடியவில்லையே.
ஒரு முறை எனது தாயின் தோழியை ஒரு நிகழ்வில் சந்தித்தோம். அப்போது எனது தாயும் அவரது தோழியும் பேசிக்கொண்டிருக்கும் போது நான் அவர்களது மகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் இருவரின் உரையாடல் எனது காதில் விழுந்தது.
என் அம்மாவின் தோழி கேட்டார், "எப்படி இருக்கே. உன் பொண்ணு என்ன பண்றா? அவளுக்கு கல்யாணம் நடந்தாச்சா?" என்று. அப்போது என் தாய் எங்கள் இருவரையும் ஒரு நொடி பார்த்து விட்டு அவரது தோழிக்கு பதில் அளித்தார் "என் பொண்ணு கவர்மென்ட் வேலைல இருக்கா, அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்றார்".
அதற்கு அவரது தோழி "பரவால்லையே, உன் பொண்ணு நல்ல வேலை வாங்கிட்டா, என் பொண்ணு எந்த வேலைக்கும் போகாம வீட்லயே இருக்கா" என்றார். அதற்கு என் தாய் கூறிய பதிலை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
அவர் "உன் மகளுக்கு என்ன, நல்ல சிகப்பா அழகா இருக்கா, அவள கல்யாணம் செய்ய மாப்பிள்ளைகள் கியூவில் நிப்பாங்க, என் மகளை நினைத்தால்தான் கவலையா இருக்கு, அவள் கறுப்பா இருக்கா, அவளை யார் கல்யாணம் பண்ணிப்பாங்கனு தெரியலையே" என்றார்.
எனக்கு மிகவும் அவமானமாகி விட்டது. நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன்.
எத்தனை முறை சிந்தித்தாலும் என் தாயின் தோழியின் மகளை விட எந்த விதத்தில் நான் குறைந்தவள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறிவும் திறமையும் நிறைந்த போதிலும் பெற்றோருக்கு சிரமம் கொடுக்காமல் சம்பாதித்து சொந்தக் காலில் நின்ற போதிலும் நிறத்தை காரணம் காட்டி என்னை மட்டம் தட்டி விட்டார்களே என்ற காயத்துடன் வேதனை கொண்டேன்.
நிறம் ஒரு தகுதியா?
ஆம்! இதுதான் நாம் வாழும் சமுதாயம், சிகப்பாக இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள் என்றும் கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் ஏழைகள் என்றும் நினைக்கும் ஆட்கள் கூட இங்கு உண்டு. வேடிக்கையான மனிதர்கள்.
பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நாடு இந்தியா என கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றனவே. இதற்காக சிகப்பான பெண்களை வைத்துள்ள பெற்றோர் மட்டும்தான் கவலைப்பட வேண்டுமா என்றுதான் எனக்கு தோன்றியது.
புறத்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்த சமூகத்தில் கறுப்பு நிறத்தில் உள்ள ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் அவமானங்களை சந்திக்க வேண்டும். அவள் நன்றாக படித்திருந்தாலும் சரி, நல்ல குணங்கள் இருந்தாலும் சரி, திருமணம் என்று வந்தால் அதுவும் பெரும்பாடுதான்.
ஆனால் இதனால் நான் தளரப்போவதில்லை. நற்குணம் கண்டிப்பாக மதிக்கப்படும். நல்ல பண்புகள் கண்டிப்பாக பாராட்டப்படும். திறமைகள் கண்டிப்பாக கண்டறியப்படும். அழகு அழிந்தாலும் அறிவு அழியாது என்பது உணரப்படும். மனதிற்கும் குணத்திற்கும் வழங்கப்படாத மதிப்பு நிறத்திற்கு வழங்கப்படும் நிலை கண்டிப்பாக மாறும். என்னைப் போன்றவர்களின் தன்னம்பிக்கை இந்த மாற்றத்தை கொண்டு வரும்.
ஹூம்... உங்களுக்கு தெரிந்து இருக்கும். இருந்தாலும் மீண்டும் நினைவூட்டுகிறேன். 'Black Is not a Color to Erase. Its a Race'
(அரசுப் பணியில் இருக்கும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் அனுபவங்களின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும் இந்த #beingme தொடர் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது.)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்