செயற்பாட்டாளர்கள் கைது: என்ன சாதிக்க நினைக்கிறது அரசாங்கம்?
- நந்தினி சுந்தர்
- பேராசிரியர், டெல்லி பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், Getty Images
கோப்புப்படம்
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
சில வருடங்களுக்கு முன்னர், மாவோயிஸ்டுகள் பள்ளியை மூடக்கோரி அளித்த மிரட்டல் கடிதம் அளித்ததாக கூறப்பட்ட சத்தீஸ்கரின் தண்டேவாடா என்ற பகுதியிலுள்ள ஒரு பள்ளியை பார்வையிட்டேன். அந்த கடிதத்தின் இறுதியில் சிவப்பு நிறத்தில் கையெழுத்து இடப்பட்டிருந்ததுடன், அல் சலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதுதொடர்பாக நடந்த விசாரணையில், பள்ளியின் முதல்வர் மீது கோபத்தில் இருந்த ஆசிரியர் ஒருவர் விடுமுறைக்காக இப்படி செய்தது தெரியவந்தது.
இதேபோன்று, 'மாவோயிஸ்டுகள்' எழுதினார்கள் என்று கூறப்படும் கடிதங்கள் நாடு முழுவதும் உலா வருகின்றன. அவற்றில் சில கடிதங்கள் மாவோயிஸ்டுகளாலும், மற்றவை காவல்துறையினராலும், கிராம மக்களாலும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதற்காக எழுதப்படுகின்றன.
மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் கிராமத்தினர் எழுதும் பொய் கடிதங்களை விட காவல்துறையினர் எழுதும் கடிதங்கள் அப்பட்டமாக அவை ஜோடிக்கப்பட்டவை என்பதை வெளிக்காட்டுகின்றன.
சமீபத்தில், மாவோயிஸ்டுகள் எழுதியதாக புனே காவல்துறையினர் வெளியிட்ட கடிதங்களும் 'நகர்ப்புற காவல்துறையினரின்' (Urban Police) கற்பனையான 'நகர்ப்புற நக்சல்கள்' (Urban Naxals) என்பதும் முற்றிலும் ஜோடிக்கப்பட்டதே ஆகும். அந்த கடிதங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை.
உதாரணத்திற்கு, மாவோயிஸ்டுகளால் எழுதப்பட்ட கடிதங்களில் ஒன்றாக கூறப்படும் கடிதங்களில் ஒன்றில், "தோழர் சுதாவால்" "தோழர் பிரகாஷுக்கு" எழுதப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் சிலவற்றில் புனைப்பெயர்களும், சில இடங்களில் நிஜப் பெயர்களும், காஷ்மீர் பிரிவினைவாதிகளை குறிப்பதற்கு "உகர்வாடி" (தீவிரவாதி) என்றும், அடிக்கடி மனித உரிமை மீறல்களை செய்யும் படைகளை "துஷ்மன்" (எதிரி) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனக்கோ அல்லது தனது மகளுக்கோ பணம் தாருங்கள் என்று சுதா பரத்வாஜ் கேட்கவே மாட்டார் என்பது அவரை பற்றி தெரிந்த அனைவருக்கும் பரீட்சயமான ஒன்று. சுதா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளபடி, சட்ட உதவி, உண்மைத் தகவல்கள் மற்றும் கூட்டங்கள் போன்ற முழுமையான சட்டபூர்வமான மற்றும் விரும்பத்தக்க நடவடிக்கைகள் பயங்கரவாதத் திட்டங்களோடு இணைக்கப்பட்டுள்ளன.
ஆனால், காவல்துறையினரின் கூற்றுப்படி, பல மூத்த குடிமக்களை கொண்டு தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. அவசர நிலை பிரகடனம் உள்பட பல இக்கட்டான தருணங்களிலும், வாழ்வின் பெரும்பாலான காலத்தை ஜனநாயக அரசியலில் கழித்தவர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
செயற்பாட்டாளர்கள் வரவர ராவ், கவுதம் நவ்லகா மற்றும் சுதா பரத்வாஜ்
பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவரான மகேஷ் ரவுட் என்பவர்தான் கைதுசெய்யப்பட்டவர்களில் மிகவும் இளையவராவார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புனேவின் பீமா கோரேகானில் கலவரம் வெடிப்பதற்கு முன்னர் கட்சிரோலி பகுதியிலுள்ள ஆதிவாசிகளிடையே வன உரிமை சட்டம் மற்றும் பெசா சட்டத்தை நடைமுறைப்படுவதை பற்றி பெரியளவிலான கூட்டமொன்றை நடத்தும் பணியில் ஈடுபட்டவராவார். ஆனால், காவல்துறையினரின் குழப்பான தர்க்கத்தில் இவர்களின் இந்த செயல்பாடு "நகர்ப்புற நக்சல்" செயல்பாடு என்று குறிப்பிடப்படுகிறது.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மாவோயிஸ்டுகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகளின் செயற்பாட்டை முடக்கிவிட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் தற்போது நாட்டின் பிரதமருக்கே எச்சரிக்கை விடுக்குமளவுக்கு வலிமை பெற்றது எப்படி? கிராமங்களில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடு தோற்கடிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் நகர்ப்புற பகுதிகளில் ஊடுருவதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால், தற்போது நகர்ப்புற நக்சல்கள் என்று கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்ந்து வெளிப்படையான அரசியலில் செயல்பட்டு வந்தவர்களேயாவர்.
கவுதம் நவ்லகா காவலில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பான வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த முதல் விசாரணையின்போது, அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமன் லேகி, முதலில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு, அதில் கண்டறியப்பட்ட விடயங்களை மையமாக கொண்டு அடுத்த ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்ற காவல்துறையினரின் கூற்றை அடிக்கோடிட்டு காட்டினார்.
இதையொட்டி மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த முழு விவகாரத்திலும் ஒரு பெரிய சதி நடந்திருந்தால், அதில் செயல்பாட்டாளர்கள் மட்டுமல்ல, புனே காவல்துறைக்கும், மகாராஷ்டிராவிலும், மத்தியிலும் ஆட்சி செய்யும் பா.ஜ.கவுக்கும் பங்கு உள்ளது. எனவே, இந்த சதித்திட்டத்தின் கூறுகள் அல்லது இந்த கைதுகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை தேடலாம்: ஏன் இப்போது? குறிப்பாக இவர்கள் ஏன்? இதன் மூலம் அரசாங்கம் என்ன சாதிக்க நினைக்கிறது என்பதை காணலாம்.
இந்த சுற்று அடக்குமுறைக்கு முதல் காரணம், கௌரி லங்கேஷ், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, தபோல்கர் போன்ற செயற்பாட்டாளர்களின் கொலைகளில் சனாதன் சன்ஸ்தா அமைப்புக்கு உள்ள பொறுப்பையும், தீவிரவாத செயல்பாடுகளையும் மறக்கடிக்க வைப்பதே ஆகும்.
பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பாஜி பாத், மிலின் ஏக்கோட் ஆகியோரின் ஆதரவாளரான துஷார் டம்குட் என்பவரின் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக வழக்கிலிருந்து மாயா கொட்னனி உள்பட பலர் விடுவிக்கப்பட்டது, இஷ்ரத் ஜஹான் மற்றும் சோஹ்ராபுடி ஆகியோரின் கொலை வழக்கில் அமித் ஷா, வன்சாரா உள்ளிட்ட பலர் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டது உள்ளிட்ட பல விடயங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இதன் மூலம், இந்த அரசாங்கம் தாங்கள் யாரைக்கொண்டு இந்த கலவரங்களையெல்லாம் செய்ததோ அவர்களுக்கு சட்டரீதியாக எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் என்பதையும், அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயற்பாடுகளையும் செய்வதற்கு இசைவளிக்கப்படுவதையும் காட்டுகிறது.

பட மூலாதாரம், FACEBOOK
சுதா பரத்வாஜ்
இரண்டாவது திட்டம், இந்துக்களை ஆதரிக்கும் தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளை மட்டும் விட்டு வைத்துவிட்டு மற்றவர்களை நசுக்குவதாகும். தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளின் ஓட்டுகளை பெறுவதில் பாஜக நம்பிக்கை இழந்து காணப்படுகிறது. எனவே, அவர்களை கவரும் வகையில் தலித்துகளை தலைவர்களாகவும், எஸ்சி/எஸ்டி சட்டங்களை பலமிழக்க செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாற்றுவதன் மூலமும், ராஜா சுஹெல்டேவ் போன்ற தலித் தலைவர்களை போற்றுவதன் மூலமும் செய்து வருகிறது.
நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்காத தலித் என்றால், உத்தரபிரதேசத்தில் சந்திரசேகர் ஆசாத், குஜராத்தின் ஜிக்னேஷ் மேவானி நசுக்கப்பட்டதை போன்று நசுக்கப்படுவீர்கள். ஆதிவாசிகளை கவருவதை பொறுத்தவரை, அந்த பகுதிகளில் பணிசெய்ய அனுமதிக்கப்படும் வன்வாசி கல்யாண் பரிஷத் போன்ற ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்புக்களை கொண்டு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
பாஜக நாட்டுப்பற்று என்று தான் நினைக்கும் அதிதீவிரமான, வன்முறைகள் நிறைந்த நாட்டுப்பற்றை, சாதாரணமாக நாட்டுப்பற்றை கொண்டவர்களுக்கு இந்த கைதுகளின் மூலம் சென்றடைவதாக அரசாங்கம் நம்புவதே மூன்றாவது காரணம்.
தேசிய எதிர்ப்பு, துக்தே-துக்தே கும்பல் மற்றும் நகர்ப்புற நக்சல் போன்ற சொற்களை பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கம் மனித உரிமைகள் சார்ந்த நடவடிக்கைகளை சட்டபூர்வமற்ற ஒன்று என்ற எண்ணத்தை பொதுவெளியில் உருவாக்க விரும்புகிறது. உதாரணமாக, உமர் காலித், கன்ஹையா போன்றவர்களை கொல்லவும், தாக்கவும் முற்பட்டவர்களை ஏதோ தாங்கள் சிறப்பான செயலை செய்வது போன்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்ததை கூறலாம்.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு, மாவோயிஸ்டுகள் ஒரு தவறாக வழிநடத்தப்பட்ட கருத்தியலாளர்கள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கியதன் மூலம் தங்களது நீண்டகால பிரச்சாரத்தில் காவல்துறையினர் வெற்றிகண்டனர். தற்போது நிலவும் சூழ்நிலை தொடரும்பட்சத்தில், அதேபோன்றதொரு நிலை மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் நடக்கும்.
சமீபத்திய தொடர் கைது நடவடிக்கைகள், நக்சலித்ததிற்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் என்ற பெயரில் நடக்கும் படுகொலைகள் மீதமான கவனத்தை திசை திருப்பவும் பயன்படுத்தப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா பகுதியில் கடந்த ஆகஸ்டு 6ஆம் தேதி ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 15 பேர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஏனையவர்களை வெளியேற்றுவதன் மூலம், அரசாங்கமானது சுரங்கம் மற்றும் மற்ற நிறுவனங்கள் நிலங்களை வாங்குவதை எளிதாக்குகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஐந்தாவது காரணம், நரேந்திர மோதி மீது தனிப்பட்ட அனுதாபத்தை பெற வேண்டும். நரேந்திர மோதியின் செல்வாக்கு எப்போதெல்லாம் சரிகிறதோ, அப்போதெல்லாம் அவரை கொல்வதற்கான சதித்திட்டம் நடப்பதை போன்ற பிம்பத்தை உருவாக்கி அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார்கள். காவல்துறையினரும், உள்துறை அமைச்சகமும் தங்கள் கடமையைச் செய்யவில்லை அல்லது அவர்கள் அரை மனதுடன் செயல்படுவதால் அவர்கள் தங்களைத் தாங்களே நம்பமுடியாத ஒரு கதாபாத்திரத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதே இந்த கூறப்பட்ட கதை காட்டுகிறது.
ராணா வில்சன் வீட்டிலிருந்து கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி காவல்துறையினர் தாங்கள் குற்றஞ்சாட்டிய ஆவணத்தை மீட்டனர். ஆனால், ராணாவையும், மற்றவர்களையும் கைதுசெய்வதற்கு ஏன் ஜூன் 6ஆம் தேதி வரை காலம் தாழ்த்தினார்கள்? இந்நிலையில், மோதியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தாமதமாக ஜூன் 11ஆம் தேதிதான் நடைபெற்றது.
காவல்துறையினரும், பாஜக அரசாங்கங்களும் தங்களை தாங்களேயும், நாட்டையும் சங்கடத்துக்கு உள்ளாக்குவதை நிறுத்திவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மனித உரிமை செயற்பாட்டாளர்களும் உடனே விடுவிக்க வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்