எமர்ஜென்சி மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்று அத்வானி சொன்னது ஏன்?
- ராஜேஷ் ஜோஷி
- பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images
'நாட்டில் மீண்டும் எமர்ஜென்சி அமல்படுத்தப்படலாம்' என்று மூன்று வருடங்களுக்கு முன்பு பா.ஜ.க மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி சொன்னது யாரை குறிப்பிட்டு என அவரிடம் கேட்டால், அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவரை குறிவைத்து அந்தக் கருத்தை சொல்லவில்லை என்றே அவர் கூறுவார்.
ஆனால், அந்த எச்சரிக்கையை, 'நகர்ப்புற நக்சல்வாதம்' என்று கூறப்படுவதன் பின்னணியில் புரிந்து கொண்டால், அதன் புதிய அர்த்தம் உங்களுக்கு தெளிவாக விளங்கும்.
நாட்டில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட 40வது ஆண்டு நிறைவு விழாவில், 'நாட்டில் மீண்டும் எமர்ஜென்சி அமல்படுத்தப்படலாம்' என்று எச்சரிக்கை விடுத்த அத்வானி, "அரசியல் தலைமை பக்குவப்படவில்லை என்று சொல்லவில்லை, ஆனால் சில குறைகள் இருப்பதால் எமர்ஜென்சி மீண்டும் ஒருபோதும் அமல்படுத்தப்படாது என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை" என்று கவலை வெளியிட்டார்.
"மக்களின் சுதந்திரம் இனி ஒருபோதும் முடக்கப்படாது; அடிப்படை உரிமைகள் மீண்டும் முடிவுக்கு கொண்டுவரப்படாது என்பதற்கான எந்தவொரு தீர்வும் ஏற்படுத்தப்படவில்லை" என்று அத்வானி அப்போது கூறியிருந்தார்.
இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த நேர்காணலில், ஜனநாயகம் மற்றும் அதன் பிற அம்சங்கள் தொடர்பான பொறுப்பு இல்லாதது பற்றிய தனது கவலைகளை வெளியிட்டிருந்தார்.
யாருக்கும் புலப்படாத வேறு கோணங்கள் அத்வானிக்கு தெரிந்ததால்தான், அன்று அவர் எமர்ஜென்சி மீண்டும் வரலாம் என்று சூசகமாக குறிப்பிட்டாரா?
பட மூலாதாரம், Getty Images
எதிர்கருத்துகளின் மீதான பகுப்பாய்வு
இந்த ஆண்டு தொடக்கத்தில் புனேவுக்கு அருகில் பீமா கோரேகான் என்ற இடத்தில், பல காலத்துக்கு முன் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போரில், தலித்துகள் தலைமையிலான படை வெற்றிக்கொண்ட போர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த தலித்துகள் சென்றனர். அப்போது தலித்துகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதையடுத்து, மனித உரிமைகளுக்காக பணியாற்றும் அறிவுஜீவிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
அதன்பிறகு, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முதல் அருந்ததி ராய் என பலரும், நாட்டில் எமர்ஜென்சியைவிட மோசமான நிலைமை நிலவுவதாக குற்றம் சாட்டினார்கள். அத்வானியும் தனது கவலைகளை வெளியிட்டிருந்தார். அப்போது, எமர்ஜென்சிக்கு பிறகு, நாட்டில் அந்த நெருக்கடி நிலையை மீண்டும் அமல்படுத்தமுடியாது என்ற ஆபத்து, முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சித்தாந்தரீதியாக, எதிரெதிர் துருவங்களில் இருப்பவர்களும்கூட, தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, ஏறக்குறைய ஒன்றுபோல பேசத்தொடங்கியிருக்கின்றனர்.
எமர்ஜென்சி பற்றி அத்வானி சூசகமாக குறிபிட்டபோது, பலர் அதை, அவர் நரேந்திர மோதியின் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே கருதினார்கள்.
ஆனல், இது யாரையும் குறிப்பிட்டுச் சொன்னதல்ல என்று அத்வானி தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவந்தார்.
பட மூலாதாரம், Getty Images
மோதிமயமான இந்தியா
நரேந்திர மோதி பிரதமராக பொறுப்பேற்று ஓராண்டு காலல் ஆகும்வரை பீமா கோரேகானில் தலித்துகள் 'எல்கர் பரிஷத்' என்ற நினைவிடத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்யப்பட்டது இல்லை, பிரதமர் நரேந்திர மோதியை படுகொலை செய்வதற்கான திட்டங்களை தீட்டியதாக கூறப்படும் கடிதத்தைப் பற்றி அதுவரை யாருக்கும் தெரியாது.
மாட்டிறைச்சி வைத்திருந்த சந்தேகத்தில் தாத்ரியில், முகம்மது அக்லாக் என்பவர் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள், அதுவரை நடைபெற்றதும் இல்லை, பசு பாதுகாப்பு கும்பல்கள் கூட்டமாக சென்று பிறரை தாக்கும் சம்பவங்களையும் யாரும் கேள்விப்பட்டதும் இல்லை.
நரேந்திர மோதியை ஒரு சர்வாதிகாரி என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கும் அவருடைய தீவிர எதிர்ப்பாளர்கள்கூட, அத்வானி கூறியதுபோல், நாட்டில் மீண்டும் எமர்ஜென்சி அமல்படுத்தப்படலாம் என்ற கருத்தை கூறியதில்லை.
பட மூலாதாரம், Getty Images
மாறாக, காங்கிரஸின் தவறான கொள்கைகளில் இருந்து விடுபட்டு, நாடு இனி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என தொழிலதிபர்கள், வணிகர்கள், ஊடகவியலாளர்கள், பெரும்பாலான அறிவுஜீவிகள் மற்றும் வாக்காளர்கள் ஆசுவாசமடைந்திருந்தனர்.
அதுவரை, பிரதமர் ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி உயர் மதிப்புகொண்ட ரூபாய் தாள்கள் இனி வெறும் குப்பைதான் என்று அறிவிப்பு வெளியிட்டதும் இல்லை. நள்ளிரவில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோதி முன்னிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜி.எஸ்.டி என்ற வரிவிதிப்பு முறையை, மணியடித்து அறிமுகப்படுத்தியது போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றதில்லை.
பணவிலக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டியால் என்ன மாற்றம் வந்துவிடும் என்பது பற்றியும் அதுவரை யாருக்கும் தெரிந்ததில்லை.
பட மூலாதாரம், Getty Images
தாராளவாத கருத்துக்கள் பற்றிய கேள்வி
ஆனால் அத்வானி அவர்களுக்கு மட்டும், தன்னை சுற்றி நடப்பவற்றில் இருந்து எதை புரிந்து கொள்ள முடிந்தது? நாட்டில் மீண்டும் எமர்ஜென்சி அமல்படுத்தப்படலாம், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பங்கம் ஏற்படலாம் என்று அவருக்கு தோன்றியதற்கான காரணம் என்ன?
குடிமக்களின் உரிமைகளை நீர்த்துப்போக செய்வதும், எதிர்ப்புகளை அதிகாரத்தால் அடக்குவதற்குமான சூழல் உருவாவதற்கும் எமர்ஜென்சி நிலையை அமல்படுத்துவது ஒரு வழி என்று அவர் புரிந்து கொண்டிருக்கலாம்.
ஆனால் எமர்ஜென்சி அமல்படுத்தப்படாமல் நிலைமையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்றால், அதற்கு களத்தை தயார் செய்ய நீண்டகாலம் ஆகும். அதற்கு, தாராளவாத கொள்கைகளை கேள்விகேட்டு, அதற்கு எதிரான நிலையை உருவாக்கவேண்டும்.
மனித உரிமைகள் தொடர்பாக பணியாற்றுபவர்கள் மீது சந்தேகங்களை எழுப்பலாம். மனித உரிமைகள் பிரச்சனை எழுப்பப்பட்டால், பயங்கரவாதிகளுக்கு மட்டும்தான் மனித உரிமைகள் இருக்கிறதா, சாதாரண மக்களுக்கு இல்லையா என்று குரல் எழுப்பலாம்.
அதன்பிறகு, மனித உரிமை ஆர்வலர்களுக்கு 'நகர்ப்புற நக்சல்' மற்றும் 'தேசதுரோகிகள்' என்று பட்டம் கட்டி, அவர்களை தங்கள் விருப்பம்போல் கையளலாம்.
பட மூலாதாரம், Getty Images
மதச்சார்பின்மை அல்லது செக்யூலரிசம் போன்ற வார்த்தைகளை வெறுக்கத்தக்கவைகளாக மாற்றி, அதை அடிக்கடி வலியுறுத்தி, 'மதச்சார்பற்றவர்' என்று ஒருவர் தன்னை வெளிப்படுத்துவதற்கு அச்சப்படும் மனோபாவத்தை ஏற்படுத்தலாம். பின்னர் மதச்சார்பின்மை என்பதை இலக்கு வைப்பது எளிதாகிவிடும்.
தொழிற்சங்கங்கள் எதிர்மறையாக செயல்படுவதாக கூறி அதற்கு 'ஏதேச்சாதிகார அமைப்பு' என்று பெயரிட்டு, அவை அபத்தமானவை என்ற எண்ணத்தை தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் ஏற்படுத்தி, தொழிற்சங்கம் என்ற ஜனநாயக அமைப்பு மீதே மக்களுக்கு வெறுப்பு ஏற்படுத்திவிடலாம்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கடந்த தசாப்தங்களில் இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதுடன், மேலே சொன்ன நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளில் எல்.கே. அத்வானிக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதையும் மறந்துவிடமுடியாது.
மதச்சார்பின்மை என்பது, தெளிவற்ற, சிதைந்த சிந்தனை என்று அவர் கூறினார். அவரது முயற்சிகளின் விளைவாகவே, மதச்சார்பின்மை பற்றி பேசியவர்கள் முஸ்லீம்கள் என்று நிராகரிக்கப்பட்டனர். ஆனால், தற்போது பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று அவர்களுக்கு அச்சுறுத்தல் விடப்படுகிறது.
புதிய பொருளாதார கொள்கைகளை பி.வி. நரசிம்ம ராவ் அறிமுகப்படுத்தியபோது, நாட்டில் தொழிற்சங்க இயக்கமும் பலவீனமடைந்தது. பல இடங்களில் தொழிற்சங்கங்களின் அடிப்படையே ஆட்டம் கண்டது. தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பதற்கான அந்த ஜனநாயகத் தளம், வேலை செய்ய விரும்பாத சோம்பேறிகளின் கேடயமாக பயன்படுத்தப்படுவதான கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன.
பட மூலாதாரம், Getty Images
நகர்புற நக்சல் என்பது குற்றமா?
மாவோயிஸ்டுகள் தற்போது இந்திய நகரங்களின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஊடுருவியிருப்பதாக, மத்தியில் ஆளும் கட்சியாக கோலோச்சும் பாரதிய ஜனதா கட்சி, அரசு இயந்திரம், சங் பரிவார் மற்றும் அதன் ஆதரவாளர்கள் திடுக்கிடும் தகவல்களை கூறுகின்றன!
பல்கலைக்கழக பேராசிரியர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற முகமூடிகளில் மாவோயிஸ்டுகள் மறைந்துக் கொண்டிருக்கிறார்கள்!
இவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வன்முறையால் தூக்கி எறிய வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதன் மூலம், நாட்டில் மாவோயிச புரட்சி ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும்.
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படுபவர்களின் மீதான குற்றங்களை நிரூபிக்கவேண்டியது போலீசாரின் பொறுப்பு. ஆனால் தடை செய்யப்பட்ட எந்த ஒரு அமைப்பின் (அது மாவோயிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி), உறுப்பினராக இருந்தாலும்கூட, அதற்காக ஒரு நபரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என்பதை காவல்துறை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
கைது செய்யப்பட்டவர்களை 'நகர்ப்புற நக்சல்' அல்லது நகர்ப்புற மாவோயிஸ்ட் என்று குற்றம் சாட்டுபவர்கள், 2011 ஏப்ரல் 15ஆம் தேதியிட்ட முக்கியமான நீதிமன்ற ஆணையை மீண்டும் ஒரு முறை கவனமாக படித்துப் பார்ப்பது நல்லது.
சமூக செயற்பாட்டாளர் பினாயக் சென் மீது தேசதுரோக குற்றம் சாட்டிய சத்தீஸ்கர் மாநில காவல்துறை, அவரை சிறையில் அடைத்தது. இந்த வழக்கில், கீழமை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
ஆனால் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, டாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், 'இது ஒரு ஜனநாயக நாடு, ஒருவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதால் மட்டுமே, அவர் தேசதுரோகம் செய்ததவராக கருதப்படமாட்டார்' என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
இதற்கு முன்னதாக, 2011 பிப்ரவரி நான்காம் தேதியன்று, தடை செய்யப்பட்ட அமைப்பான உல்ஃபாவின் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: "தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருப்பதால் மட்டுமே ஒருவரை குற்றவாளி என கருதமுடியாது, அவர் வன்முறையில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது பிறரை வன்முறைக்கு தூண்டினாலோ அன்றி அவர் குற்றவாளி அல்ல."
பட மூலாதாரம், PTI
சுதா பரத்வாஜ்
"நகர்ப்புற மாவோயிஸ்ட்" என்ற குற்றச்சாட்டில் ஐந்து மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்படுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, 'நகர்ப்புற நக்சலிசம் - கண்ணுக்கு தெரியாத விரோதி' என்ற பெயரில் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கருத்தரங்கில், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மாணவர் பிரிவான, 'அகில பாரதிய வித்யார்தி பரிஷத்'தின் தேசிய அமைப்பின் செயலாளர் சுனில் அம்பேத்கர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மோனிகா அரோரா, "இதை முழுமையாக அகற்ற அழுத்தம் கொடுக்கவேண்டும்... கேரளா, ஊடகம் மற்றும் ஜே.என்.யு (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) ஆகியவற்றில் மட்டுமே அவர்கள் எஞ்சியிருக்கிறார்கள்" என்று கூறினார்.
கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதிகளைப் பற்றி பேசிய மாணவர் சங்கத் தலைவர் சுனில் அம்பேத்கர், 'அவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து, இங்கே மறைந்து வாழும் குற்றவாளிகள்' என்று குறிப்பிட்டார்.
'2016 ல் ஜே.என்.யுயில் நடந்த சம்பவங்கள் சரியானவை அல்ல என்றாலும்கூட, அதனால் ஒரு நன்மையும் ஏற்பட்டிருக்கிறது. திரைப்படத் துறை, பத்திரிகை மற்றும் பல்கலைக்கழகங்களில் மறைந்திருந்து 'ஸ்லீப்பர் செல்களாக' செயல்பட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கருத்து கொண்டவர்கள் வெளிப்பட்டுவிட்டார்கள்" என்று சுனில் அம்பேத்கர் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லது சிபிஐ-எம் போன்ற கட்சிகள் இந்திய அரசியலமைப்பின் கீழ் செயல்படுவதையும், அவை 'ஸ்லீப்பர் செல்களாக' செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை அவர் குறிப்பிடவில்லை என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
பட மூலாதாரம், GETTY / GETTY / FACEBOOK
செயற்பாட்டாளர்கள் வரவர ராவ், கவுதம் நவ்லகா மற்றும் சுதா பரத்வாஜ்
நகர்புற மாவோயிஸ்ட்கள் என்ற வார்த்தை இப்போதுதான் முதன்முதலாக பயன்படுத்தப்படுகிறதா?
இந்தக் கருத்தரங்கில் 'நகர்புற மாவோயிஸ்டுகள்' பற்றி குறிப்பிட்டபோது, அரசியலமைப்பின்படி இயங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இந்த வரையறைக்குள் கொண்டு வந்துவிடுவதுபோல் தோன்றியது. 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்ற முழக்கத்தை முன்வைக்கும் பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸுடன் சேர்த்து, பிற எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒழித்துவிடவேண்டும் என்ற சித்தாந்தங்களுக்கும் ஊக்கமளிக்கிறாரா?
'நகர்ப்புற மாவோயிஸ்டுகள்' என்ற சொல்லாடல் தற்போதைய பா.ஜ.க அரசின் மூளையில் உதித்தது இல்லை என்பதையும் குறிப்பிடவேண்டியது அவசியம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, நகரங்களில் 'மாவோயிஸ்ட்' ஆதரவாளர்கள் இருப்பதைப் பற்றி பேசினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் மாவோயிச வன்முறை திடீரென வெடித்தது. சத்தீஸ்கர் மாநிலத்தின் சோனி சோரி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் சீமா ஆஸாத் மற்றும் அவரது கணவர் விஷ்வ விஜய் போன்றோர் கைது செய்யப்பட்டனர்.
பட மூலாதாரம், PRAKASH SINGH
சோனி சோரியையும் மாவோயிஸ்ட் என்று கூறிய போலீசார், பிறரை மிரட்டி பணம் அவர் சம்பாதித்ததாக குற்றம் சாட்டியது. சீமா ஆஸாத் மற்றும் அவரது கணவர் விஷ்வ விஜய்க்கு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது, பிறகு அவர்களை உயர் நீதிமன்றம் விடுவித்தது.
சோசலிஸ்ட் பிரதாப் பானு மேஹ்தா, இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான தனது கட்டுரையில் இதுபோன்ற நிகழ்வுகளை பற்றி விளக்கமாக கூறியிருக்கிறார். "இன்று நாம் பார்க்கும் ஆபத்தான சூழ்நிலையானது, கொஞ்சம் கொஞ்சமாக ஆழமாக வேரூன்றிக் கொண்டே செல்கிறது. மக்களின் மனோபாவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு உளவியல் சிக்கல் இது. இதில் அரசு குற்றம்சாட்டும் அனைவரும் துரோகிகள் என்று கட்டமைக்கப்படுகிறது நமது உடலை மட்டுமல்ல, ஆன்மாவையும் மட்டுப்படுத்த முயற்சிக்கும் இதுபோன்ற மனோபாவத்தை, நீதிமன்றங்களும், சிவில் சமுதாயமும் எதிர்க்கவேண்டும்."
பட மூலாதாரம், Getty Images
இப்படி ஒரு பத்திரிகையில் தனது கருத்தை எழுதிய பிரதாப் பானு மேஹ்தாவும் 'ஸ்லீப்பர் செல்' என்று அடையாளப்படுத்தப்படுவாரா?
பீமா கோரேகானில் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில், பிரதமர் நரேந்திர மோதியை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைப் போலவே கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது கண்டறியப்பட்டதாக மகாராஷ்டிர காவல்துறை கூறுகிறது.
அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தை மகாராஷ்டிர காவல்துறை சுட்டிக்காட்டுகிறது. 'இந்தக்கடிதம் மட்டும் பொய்யானதாக இருந்தால், இந்திய ஜனநாயகம் ஒரு ஆபத்தான காலகட்டத்திற்குள் நுழைந்துவிட்டது என்று கருதலாம்' என்று, இதைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் பிரேம் சங்கர் ஜா கூறுகிறார்.
இப்படிப்பட்ட கருத்தை எழுதியிருக்கும் பிரேம் ஷங்கர் ஜாவும், கம்யூனிஸ்டுகளின் ஸ்லீப்பர் செல்லின் ஓர் உறுப்பினர் என்று குற்றம் சுமத்தப்படுவாரா?
எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற கேள்விகள் நீதிமன்றத்தில் எழுப்பப்படும். போலீசும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலையும், அதற்கு ஆதரவான ஆதாரங்களையும் கொடுக்க வேண்டியிருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்