மனைவியுடன் தகராறு; தனக்குதானே அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கட்டட தொழிலாளி

மனைவியுடன் தகராறு; தனக்குதானே அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கட்டட தொழிலாளி

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே தனக்கு தானே அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஒட்டிவிட்டு கட்டடதொழிலாளி ஒருவர் தற்கொலை செய்யப் போவதாக நாடகமாடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 37). கட்டட தொழிலாளி.

இவர் கடந்த வியாழக்கிழமையன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி அம்சவேணியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அன்பரசன் புஞ்சை புளியம்பட்டிக்கு சென்றார்.

தான் இறந்துவிட்டதாக தனது புகைப்படத்தை கொடுத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து வந்து ஊர் முழுக்க ஒட்டியுள்ளார். இதை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் அன்பரசன் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது அன்பரசன் அங்கு கட்டிலில் படுத்திருந்தார். அவரிடம் உறவினர்கள் கேட்டனர். தான் எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயற்சித்ததாக அன்பரசன் கூறியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அன்பரசனை அவரது உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அன்பரசன் வீட்டிற்கு செல்வதாக கூறி மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டார். அப்போதுதான் அவர் எலி மருந்து சாப்பிட்டதாக கூறி நாடகமாடியது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் பகிர்ந்ததாவது, ''அன்பரசன் மதுபோதையில் அவ்வப்போது சண்டை போடுவது வழக்கம். அதே போலத்தான் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டி விட்டு தற்கொலைக்கு முயற்சித்ததுபோல் நாடகமாடியுள்ளார்'' என்றும் தனது புகைப்படத்தை கொடுத்து தானே அஞ்சலி போஸ்டர் அடித்துள்ளார் என்றும், அஞ்சலி போஸ்டர் அடிக்க கடைக்கு சென்றபோது, அங்கிருந்தவர்கள் படத்தில் இருப்பதும் அன்பரசனும் ஒன்றுபோல் இருந்ததால் சந்தேகம் அடைந்து கேள்வி எழுப்பியதற்க்கு, அந்த படத்தில் இருப்பது தனது அண்ணன் என்று கூறி உள்ளார். எனவேதான் கடைக்காரர்கள் போஸ்டர் அச்சடித்து கொடுத்துள்ளனர் என்று கூறினர்.

அன்பரசன் தற்போது தலைமறைவாகி விட்டார். தற்கொலை முயற்சிக்காக காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்ற பயத்தில் தலைமறைவாகி விட்டார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :