செயற்பாட்டாளர்கள் கைது: ஏன் நீதிமன்றம் காவல்துறை மீது அதிருப்தி கொண்டது?

செயற்பாட்டாளர் கௌதம் நவ்லாகா
படக்குறிப்பு,

செயற்பாட்டாளர் கௌதம் நவ்லாகா

எல்கார் பரிஷத் மற்றும் பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்கள் குறித்த தகவல்களை செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து ஊடகங்களில் வெளியிட்டதற்காக, மகாராஷ்டிரா காவல்துறையினர் மீது மும்பை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

வழக்கை விசாரித்து வரும் புனே காவல்துறை அதிகாரிகளுடன், மகாராஷ்டிரா கூடுதல் டி.ஜி.பி (சட்டம் & ஒழுங்கு) பரம்பீர் சிங் கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் என்று சிலவற்றை வெளியிட்டார்.

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா மற்றும் வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகியோரை புனே காவல்துறையினர் கைது செய்திருந்தனர். ஆனால், போலீஸ் காவலில் இல்லாமல் செம்படம்பர் 6ஆம் தேதி வரை அவர்களை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கினை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் சதீஷ் கைக்வாட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய மனுதாரர் வழக்கறிஞர் நிதின் சட்புடே, "வழக்கு விசாரணையின்போது, காவல்துறையினர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை ஊடகத்தில் வெளியிட்டதை குறித்து பதிவு செய்தோம். அப்போது, இதற்கான அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள், வழக்கு நீதிமன்றத்தில் இருக்க எவ்வாறு இதுகுறித்து ஊடகத்தினரிடம் காவல்துறையினர் பேச முடியும் என்று கேள்வி எழுப்பினர்" என்று தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ் எஸ் ஷின்டே மற்றும் மிருதுலா பட்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட விசாரணை செம்டம்பர் 7ஆம் தேதியன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கைதான செயற்பாட்டாளர்கள்

நாடு முழுவதுமுள்ள பல்வேறு இடங்களில் புனே காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று அதிரடி சோதனையை நடத்தினர். கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் கிராமத்தில் நடந்த வன்முறை பற்றிய விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுவதாக புனே காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை தொடர்பாக ஐந்து பிரபல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கோன்சல்வேஸ் ஆகிய நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் ஐந்து செயற்பாட்டாளர்கள் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வீட்டுக்காவலில் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :