ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர் - நெகிழ்ச்சி சம்பவம்

இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

இந்து தமிழ்: 'ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர்'

தந்தை ஏற்கெனவே இறந்த நிலையில் தாயும் கொலை செய்யப்பட்டதால் ஆதர வற்ற சிறுவனை காவல் உதவி ஆணை யர் ஒருவர் மகனாக அரவணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப் படம்

"அயனாவரம் அடுத்த நம்மாழ்வார் பேட்டை, சுப்புராயன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி பரிமளா (33). இவர்களது ஒரே மகன் கார்த்திக் (15). இவர் மயிலாப்பூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வரு கிறார். கோவிந்தராஜன் ஏற்கெனவே, காலமாகி விட்டார். தாயின் அரவணைப்பில் கார்த்திக் இருந்தார். வேறு உறவினர்கள் இல்லை.

இந்நிலையில், கடந்த 31-ம் தேதி இரவு 11 மணிக்கு முன் விரோதம் காரணமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் சூர்யா (18), பரிமளாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதனால் தாயை இழந்து கார்த்திக் ஆதரவற்று போனார். இதைத் தொடர்ந்து அயனாவரம் காவல் சரக உதவி ஆணையரான எம்.பாலமுருகன் தற்போது சிறுவன் கார்த்திக்கை அரவணைத்துள்ளார்." என்கிறது அந்நாளிதழ்.

பட மூலாதாரம், இந்து தமிழ்

"கடந்த 31-ம் தேதி பரிமளா கொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடந்தது எனது காவல் சரகத்துக்கு உட்பட்டது. எனவே, நான் நேரடியாக சென்றேன். கொலை தொடர்பாக அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்து விட்டீர்களா என தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளரிடம் கேட்டேன்.

அவர், "கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு ஒரு மகன் மட்டுமே உள்ளார். அவரை காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளோம்" என்று கூறி சிறுவன் கார்த்திக்கை காட்டினர். அவரது தாய் கொலை செய்யப்பட்ட தகவலை தெரிவித்து விட்டீர்களா என மீண்டும் ஆய்வாளரிடம் கேட்டேன். இல்லை என்று பதில் வந்தது. எப்படியும் மகனிடம் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

உடனடியாக சிறுவன் கார்த்திக்கிடம் அவனது தாய் கொல்லப்பட்ட செய்தியை தெரிவித்தேன். இதைக் கேட்ட சிறுவன் நிலை குலைந்தான். அவனுக்கு கதறி அழவோ, சத்தம் போட்டு கூச்சலிடும் வயதோ இல்லை. ஆனால், தான் ஆதரவற்ற நிலையில் இருந்த நிலையை விவரிக்க முடியாத நிலையில் ஒரு வகையான சோகத்தோடு அப்படியே அமர்ந்தான். பின்னர், அவனை சமாதானம் செய்தேன். நீ கவலைப்படாதே. உன் அம்மா இருந்து செய்வதைவிட அதிகமாக செய்வோம் என்று கூறிவிட்டு வீடு திரும்பினேன்.

அன்று இரவு தூக்கமே வரவில்லை. மனம் தத்தளித்தது. யாருமே இல்லை என்றால் சிறுவன் என்ன செய்வான். எதிர்காலத்தில் பழிக்குப் பழியாக கொலைகாரனாகி விடக் கூடாது. அவனை எப்படியாவது ஆதரிக்க வேண்டும் என்று எண்ணினேன். அன்று இரவோடு இரவாக என் மனைவி கலா ராணியுடன் இதுகுறித்து விவாதித்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். ஏற்கெனவே, 2 குழந்தை உள்ள நிலையில் மேலும் ஒரு குழந்தை நமக்கு சுமை அல்ல என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்த நாள் காலையிலேயே சிறுவன் தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்று அங்குள்ள நிர்வாகிகளிடம், கார்த்திக்கின் முழு பாதுகாவலன் இனி நான்தான் என்றும் அந்த சிறுவனுக்கு என்ன செய்ய வேண்டுமானாலும் நானே செய்வேன் எனவும் எழுதி கொடுத்துவிட்டு, எனது செல்போன் எண்களையும் கொடுத்தேன்.

மேலும், அன்றே கார்த்திக்கை எனது வீட்டுக்கு அழைத்து உணவளித்தேன். எனது மகனுக்குள்ள உடைகளை அவனுக்கு அளித்தேன். தற்போது கார்த்திக்கும் எனது இன்னொரு மகன்தான். அவன் எனக்கு சுமை அல்ல சுகம்தான்."என்று காவல் உதவி ஆணையர் பாலமுருகன் கூறியதாக விவரிக்கிறது இந்து தமிழ்.

தினத்தந்தி: 'மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது'

பட மூலாதாரம், Getty Images

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்று முதல்பக்கத்தில் பிரதானமாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில், விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, '90 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்க முடியாது. ஆனால், ஒரே ஒருநாள் மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடலாம். ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட மனுதாரருக்கு போலீசார் அனுமதி வழங்கவேண்டும்' என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதில், மெரினா கடற்கரையில் எந்த ஒரு போராட்டத்துக்கும், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதன்பின்னர், இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில், 'போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த சென்னையில் பல இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மெரினா கடற்கரையில் இதுபோன்ற போராட்டங்களை நடத்த அனுமதித்தால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படும்' என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, "மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அரசு தடை விதித்து இருப்பது, அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பாதிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.மெரினாவில் போராட்டம் நடத்த தகுந்த காரணங்களைக்கூறித்தான் தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளது'

சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள் 24 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். போக்குவரத்து துறை திரட்டிய தகவல்களின்படி மரணத்தை விளைவிக்கக்கூடிய விபத்துகளிம் 2018 ஆம் ஆண்டு (ஜனவரி - ஜூலை) 7,526 பேர் மரணித்ததாகவும் இதே காலக்கட்டத்தில் 2017 ஆம் ஆண்டு 9,231 பேர் இறந்ததாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ்.

ஆனால், அதே நேரம் இரு சக்கர வாகன விபத்துகள் கவலை அளிப்பதாக கூறும் அந்நாளிதழ் இந்த ஆண்டு ஜனவரி - ஜூலை இடையே ஆன காலக்கட்டத்தில் 2,476 பேர் இறந்து இருப்பதாக கூறுகிறது.

பட மூலாதாரம், இந்து தமிழ்

தினமணி: 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க ரூ 4,555 கோடி தேவை'

ஒரே நேரத்தில் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு ரூ.4,555 கோடி நிதி தேவைப்படும் என்று சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது என்கிறது தினமணி செய்தி.

பட மூலாதாரம், Getty Images

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசிடம் சட்ட ஆணையம் தனது அறிக்கையை கடந்த வாரம் தாக்கல் செய்தது அதில், "2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக, நாடு முழுவதும் 10,60,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். இந்நிலையில், மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் 2019ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்படுமெனில், 12.9 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 9.4 லட்சம் கட்டுப்பாட்டு கருவிகள், 12.3 லட்சம் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் கட்டுப்பாட்டு கருவி, வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரம் உள்ளிட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றின் விலை ரூ.33,200 ஆகும். இதன்படி கணக்கிட்டால், உடனடியாக மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுமெனில், அத்தேர்தலுக்கு தேவைப்படும் மொத்த இயந்திரங்களையும் வாங்குவதற்கு ரூ. 4,555 கோடி தேவைப்படும்.

இந்த இயந்திரங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகாலம் ஆகும். அப்படி கணக்கிட்டால், 2024ஆம் ஆண்டில் மீண்டும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தேவைப்படும் இயந்திரத்தை வாங்குவதற்கு ரூ.1751.17 கோடி தேவைப்படும். 2029ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு இயந்திரங்கள் வாங்க ரூ.2017.93 கோடி தேவைப்படும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :