சோஃபியா கைது: ‘அதிகாரத்தை கேள்வி கேட்பதே ஜனநாயகம்’

  • சிவக்குமார் உலகநாதன், மு. நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைது செய்யப்பட்ட செய்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் இந்திய அளவில் சமூக ஊடகத்தில் டிரெண்டாகி உள்ளது.

விமானம் பயணம் நெடுக சோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்

#Sophia, #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹாஷ்டேகுகள் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதல் பத்து இடத்திற்குள் வந்து இருக்கிறது.

நேற்று இரவிலிருந்து தமிழகமெங்கும் பரவலாக உச்சரிக்கப்பட்ட பெயர் ஆகி இருக்கிறது சோஃபியா.

சரி யார் இந்த சோஃபியா?

தூத்துக்குடியை கந்தன்சாவடியை சேர்ந்தவர் சோஃபியா. ஆய்வு மாணவர். கனடாவில் படித்து வருகிறார். விடுமுறைக்காக இந்தியா வந்தவர் நேற்று (திங்கட்கிழமை) சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணித்து இருக்கிறார். அதே விமானத்தில் இவருக்கு சில இருக்கைகள் தள்ளி பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அமர்ந்திருக்கிறார்.

பட மூலாதாரம், Twitter

விமானம் பயணம் நெடுக சோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்.

இதனால், தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது தமிழிசை செளந்தரராஜனும் அவருடன் வந்தவர்களும் தன்னை அவதூறாகப் பேசியதாக சோஃபியாவும் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், சோஃபியா மீது இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர்.

இதன் விளைவுகளை அறிந்தும் சோஃபியா மன்னிப்பு கேட்க மறுத்ததாக கூறப்படுகிறது.

அவர் வழக்கறிஞர் அதிசயகுமார், "சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார் என்றும் சோஃபியா அதற்கு மறுத்துவிட்டார்" என்று தெரிவித்தார்.

இந்த சோஃபியா குறித்து இப்போது தேடி தேடி படித்து வருகிறோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இன்னொரு ஷோஃபியா தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார். அவரை நினைவில் வைத்திருக்கிறோமா?

சோஃபியா குறித்து ஷோஃபியா

ஷோஃபியா இசை கலைஞர். விளம்பரத் துறையில் பணியாற்றுகிறார். இதனையெல்லாம் கடந்து அவர் அடையாளம் மக்கள் தளத்தில் இயங்குவது.

நடுநிசியில் போயஸ் கார்டனுக்குள் சென்று சசிகலாவுக்கு எதிராக பாடல் பாடியவர் ஷோஃபியா.

இதற்கு முன்பே, யுனிலிவிருக்கு எதிராக ,'Kodaikanal Won't' என்ற பாடலை பாடினார். ராப் இசையுடன் அலட்சிய குரலில் தொடங்கும் அந்த பாடல் யுனிலிவரை கிண்டல் செய்தது, கோபக் கேள்விகளை கேட்டது. உலக அளவில் அந்தப் பாடல் ட்ரெண்ட் ஆனது.

தூத்துக்குடி சோஃபியா கைது குறித்து, இசை கலைஞர் ஷோஃபியாவிடம் பேசினோம்.

அவர், "அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எல்லாம் சிறையில் அனுப்ப வேண்டுமென்றால், தேசத்தில் பாதிப் பேர் சிறையில்தான் இருக்க வேண்டும். சோஃபியாவை கைது செய்தது, அதையும் அவர் 'பயங்கரவாதி' என்ற பதத்தை பயன்படுத்துவதை எல்லாம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது." என்றார்.

"எதிர்ப்பு குரல்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்தை சிதைக்கும் செயல்" என்கிறார் ஷோஃபியா.

மேலும் அவர், "இதற்கு நாங்கள் ஒரு வகையில் காரணம். 'இசங்கள்' - ஐ படிப்பது, பின்பற்றுவது தவறு, யாரையும் எதிர்த்து பேசக் கூடாது என்றே எங்களுக்கு போதிக்கப்பட்டுவிட்டது. நாங்களும் அதனை நம்பிவிட்டோம். அதனால்தான் இத்தனை நாள் அரசியலற்றவர்களாக இருந்துவிட்டோம். இப்போது அனைத்தும் புரிந்து அதிகாரத்தை கேள்வி கேட்கும் போது அதிகாரம் கோபப்படுகிறது. உங்களுக்கு ஏன் இந்த வேலை என்கிறது." என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மாணவி ஷோஃபியா கைது செய்யப்பட்டது குறித்து பிபிசி தமிழிடம், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் வாசுகி கூறுகையில், '' ஒரு இளம் பெண் தெரிவித்த புகார் மற்றும் கருத்துக்கு, கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர் பதில் கூற முயற்சித்து இருக்கலாம், அல்லது அதனை புறந்தள்ளிவிட்டு சென்று இருக்கலாம். கோஷமிட்டதை புகார் கூறும் அளவுக்கு குற்றமாகவோ அதற்கு மேலாக 15 நாட்கள் ரிமாண்ட் செய்யும் அளவு குற்றமாகவோ நான் கருதவில்லை'' என்று கூறினார். 

அரசுகளின் தற்போதைய டிரண்ட்’

''இதற்கு ரிமாண்ட் செய்வது நாம் ஜனநாயக நாட்டில்தான் நாம் இருக்கிறோமோ எனற ஐயத்தை ஏற்படுத்துகிறது'' என்று வாசுகி தெரிவித்தார். 

இதற்கிடையே  சோபியாவின் தந்தை தெரிவித்துள்ள புகாரில் தமிழிசையுடன் உடன் இருந்தவர்கள் தங்களை அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார். இதற்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்று வாசுகி வினவினார்.

''மேலும், விமான பயணத்தின்போது ஒரு மாணவி ஆட்சி குறித்து விமர்சிக்கிறார் என்றால் எந்தளவுக்கு இந்த கட்சியும், ஆட்சியும் மோசமாக இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்'' என்று வாசுகி குறிப்பிட்டார்.

''எதுவும் பேசக்கூடாது , எதுவும் கேட்க முடியாது என்பதுதான் அரசுகளின் தற்போதைய டிரண்டாக உள்ளது. 'கொள்கைக்கு பதிலாக கொள்கை;  கருத்துக்கு பதிலாக கருத்து. எதுவும் கேட்கக்கூடாது. எந்த விமர்சனமும் செய்யக் கூடாது என்றால் என்ன ஜனநாயகம்'' என்று அவர் வினவினார். ''

''தமிழகத்தில் அதிமுக ஆட்சி மத்திய பாஜகவின் பினாமி அரசாக செயல்பட்டு வருகிறது. அதனால் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக யாரேனும் சிறிய விமர்சனம் செய்தாலே மத்திய பாஜக ஆட்சியும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்கின்றனர். அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது  என்று அவர்  குறிப்பிட்டார்.

''கொள்கைக்கு பதிலாக கொள்கை, கருத்துக்கு பதிலாக கருத்து. எதுவும் கேட்க கூடாது. எந்த விமர்சனமும் கூடாது என்றால் என்ன ஜனநாயகம்'' என்று அவர் வினவினார்.

இது குறித்து பத்திரிக்கையாளர் பத்மினி பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இந்த கைது மற்றும் ரிமாண்ட் நடவடிக்கை மிகையான செயல்தான்'' என்று கூறினார்.

''கருத்து கூறுவது மற்றும் விமர்சனம் செய்வது என்பதுதான் ஜனநாயகம். அந்த உரிமை இது போன்ற நடவடிக்கைகளால் மறுக்கப்பட்டு விடுகிறது. அந்த மாணவி தவறு செய்திருந்தாக கருதினால் அவரை எச்சரித்திருக்கலாம். தற்போதைய நடவடிக்கைகளை நிச்சயம் தவிர்த்து இருக்கவேண்டும்'' என்று அவர் மேலும் கூறினார்.

''பாஜக மாநில தலைவர் தமிழிசை இந்த விஷயத்தில் சற்றே பொறுமை காத்திருக்கலாம். இயல்பாக நடந்து சூழலை சமாளித்து  இருக்கவேண்டும். அவர் மிகவும் கோபமாக இருக்கும் சில காணொளிகள் பகிரப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து இருக்கலாம் என்பதே என் கருத்து'' பத்மினி  கூறினார்.

''அதேவேளையில்  சோஃபியா என்ன கூறினார் என்பது வெளிப்படையாக தெரிந்தபின்னர் , அது குறித்து கருத்து கூறமுடியும்,. தற்போதைய சூழலில் போலீசார்தான் அதனை தெளிவுபடுத்த வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :