பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட மாணவி சோஃபியா பிணையில் விடுதலை

தூத்துக்குடி விமான நிலையத்தில் 'பாசிச பாஜக அரசு ஒழிக' என கோஷமிட்டதால் கைது செய்யப்பட்ட மாணவி சோஃபியாவுக்கு ஜாமின் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சோஃபியா
படக்குறிப்பு,

சோஃபியா

திங்கள்கிழமை காலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அவருடன் அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர்.

விமானம் பயணம் நெடுக சோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்.

இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தன்னுடைய கருத்துரிமை என சோஃபியா கூறினார். ஆனால், சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார் என்றும் சோஃபியா அதற்கு மறுத்திவிட்டார் என்றும் அவரது வழக்கறிஞர் அதிசயகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதனால், தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது தமிழிசை சவுந்தரராஜனும் அவருடன் வந்தவர்களும் தன்னை அவதூறாகப் பேசியதாக சோஃபியாவும் புகார் அளித்தார்.

இதற்குப் பிறகு, சோஃபியா மீது இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் மீது பதிவுசெய்யப்பட்ட 505 என்ற பிரிவில் வழக்குப் பதிவுசெய்ய நீதிபதி மறுத்துவிட்டார்.

சோஃபியா கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் இது தொடர்பாக கண்டனங்களும், கேலிகளும் எழுந்தன.

இன்று காலையில் சோஃபியா பிணையில் விடுவிக்கக்கோரும் மனு இன்று காலையில் தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் மூன்றாம் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பாக தாக்கல் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு சோஃபியா இப்படி பொது அமைதியைக் குலைக்கும் விதமாக கோஷம் எழுப்பலாமா என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, அவரது தந்தையிடமும் சில நிமிடங்கள் பேசினார். பிறகு வழக்கு 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் 12 மணிக்கு வழக்கு வந்தபோது, சோஃபியாவுக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :