கேரளாவில் மக்களை கொல்லும் எலி காய்ச்சல் - அறிகுறிகள் என்ன?

கடந்த இரண்டு தினங்களில் கேரளாவில் 11 பேரை காவு வாங்கியிருக்கிறது எலி காய்ச்சல். லெப்டோஸ்பைரோசிஸ் எனும் நோய் பொதுவாக எலி காய்ச்சல் என அறியப்படுகிறது. கேரள அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் இந்நோய் குறித்து ஓர் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

கேரளா வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

லெப்டோஸ்பைரோசிஸ் சில இடங்களில் வீல்ஸ் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோய் எலிகள் அல்லது விலங்குகளின் உடல் திரவங்களில் இருந்து பரவுகிறது. லெப்டோஸ்பைரோ எனும் பாக்டீரியாவால் இந்நோய் பரவுகிறது. விலங்குகள் வாயிலாக இந்த பாக்டீரியாவானது மனிதர்களுக்கு அவர்களின் தோலில் ஏதேனும் சிறு காயங்கள் இருந்தாலோ அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாகவோ நுழைந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், குமட்டல், தசை வலி ஏற்படுவது, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள். உறுப்புகள் செயலிழப்பு மற்றும் உடலினுள் ஏற்படும் உள் இரத்தப்போக்கு உள்ளிட்டவற்றுக்கு இவை வித்திடலாம்.

சமீபத்தில் கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டதால், வெள்ளநீரில் சிக்கியிருந்தவர்கள் யாராக இருந்தாலும், எலி காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொறுத்து உடனடியாக முன்னெச்சரிக்கையாக உரிய மருத்துவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

'' வெள்ளத்தில் எலிகள் அடித்துச்செல்லப்பட்டதால், இந்த பாக்டீரியா மேலும் பரவ வழி ஏற்பட்டுள்ளது. ஆகவே வெள்ளநீரில் இருந்த மனிதர்களின் உடலிலும் தோல் வழியாக இப்பாக்டீரியா உள்நுழையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது'' என தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் நச்சியல்(வைராலஜி) துறை பேராசிரியர் டாக்டர் ரவி தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி லெப்டோஸ்பைரோசிஸ் என்பது மருத்துவ ரீதியாக உடனடியாக கண்டுபிடிப்பது கடினமானது. ஏனெனில் டெங்கு காய்ச்சல், டைபாய்டு மற்றும் வைரல் ஹெபடைட்டிஸ் போன்ற நோய்களை போலவே இதுவும் காணப்படும்.

11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், உடனடியாக பதற்றப்படவேண்டிய அவசியம் இல்லை. நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றனர்.

''கேரளாவில் இத்தொற்றுநோய் பரவக்கூடிய அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், டாக்சிசைக்ளின் மருந்து எடுத்துக்கொள்ளுமாறு மக்களிடம் அறிவுறுத்திக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார் சுகாதாரத்துறை அரசு அதிகாரியான ராஜீவ் சதானந்தன்.

பட மூலாதாரம், Reuters

பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 400 பேர் வெள்ளத்துக்கு பலியாகியுள்ளனர். பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பலர் மாநிலம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இத்தொற்றுநோய் குறித்து அதிர்ச்சியடையவில்லை என்றும் இவை ஏற்படலாம் என கணித்து அதற்கேற்ப அவற்றை அணுக தாங்கள் தயாராகியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

''வெள்ளத்துக்கு பிறகு தண்ணீர் வழியாக பரவும் நோய்களான காலரா, டைபாய்டு, வயிற்றுபோக்கு, ஹெபடைட்டிஸ் மற்றும் எலி காய்ச்சல் போன்றவை மக்களுக்கு வரலாம் என தாங்கள் எதிர்பார்த்திருந்ததாக'' பிபிசி இந்தியின் இம்ரான் குரேஷியிடம் கேரளாவின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரியான டாக்டர் இக்பால் பாபுகுஞ்சு தெரிவித்துள்ளார்.

''மக்கள் தற்போதுதான் நிவாரண முகாம்களில் இருந்து வீடு திரும்ப துவங்கியுள்ளனர். பல வீடுகளில் தண்ணீர் விடியவில்லை. இது தவிர்க்க முடியாதது. இதுவரைக்கும் எலி காய்ச்சல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களும் வெள்ளம் பாதித்த 13 மாவட்டங்களுக்குள் வருகிறது'' என்கிறார் பாபுகுஞ்சு.

''அனைத்து மருத்துவமனைகளிலும் பெனிசிலின் ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் அனைத்துக்கும் எலி காய்ச்சல் காரணமாக வரும் நோயாளிகளை எப்படி அணுக வேண்டும் என வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளது'' என கேரளாவின் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் டாக்டர் ஆர்.சரிதா தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

லெப்டோஸ்பைரோசிஸ் உலகம் முழுவதும் உள்ளது. ஆனால் வெப்பமண்டல பகுதிகளில் இது மிகவும் சிக்கலுக்குள்ளான பிரச்சனையாக உள்ளது.

2015-ல் பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் வருடத்துக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு எலி காய்ச்சல் ஏற்படுவதாகவும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 59 ஆயிரம் பேர் இதனால் மரணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களுக்கு பின்னதாக இத்தகைய தொற்றுநோய்கள் ஏற்படுகிறது.

விலங்கு வழியாக மனிதனுக்கு பரவும் இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சைகள் கொடுத்தாலே பெரும்பாலும் முழுமையாக குணமடைந்து விடுவார்.

ஆனால் சிலருக்கு, அதிசிறந்த மருத்துவ வசதிகள் கிடைத்தபோதிலும் காப்பாற்றமுடிவதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :