சோஃபியாவின் மேற்படிப்பு கேள்விகுறியாகுமா? - அச்சத்தில் தந்தை
இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'சோஃபியாவின் மேற்படிப்பு கேள்விகுறியாகுமா? - அச்சத்தில் தந்தை'

போலீஸ் சோஃபியாவின் பாஸ்போர்ர்ட்டை எடுத்துக் கொண்டதாக கூறப்படுவதால் அவரின் கல்வி பாதிக்கப்படுமோ என்று அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார் சோஃபியாவின் தந்தை மருத்துவர் சாமி என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
சோஃபியா கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியலில் ஆய்வு செய்து வருகிறார். வெளிநாட்டில் வசித்தாலும் கடற்பகுதி மாவட்ட வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்கிறார். தொடர்ந்து இணையத்தில் ஸ்டெர்லைட், மீத்தேன், எட்டு வழிச்சாலை குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார் என்று அவர் தந்தை கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: "எம்.எல்.ஏ., மணக்க இருந்த மணப்பெண் மீட்பு'
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ திருமணம் செய்ய இருந்த பெண் மீட்கப்பட்டதாக கூறுகிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"ஈரோடு மாவட்டம் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கும், கோபி அருகே உள்ள உக்கரம் பெரியார் நகரை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. சந்தியா எம்.சி.ஏ. பட்டதாரி. இவர்கள் 2 பேருக்கும் வருகிற 12-ந் தேதி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி சந்தியா, உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ள தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அன்று இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் பெற்றோர் கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தியாவை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் சந்தியா, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அவருடைய தோழி வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் மணப்பாறைக்கு விரைந்து சென்று சந்தியாவை மீட்டனர். விசாரணையின்போது சந்தியா கூறுகையில், 'எனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை. எனவே, கடந்த 1-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள எனது தோழி வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டனர்' என்றார்.
இதையடுத்து சந்தியாவை போலீசார் கோபி கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பாரதி பிரபா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து சந்தியா தனது பெற்றோரிடம் சென்றார்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


பட மூலாதாரம், இந்து தமிழ்

தினமணி: "நான்கு லட்சம் கோடி செலவில் 100 விமான நிலையங்கள்'
ரூ. 4.2 லட்சம் கோடி செலவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"நாட்டின் விமானப் போக்குவரத்து துறை உலக அளவில் வளா்ச்சியடைந்து வரும் துறையாக உள்ளது. கடந்த 50 மாதங்களாக போக்குவரத்து வளா்ச்சி தொடா்ந்து இரண்டு இலக்கத்தில் உள்ளது. ரூ. 4. 2 லட்சம் கோடி செலவில் 100 விமான நிலையங்களை அடுத்த 10-15 ஆண்டுகளில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த விமான நிலையங்கள் அரசு-தனியாா் கூட்டு பங்களிப்பின் மூலம் உருவாக்கப்பட உள்ளது.மேலும், விமானத்தில் சரக்கு ஏற்றி செல்வதற்கான கொள்கையையும் அரசு தயாரித்து வருகிறது" என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் சுரேஷ் பிரபு கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழ் : 'மேகதாட்டுவில் புதிய அணை - தமிழக அரசு எதிர்ப்பு'
மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிக்க கூடாது என்று மத்திய நீர்வள ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.5,912 கோடி மதிப்பில், சமநிலை நீர்த்தேக்கம், குடிநீர் திட்டத்துடன் 400 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்க கர்நாடக அரசு சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. கர்நாடக அரசின் ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
காவிரியின் குறுக்கே எந்த புதிய திட்டத்தை செயல்படுத்தினாலும் அதை நதிநீரை பங்கிடும் இதர மாநிலங்களுடன் பகிர்ந்து கொண்டு அவற்றின் அனுமதியையும் பெற வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை மீறும் வகையில் கர்நாடகாவின் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன." என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
- பதிமூன்று ஆண்டுகளாக தேடப்பட்ட ஒரு ஜோடி செருப்பு
- சோஃபியா கைது குறித்து ஷோஃபியா என்ன சொல்கிறார்?
- கேரளாவில் மக்களை கொல்லும் எலி காய்ச்சல் - அறிகுறிகள் என்ன?
- கறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை? #BeingMe
- மீண்டும் அண்டார்டிகாவில் டைனோசர்கள் உலவுமா?
- விரித்து, சுருட்டி வைத்துக்கொள்ளும் வகையிலான மொபைல் தயாரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்