ஆசிரியர் தினம்: ''ஆசிரியர் எனப்படுபவர் யாரெனில்'': பகவான் முதல் மீனாட்சி வரை

  • மு.நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்

நம் பேச்சில், நம் எழுத்தில் ஏன் ஒட்டு மொத்த ஆளுமையில் பள்ளியும் அதன் ஆசிரியர்களும் நிச்சயம் கலந்திருப்பார்கள். நம் பால்ய வயதில் நமக்கெல்லாம் நாயகனாக ஓர் ஆசிரியர் இருந்திருப்பார். நம் மீது அளப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருப்பார். நீ என்னவாக போகிறாய் என்று நம்மிடம் யாராவது கேட்டிருந்தால்,"நான் 'அவரை' போல ஆகப்போகிறேன்" என்று ஏதோ ஒரு ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டு இருப்போம்.

புயலில் துடுப்பு வலிப்பவன்

கல்வியை முற்றும் முழுவதுமான வணிகமாக, பண்டமாக பார்க்காத அந்த சமயத்தில் ஆசிரியரின் உறவு வெறும் பாடப் புத்தகம் சார்ந்ததாக மட்டுமே இருந்திருக்கவில்லை. அதனை கடந்த ஆத்மார்த்தமான உறவு இருந்தது.

நகரத்திலிருந்து துண்டிக்கப்பட்டு 30- 40 கி.மீ தொலைவில் உள்ளடங்க இருக்கும் ஏதேனும் ஒரு கிராமப் பள்ளியிலிருந்து படித்து மேலேறி வந்த ஒருவரிடம் உரையாடி பாருங்கள், ஒரு ஆசிரியர் அளித்த நம்பிக்கை, பேரன்பினை இறுகப் பற்றி மேல் எழுந்து வந்திருப்பது தெரியும். எப்படியாவது கரைசேர்த்துவிட வேண்டும் என்று புயலில் துடுப்பு வலிப்பவரின் அக்கறை அந்த ஆசிரியர்களிடம் இருந்திருப்பது புரியும்.

கற்பித்தலின் நோக்கம் பாடப்புத்தகத்துடன் முடிவதில்லை, மாணவர்களின் ஆளுமையை வடிவமைப்பதுதான் கல்வி என்பதனை அப்போது ஆசிரியர்கள் உணர்ந்து இருந்தார்கள். பாடப்புத்தகத்தை தாண்டி பல 'இசங்கள்' - ஐ மாணவர்களுடன் உரையாடினார்கள். வகுப்பறைகள் ஈரமான போதி மரமாக இருந்தன. போதி மரத்திடம் ஞானம் பெற்ற பறவைகள் செல்லும் இடங்கள் எல்லாம் விதைகளை தூவ வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். கல்வி சுயநலம் சார்ந்தது அல்ல; பொதுநலன் சார்ந்தது அது என்பதை அவர்கள் உணர்ந்து இருந்தார்கள். கல்வியின் நோக்கமும் அதுவாகவேதான் இருந்தது.

பண்டமாக கல்வி

கல்வி குறித்து ஜவஹர்லால் நேரு,"கல்வியின் நோக்கம் என்பது சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆசையை தூண்டுவதாக இருக்க வேண்டும். கல்வியின் மூலம் பெற்ற அறிவதை தன்னலத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், சமூகநலத்திற்கும் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

ஆனால், இப்போது கல்வி சார்ந்த மதிப்பீடுகள், விழுமியங்கள் எல்லாம் மாறிவிட்டன. பண்டத்தை விற்கும் விற்பவர் - நுகர்பவர் உறவாக மாறிவிட்டது. வகுப்பறைகளில் சமூகம் சார்ந்த அனைத்து உரையாடல்களும் துடைத்தெறியப்பட்டு, முழுக்க முழுக்க தன்னலம் சார்ந்ததாக ஆகி விட்டது.

இந்திய நாட்டின் முதல் பிரதமரின் கனவை பாதியில் தொலைத்துவிட்டு நிற்கிறோம்.

நம்பிக்கை தரும் ஆசிரியர்கள்

இப்படியான சூழ்நிலையிலும் பகவான் போன்ற நம்பிக்கை தரும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பகவான் பணி இடமாற்றத்தில் வெளியகரம் அரசுப்பளியிலிருந்து வேறு பள்ளிக்கு செல்லப் போகிறார் என்று தெரிந்ததும் மாணவர்கள் அனைவரும் அவரை சூழ்ந்து கட்டி அணைத்து நெகிழ்ந்து அழுதது வெறும் பாடப் புத்தகத்தில் உள்ள சொற்களை மாணவர்களிடம் கடத்தியதால் நிகழ்ந்தது அல்ல.

காணொளிக் குறிப்பு,

மாணவர்களின் மனதை எப்படி கவர்ந்தார் 'பகவான் சார்' ? (காணொளி)

கிராம சூழலில் பள்ளிக்கு வருவதே பெரும்பாடாக இருக்கும் மாணவர்களின் பிற கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்தார். அதனை களைய கரம் கொடுத்தார். அதனால் பூத்ததுதான் அந்த அன்பு.

பகவான் வார்த்தைகளில், "எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் என்னை வளர்த்தெடுத்தார்கள். வறுமை, குடும்ப பிரச்சனைகள் என சுமைகளை சுமந்துகொண்டு பள்ளிக்கு வந்தால், ஆசிரியர்களின் கனிவான வார்த்தைகளும்,கவனிப்பும்தான் எனக்கு ஆறுதலை தந்தன. என் மாணவர்களிடமும் அதேபோல நடந்து கொள்கிறேன்,'' என்கிறார்.

இது போல அரூர் அருகே சந்தப்பட்டி அரசு பள்ளியில் பணிபுரியும் தங்கமணி இலசையப்பன்.

பாடபுத்தகத்துடன் தன் பணி முடியவில்லை என்பதை தன் செயலால் உணர்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்தப் பள்ளி மாணவர்களிடம் ஜெயமோகன், ராமகிருஷ்ணன், பருவநிலை மாற்றம் என பல்வேறு விஷயங்களை உரையாட முடியும்.

இவை அனைத்தையும் மாணவர்களிடம் அறிமுகம் செய்தவர் தங்கமணி. மாதம் ஒரு முறை இந்த சிறு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு ஆளுமைகளை அழைத்து வந்து மாணவர்களுடன் உரையாட வைக்கிறார்.

ஒரு முறை அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் இவ்வாறாக சொன்னார், "மாணவர்களை சரியான விஷயத்தை காட்டி அவர்களை தூண்டி விட்டால் போதும், புகுந்து புறப்பட்டு வந்துருவாங்க" என்றார். அதனைதான் எந்த பிரதிபலனும் பார்க்காமல் தங்கமணி செய்து வருகிறார்.

மற்றொருவர் புவிதம் மீனாட்சி. புனேவில் கட்டடக்கலை படித்த அவர், சமூக ஏற்றத்தாழ்வுகள் பொறுக்க முடியாமல் அங்கிருந்து புறப்பட்டுவந்து, மாற்றத்தை கல்வியின் மூலமாகதான் கொண்டு வர முடியும் என்று தருமபுரியில் ஒரு மலையடிவாரத்தில் இலவசமாக கிராமப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

மாணவர்கள் விரும்பும் பள்ளி

அரசு பாடபுத்தகத்தை தழுவி இந்தப் பள்ளியில் பாடம் நடத்தப்பட்டாலும் பாட உள்ளடகத்தை பஞ்ச பூதங்கள் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்து பாடம் நடத்துகிறார்கள்.

தம் பள்ளி கல்வி முறை குறித்து விவரித்த புவிதம் மீனாட்சி, "பணம் மட்டுமே பிரதானம் இல்லை. அனைவரையும் சமமாக நடத்த வேண்டுமென கற்று தருகிறோம். இந்த புவி நமக்கு மட்டுமானது இல்லை, அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்று சொல்லி தருகிறோம். இதையெல்லாம் வெறும் வார்த்தைகளில் மட்டும் சொல்லி தராமல், அதுபோல வாழவும் பயிற்றுவிக்கிறோம்." என்கிறார்.

இப்படியாக ஆசிரியர்கள் பெரும் நம்பிக்கையை சமூகத்தில் விதைத்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :