தீபக் மிஷ்ராவின் பணிக்காலத்தின் கடைசி 17 நாட்களும், 8 முக்கிய வழக்குகளும்
- பிபிசி இந்தி சேவைப்பிரிவு
- டெல்லி
இந்திய உச்ச நீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக் கொண்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, 13 மாதங்களுக்கு பிறகு, இந்த ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று ஓய்வு பெறுகிறார்.
பட மூலாதாரம், NALSA.GOV.IN
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா
அவரது பதவிக்காலத்தில் இன்னும் 17 பணி நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாட்டின் நிலையையும், போக்கையும் மாற்றக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகள் அவர் முன் உள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வர வேண்டிய முக்கிய வழக்குகள் பல இருக்கின்றன. இவை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அதில் பாபர் மசூதி வழக்கும் ஒன்று. இதன் தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
இதைத்தவிர, ஆதார் அட்டை தொடர்பான முக்கிய வழக்கிலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தீர்ப்பு வழங்கவேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
அக்டோபர் இரண்டாம் தேதியன்று ஓய்வு பெறுவதற்கு முன்பு சில வழக்குகளில் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ர தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை:
ஆதார் அட்டை: 2016ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஆதார் சட்டத்திற்கு எதிரான பல மனுக்களும், அரசால் அறிவிக்கப்பட்ட ஆதார் அட்டை தொடர்பான சில மனுக்களும் விசாரணையில் உள்ளன.
அடல்ட்ரி: இந்திய தண்டனைச் சட்டத்தின் 497 பிரிவை மாற்ற வேண்டும் என சிலர் கருதுகின்றனர். இந்த சட்டத்தின்படி, வேறொருவரின் மனைவியுடன் பாலியல் உறவு கொண்ட ஒரு ஆண் மட்டுமே இந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட முடியும். எனவே இந்த சட்டப்பிரிவை இருபாலருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியுமா?: குற்றவியல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட அரசியல்வாதிகள், தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
எம்.பியா, வழக்கறிஞரா : சட்டப்படிப்பு முடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ளலாமா என்ற முக்கியமான வழக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
அயோத்யா: அயோத்யா விவகாரத்தில் எம்.இஸ்மாயில் ஃபாரூகி என்பவர் இந்திய அரசுக்கு எதிராக தொடுத்த வழக்கில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டுமா? என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
சபரிமலை: கேரளாவின் பிரபலமான சபரிமலை ஆலயத்திற்கு செல்வதற்கான வயது வரம்பு குறித்த கட்டுப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கிய மனுவின் மீதான தீர்ப்பும் நிலுவையில் உள்ளது.
பட மூலாதாரம், NALSA
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு: 12 ஆண்டு பழைய தீர்ப்பில் மாறுதல் செய்யலாமா? என்பதைப் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு செய்யவேண்டும். அரசுப்பணியில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் கிரீமிலேயர் முறையைக் கொண்டு வர வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், எஸ்சி, எஸ்டி பிரிவினரை கிரீமிலேயர் வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
ஓரினச் சேர்க்கை: சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் பாலியல் ரீதியாக உறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு, சட்டபூர்வமாகச் செல்லுமா இல்லையா என்ற வழக்கின் தீர்ப்பும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் 5 முக்கிய தீர்ப்புகள்
இந்திய உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலத்தில் அளித்த தீர்ப்புகள் தேசிய அளவில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.