ஐதராபாத்: கடைசி நிஜாமின் தங்க டிபன் பாக்ஸை களவாடிய திருடர்கள்

ஐதராபாத்

ஐதராபாத்தில் முன்னாள் ராஜ குடும்பத்துக்கு சொந்தமான தங்கத்தில் வைரம் பதிக்கப்பட்ட `டிபன் பாக்ஸ்` திருட்டுப்போனதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூபி மற்றும் தங்கத்தால் ஆன மூன்று கிலோ மதிப்புள்ள தேநீர் கோப்பை, சாஸர் மற்றும் தேக்கரண்டி ஆகியவற்றையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருட்டுப்போன பொருட்கள் ஐதராபாத்தின் கடைசி நிஜாம் மிர் ஓஸ்மான் கானுக்கு சொந்தமானது.

ஒருகாலத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர் இவர்.

இந்த திருட்டு சம்பவம், திங்கள் காலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், ஞாயிற்றுக்கிழமை இரவு திருட்டு நடைபெற்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது அருங்காட்சியகமாக இருக்கும் நிஜாமின் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த பொருட்கள் திருடு போயுள்ளன.

பத்து வருடங்களுக்குமுன், இதே ராஜ குடும்பத்தினருக்கு சொந்தமான வாள் ஒன்று திருட்டுப் போனது.

இந்த திருட்டில் இரண்டு பேர் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் பிபிசி தெலுகு சேவையிடம் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மிர் ஓஸ்மான் கான்

திருட்டு சம்பவம் குறித்து தகவல் தெரியாமல் இருக்க சிசிடிவி கேமராக்களை திருடர்கள் சேதப்படுத்திவிட்டனர் என போலீஸார் உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த பொருட்கள் வைக்கப்பட்ட கண்ணாடி கதவுகளின் திருகை கழற்றியுள்ளனர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

2000ஆம் ஆண்டு, நிஜாம் அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில், 1937ஆம் ஆண்டு மிர் ஓஸ்மான் அலி கானுக்கு வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

சுதந்திரத்துக்கு முன்பாக இந்தியாவின் மிகப்பெரிய தனி சமஸ்தானத்தை ஆட்சி புரிந்த இவர் 1967ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

பல விலையுயர்ந்த அழகிய நகைகளுடன், `ஜேகப் வைரம்` என்று சொல்லக்கூடிய வைரம் கோழி முட்டை அளவில் வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :