குட்கா ஊழல் விவகாரத்தின் பின்னணி என்ன?

குட்கா ஊழல்

பட மூலாதாரம், Getty Images

சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறை சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளது.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் க்ரீன்வேஸ் சாலை இல்லம், காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே. ராஜேந்திரனின் நுளாம்பூர் இல்லம், பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா அண்ணா நகர் இல்லம், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் எஸ். ஜார்ஜ், விஜயபாஸ்கரிடம் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி, தற்போது தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய ஆய்வாளராக உள்ள சம்பத், மாம்பலத்தில் உள்ள காவல்துறை அதிகாரி மலர் மன்னன் ஆகியோரின் இல்லங்களில் இந்த சோதனைகள் நடந்துள்ளன.

சி.பி.ஐயின் ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று அதிகாலையில் இந்த சோதனைகளைத் துவங்கி நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுக்க 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

சென்னை மாநகர ஆணையராக ஜார்ஜ் இருந்தபோது அவருக்கு நெருக்கமாக இருந்த காவல்துறை அதிகாரிகளின் இல்லங்களிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் இந்திய வருவாய்த் துறை (IRS) அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத் துறை, விற்பனை வரித் துறை அதிகாரிகள் சிலரது இல்லங்களிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

எம்டிஎம் குட்கா என்ற குட்கா நிறுவனத்தின் உரிமையாளரான மாதவ ராவிடம் சி.பி.ஐ. விசாரணையை நடத்தி முடித்திருக்கும் நிலையில் இந்த சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.

குட்கா ஊழல் விவகாரத்தின் பின்னணி

புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடைசெய்து கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான அறிவிப்பை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலலிதா சட்டமன்றத்தில் வெளியிட்டார். உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இருந்தபோதும், தமிழகத்தில் ரகசியமாக இந்தப் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டுவந்தன. இந்தப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காவல்துறையால் சோதனைக்குள்ளாக்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தாலும், இந்தப் பொருட்கள் தமிழகத்தில் தொடர்ந்து பரவலாகக் கிடைத்துவந்தன.

தொடர்புடைய செய்திகள்:

இந்த நிலையில், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்டிஎம் குட்கா தயாரிப்பாளர் மாதவ ராவ் வீடு, செங்குன்றத்தில் உள்ள குட்கா தயாரிப்பு ஆலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தியது. இதற்குப் பிறகு, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சிலரது ஒத்துழைப்புடன்தான் இந்தப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன; இதற்காக அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறி வருமான வரித்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.

இந்தக் கடிதம் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஊடகங்களில் கசிந்தது. ஆனால், அம்மாதிரி கடிதம் ஏதும் எழுதப்படவில்லையென தமிழக அரசு மறுப்புத் தெரிவித்தது. அதே தருணத்தில் தமிழகத்தின் காவல்துறை தலைவராக இருந்த அசோக் குமார் ஓய்வுபெற்று, புதிய காவல்துறை தலைவராக டி.கே. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார்.

ஆனால், இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரிக்க முற்பட்டதாலேயே காவல்துறையின் முன்னாள் தலைவர் அசோக்குமார் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார் என்றும் மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அருணாச்சலம் முக்கியத்துவம் இல்லாத அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மாற்றப்பட்டார் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த விவகாரத்தில் சென்னை மாநகரத்தின் முன்னாள் ஆணையர் ஜார்ஜ், தற்போதைய காவல்துறை தலைவர் ராஜேந்திரன், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டிய தி.மு.க. இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து. தி.மு.கவின் சார்பில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.

அதிரவைத்த வருமான வரித்துறையின் பிரமாணப் பத்திரம்

இந்த வழக்கில், வருமான வரித் துறை ஒரு பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது. வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் முதன்மை இயக்குனர் சுசி பாபு வர்கீஸால் தாக்கல் செய்யப்பட்ட அந்த பிரமாணப் பத்திரத்தில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தில் சோதனையிட்டபோது, குட்கா விவகாரத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், சில மூத்த காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் காவல்துறை தலைவர் அசோக் குமார் முதல்வருக்கு எழுதிய கடிதம் கிடைத்ததாக" கூறப்பட்டுள்ளது.

வேதா நிலையம் இல்லத்தில் கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று இரவில் சோதனை நடத்தியபோது ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அறையில் சோனையிடப்பட்டதாகவும் அங்கு முன்னாள் டிஜிபி 2016 செப்டம்பர் 2ஆம் தேதி முதல்வருக்கு எழுதிய கடிதம் கிடைத்ததாகவும் அத்துடன் வருமான வரித்துறையின் முதன்மை இயக்குனர் 2016 ஆகஸ்ட் மாதம் எழுதிய ரகசியக் கடிதமும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்ததாக வருமான வரித்துறை தன் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறை எழுதிய கடிதமே இல்லை என தமிழக அரசு கூறியிருந்த நிலையில், வருமான வரித்துறை தாக்கல் செய்த இந்த பிரமாணப் பத்திரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தில்லியில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான குட்கா பொருட்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சருக்கு 56 லட்ச ரூபாய் லஞ்சம்

அதேபோல் வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் குட்கா சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் மாதவ ராவ் அமைச்சர் ஒருவருக்கு 56 லட்ச ரூபாய் லஞ்சமாகக் கொடுத்ததை விசாரணையில் ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. ஒட்டுமொத்தமாக இந்த விவகாரத்தில் 39.91 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மாநில அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கடந்த 2017 செப்டம்பரில் வழக்குப் பதிவு செய்தது. ஆனால், குறிப்பிட்ட ஆறுமாத கால கெடுவுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்யவில்லை. இதையடுத்துத்தான் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டுமென தி.மு.க. சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசு தொடக்கம் முதலே கூறிவந்தது. ஆனால், வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் அதனை எதிர்த்து குற்றம்சாட்ட சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமார் என்பவரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

மே மாதத்தின் இறுதியில் மத்தியப் புலனாய்வுத் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவு இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்தது.

மாநில தலைமைச் செயலாளரின் வீட்டில் இதற்கு முன்பாக சோதனைகள் நடந்திருந்தாலும், பணியில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் வீட்டில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

அமைச்சர், காவல்துறைத் தலைவரை பதவி நீக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

"குட்கா ஊழல் புரிந்ததற்காக ரெய்டு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சராகவும் டி.கே. ராஜேந்திரன் புகழ்மிக்க தமிழக காவல்துறையின் தலைவராகவும் இனி நீடிப்பது மக்களாட்சித் தத்துவத்திற்கும், நேர்மை -நியாயத்திற்கும், காவல்துறை நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய இழுக்காகவும், துடைக்க முடியாத கறையாகவும் அமைந்து விடும். தமிழக ஆளுநர், அமைச்சர் விஜயபாஸ்கரையும், தமிழ்நாடு டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனையும் எவ்வித காலதாமதமுமின்றி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :