சொந்த செலவில் கணினி வழி பாடம்: அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்

தனது விடாமுயற்சியாலும், ஆர்வத்தினாலும் வெறும் 7 மாணவர்கள் கொண்ட ஊராட்சி ஒன்றிய பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கையை 21ஆக உயர்த்தியது மட்டுமல்லாமல் தமிழ் பாரம்பரியம் குறித்த ஆர்வத்தையும் மாணவர்கள் மத்தியில் விதைத்து வருகிறார் ஆசிரியர் ஒருவர்.

பள்ளி

என்ன செய்தார் வள்ளுவன்?

நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் கிறிஸ்து ஞான வள்ளுவன். மாற்றுதிறனாளியான இவர், தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் இருந்து இரு சக்கர வாகனம் மூலம் 30 கிலோ மீட்டர் பயணம் செய்து பள்ளியை அடைகிறார்.

இவரின் முயற்சியால் பெற்றோர்கள் பலர் தங்களது பிள்ளைகளை ஆங்கில வழி பள்ளியில் இருந்து தமிழ் வழி பள்ளியில் சேர்த்துள்ளனர்.

இப்பள்ளியில் தனது மடிக்கணினி மற்றும் சிடி பிளேயர் ஸ்பீக்கர் ஆகியவற்றை பயன்படுத்தி தொழில்நுட்பத்தின் துணையோடு புது விதமான கற்பித்தல் முறை கொண்டு மாணவர்களை படிப்பின் பக்கம் வெகுவாக கவர்ந்து வருகிறார்.

பள்ளியில் மிகப்பெரிய அளவில் நூலகம் மற்றும் வாசிப்பு பலகை ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் வாசிக்கும் ஆர்வத்தையும் அதிகரித்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் மதிய வேளைகளில் ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், பனை ஓலையில் பொருட்கள் செய்தல், செய்தித்தாள் வாசித்தல், என தினமும் ஒரு செயல் நடைபெறுவதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு தவறாமல் பள்ளிக்கு வந்துவிடுகிறார்கள்.

பள்ளி சீருடை, அடையாள அட்டை, பெல்ட், வாட்டர் கேன், புத்தகப்பை உட்பட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான செலவுகளை தலைமை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களே ஏற்றுக் கொள்கிறார்கள்.

பாரம்பரியத்தை வளர்க்கும் வகுப்புகள்

இந்த பள்ளியின் முக்கிய சிறப்பம்சம் மாலை நேரத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, பரமபதம், போன்ற விளையாட்டுகளை மாணவர்கள் விளையாடுகின்றனர்.

மாதம்தோறும் முதல் புதன்கிழமை, ’மாதம் ஒரு பழம்’ என்ற திட்டத்தின்படி ஏதாவது ஒரு பழம் வாங்கி மொத்தமாக அமர்ந்து மாணவர்கள் உண்ணுகின்றனர். இதனால் சத்தான பழங்களை உண்பதோடு பழத்தில் உள்ள சத்துக்களையும் அறிந்து கொள்கிறார்கள்.

இவை அனைத்தையும் மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி அதனை சிறப்பாக நடத்தி வருகிறார் ஆசிரியர் வள்ளுவன்.

இதுகுறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவி சந்தியா கூறுகையில், "எங்களுக்கு இந்த பள்ளியில் எல்லா பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக அழிந்து வரும் பனை மரத்தில் இருந்து பொருட்கள் தயாரிப்பது, பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது போன்றவை மாணவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்கிறார்.

ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "2001 ஆம் ஆண்டு சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாததால் மாணவர்களின் படிப்பை பெற்றோர்கள் பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு அனுப்ப ஆரம்பித்தனர் அது எனக்கு மிகுந்த வேதனை அளித்தது; மேலும் அப்பகுதியில் வசதி படைத்தவர்கள் சிலர் ஆங்கிலவழிக் கல்வி மீது கொண்ட மோகத்தால் தனியார் பள்ளியில் பிள்ளைகளை சேர்த்தனர் எனவே அன்றிலிருந்து ஒரு முடிவு எடுத்தேன்."

"அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்ற அரசின் உதவியை நாடாமல் என்னால் முடிந்த பண உதவி செய்தும் தன்னார்வர்களிடம் இருந்து உதவிகள் பெற்றும் இப்பள்ளியில் சீருடை முதல் கல்வி கற்பிக்கும் முறை வரை தனியார் பள்ளிக்கு ஈடாக நடத்தி வருகிறேன்." என்கிறார் ஆசிரியர் வள்ளுவன்.

தன்னுடைய இந்த முயற்சிக்கு கிராம மக்கள் இன்று வரை முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

தமிழ் பண்பாடு, தமிழர் கலாசாரம் மற்றும் தமிழரின் வீரவிளையாட்டு ஆகியவை குறித்தும் கற்பித்து வருவதால் ஊர் இளைஞர்கள் மத்தியில் ஆசிரியருக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது என்கிறார் முன்னாள் மாணவர் ஒருவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :