மு.க. அழகிரியின் பேரணி: ஒரு லட்சம் இல்லை பத்தாயிரம் மட்டுமே

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி மறைந்து முப்பது நாட்கள் ஆனதையொட்டி சென்னையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் பேரணி ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார் அவரது மூத்த மகன் மு.க. அழகிரி. ஒரு லட்சம் பேர் பங்கேற்பதாகச் சொன்ன பேரணியில் சுமார் பத்தாயிரம் பேர் மட்டுமே பங்கேற்றனர்.

அழகிரி

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியால் 2014ல் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட மு.க. அழகிரி, தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்திவருகிறார். தன்னைக் கட்சியில் சேர்த்தால், மு.க. ஸ்டாலினைத் தலைவராக ஏற்கவும் தயார் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், தற்போது தி.மு.க. தலைவராக உள்ள மு.க. ஸ்டாலின் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், மு. கருணாநிதி மறைந்து முப்பது நாட்கள் நிறைவடைந்ததையொட்டி சென்னையில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்தப்போவதாக மு.க. அழகிரி அறிவித்தார்.

செப்டம்பர் 5ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து பேரணி புறப்பட்டு, அண்ணா சமாதிக்கும் கருணாநிதி சமாதிக்கும் அஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் காலை பத்து மணியளவில் போதுமான எண்ணிக்கையில் தொண்டர்கள் திரளவில்லை. சிறு சிறு எண்ணிக்கையில் தொடர்ந்துவந்தபடி இருந்தனர். சுமார் 11.30 மணியளவில் சுமார் பத்தாயிரம் பேர் திரண்டனர். அப்போது மு.க. அழகிரி தன் மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி, மதுரையின் முன்னாள் துணை மேயர் மன்னன் ஆகியோருடன் வந்து சேர பேரணி துவங்கியது.

துவக்கத்தில், ஊர்வலத்தின் முன்பாக மு.க. அழகிரி நடந்துவந்தார். ஆனால், கூட்டம் அவரைச் சுற்றி முண்டியடிக்க, பிறகு திறந்த வாகனமொன்றில் அவரும் துரை தயாநிதி, கயல்விழி, மன்னன் ஆகியோரும் ஏறிக்கொண்டனர்.

இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மதுரை மாவட்டத்திலிருந்து வந்திருந்தனர். பெரும் எண்ணிக்கையில் பெண்களும் வந்திருந்தனர். பேரணியில் கலந்துகொண்ட பலர் கறுப்பு நிற ஆடையை அணிந்திருந்தனர்.

அண்ணா நினைவிடத்தில் சமாதி அமைந்திருக்கும் இடத்திற்கு சற்று முன்புவரை வாகனத்தில் வந்து இறங்கிய அழகிரி முதலில் அண்ணாவுக்கும் பிறகு கருணாநிதிக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கடந்த சில நாட்களில் இந்தப் பேரணிக்காக அழகிரி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியபோது, பேரணிக்குப் பிறகும் கட்சியில் சேர்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோதெல்லாம், செப்டம்பர் ஐந்தாம் தேதியன்று அறிவிப்பேன் என்று கூறிவந்தார் அழகிரி. இதனால், பேரணி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் நீண்ட நேரம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்ததோடு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மட்டுமே இந்தப் பேரணி என்று தெரிவித்தார். அவரது ஆதரவாளரான வேளச்சேரி ரவி என்பவரை கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார்களே என்று கேட்டதற்கு, இந்தப் பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களையும் நீக்குவார்களா என அவர்களிடமே கேளுங்கள் என்று சொல்விட்டுச் சென்றுவிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று சென்னைக்கு வந்த அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ற தி.மு.க. நிர்வாகி ரவி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. அறிவித்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :