‘எஸ்.வி.சேகர் பேசிய ஒலிபெருக்கி கருவி வெடித்து சிதறியது’
இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தினத்தந்தி: 'எஸ்.வி.சேகர் பேசிய ஒலிபெருக்கி கருவி வெடித்து சிதறியது'
எண்ணூர் அரசு பள்ளியில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசியபோது, ஒலிபெருக்கி கருவி திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தால் விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள், மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓடினார்கள் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை எண்ணூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் எஸ். வி.சேகர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது மேடை அருகே இருந்த ஒலிபெருக்கி கருவி (அம்பிளிபயர்) திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்ததோடு மின்சாரமும் தடைபட்டது.
அப்போது மேடையில் இருந்த பிரமுகர்களும், விழாவை பார்த்துக்கொண்டிருந்த மாணவ-மாணவிகளும் அலறியடித்து கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பட மூலாதாரம், இந்து தமிழ்
தினமணி: 'உயர் நீதிமன்ற தீர்ப்பு போலியாக தயாரிப்பு'
பட மூலாதாரம், Getty Images
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை போலியாக தயாரித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துவிட்டதாக, நாமக்கல் போலீஸார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"சென்னை உயர் நீதிமன்றத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த ஜெ.கே.ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எங்கள் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்த அங்கமுத்து, சுந்தரம், முருகானந்தம் உள்ளிட்டோரை அந்த இடத்திலிருந்து வெளியேற்றவும், அவர்களிடம் இருந்து வாடகை பாக்கியை வசூலித்து தரக் கோரியும் திருச்செங்கோடு முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
இந்த வழக்கில் நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து திருச்செங்கோடு சார்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சொத்துகளை மீட்கச் சென்றபோது, கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தடை விதித்து இருப்பதாகக் கூறி எதிர் மனுதாரர்கள் தீர்ப்பு நகலை கொடுத்தனர்.
இந்தத் தீர்ப்பு நகலை உயர் நீதிமன்ற பதிவுத் துறையில் சரிபார்த்தபோது அது போலியானது என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக நாமக்கல் போலீஸாரிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத் தீர்ப்பை போலியாக தயாரித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சி.ராகவன், மனுதாரரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துவிட்டதாகக் கூறி அதற்கான முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, உயர் நீதிமன்ற தீர்ப்பை போலியாக தயாரித்தவர்கள் மீது தனியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். இந்த அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி அமர்வின் முன் பட்டியலிட உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு பரிந்துரைப்பதாகக் கூறி உத்தரவிட்டார்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
இந்து தமிழ்: 'ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீது மணிப்பூர் மாநிலப் பெண் வழக்கு'
கணவரிடமிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்வதாக ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கருக்கு எதிராக மணிப்பூர் பெண் தொடர்ந்த வழக்கில் இதுதொடர்பாக போலீஸ் ஆணை யர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சோம்ரின் வாஷினோ டேவிட்(34) என்ற பெண் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''நான் மணிப்பூரைச் சேர்ந்தவள். கடந்தாண்டு ஜூலை மாதம் பேமின் ஆப்ரா டேவிட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இதற்கு எங்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் எனது சகோதரி நாங்கள் வசித்த வில்லிவாக்கம் வீட்டுக்கு வந்து எனது தாயாரது உடல் நிலை சரியில்லை எனக்கூறி என்னை மட்டும் கொல்கத்தாவுக்கு அழைத் துச் சென்றார். அதன்பிறகு என்னை சென்னை திரும்புவதற்கு எனது உறவினர்கள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து எனது கண வர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது எனது உறவினர்களின் மிரட்டலுக்குப் பயந்து அவர்களுடன் செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தேன்.
அதன்பிறகு சிறிது நாட்களில் எனது கணவர் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அதன்பிறகு ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் எனது பெற்றோருடன் செல்லுமாறு கூறி வற்புறுத்தினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் வில்லிவாக்கம் போலீஸாரும் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி வந்து தொல்லை கொடுத்தனர். அதன்பிறகு தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் நடந்து வரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கட்டாயப்படுத்தினர். நான் எனது கணவருடன் அங்கு சென்றபோது ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் அனுப்பி வைத்ததாகக் கூறி சில கிறிஸ்தவ பாதிரியார்கள் என்னிடம் வந்து உனக்குள் தீய ஆவி புகுந்துவிட்டது. அதை விரட்ட வேண்டும் என்கின்றனர்.
என்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படும்படி மகளிர் ஆணையமும் கூறுகிறது. இதுதொடர்பாக போலீஸ் ஆணையரிடம் கடந்த ஆக.28 அன்று புகார் அளித்தும் அவர் வாங்க மறுத்துவிட்டார். எனது கணவரிடம் இருந்து என்னைப் பிரிப்பதற்காக சூழ்ச்சி நடக்கிறது. எனவே கணவருடன் வசிக்கும் என்னை துன்புறுத்தக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்' என அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், இதுதொடர்பாக சென்னை போலீஸ் ஆணையர் மற்றும் வில்லிவாக்கம் போலீஸ் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை தள்ளி வைத்தார்.கணவருடன் வசிக்கும் என்னை துன்புறுத்தக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட மனுவில் கோரியிருந்தார்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'பசுமை தீர்ப்பாயம்'
வழக்கத்திற்கு மாறாக, ஏற்கெனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பல்வேறு அமர்வுகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு அளிக்கப்படவுள்ள 18 முக்கிய வழக்குகளை மீண்டும் இந்த தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் கோயல் தலைமையிலான அமர்வு மறு விசாரணை நடத்தவுள்ளதாக "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தி வெளியிட்டுள்ளது.
உத்திரகாண்டில் 11,700 கோடி செலவில் அமைக்கப்படும் சார் தாம் நெடுஞ்சாலை பணித்திட்டம், அருணாச்சல பிரதேசம்-அஸ்ஸாம் எல்லையில் 2,000 மெகாவால்ட் உற்பத்தி செய்யும் கீழ் சுபான்சிரி நீர் மின்னுற்பத்தி திட்டம் தொடர்பாக முரண்பட்ட பரிந்துரைகளுக்கு தீர்வு காண நிபுணர் குழுவை தேர்வு செய்வது போன்ற வழக்குகள் இதில் அடங்குவதாக இந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வழக்குகளை மறுபடியும் விசாரணை செய்வது பொதுவாக நடைபெறுவதில்லை.
ஒரு வழக்கை விசாரித்து, தீர்ப்பு வழங்கப்பட இருக்குமானால், தேவைப்பட்டால் மேலதிக விசாரணை மேற்கொள்ளலாம் அல்லது இறப்பு, தகுதியிழப்பு அல்லது பணி ஓய்வு காரணங்களால் அமர்வில் போதிய உறுப்பினர் இல்லாமல் போனால் மறுபடியும் விசாரிக்க இன்னொரு அமர்வுக்கு அந்த வழக்கை மாற்றுவதே பொதுவான நடைமுறை என்று இந்த செய்தித்தாள் தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்