சட்டப்பிரிவு 377: காலனி ஆதிக்கம் முதல் இன்று வரை- நடந்தது என்ன?
இந்திய உச்சநீதிமன்றம், 377வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிய மனு மீதான விசாரணையை துவக்கியதில் இருந்து இந்திய கலாசாரம் மற்றும் இந்து மதவாதிகளிடையே ஓரினச்சேர்க்கை பற்றிய விவாதம் மீண்டும் சூடுபிடித்தது.

சட்டப்பிரிவு 377-இன்படி, "இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்".
பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது.
காலனித்துவ ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கூறிய டெல்லி உயர் நீதிமன்றம் இந்த சட்டப்பிரிவை ரத்து செய்தது.
மத்திய அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை என்றாலும், இந்திய கலாசாரம் மற்றும் இந்து மதம் ஆகியவற்றின் பாதுகாவலர்களாக கருதும் சிலர், உச்சநீதிமன்றத்தை அணுகினார்கள்.
சட்டத்தை மாற்றுவதற்கான உரிமை நாடாளுமன்றத்திற்கும், சட்ட மன்றங்களுக்குமே உண்டு என 2013இல் தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, பிரிவு 377 சட்டபூர்வமானது; ஆனால், நியாயமற்ற இந்த சட்டத்தை மாற்றுவதற்கு முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கூறி, டெல்லி உயர்நீதிமன்றத்தின் முடிவை தள்ளுபடி செய்தது.
இந்த வாதம் அபத்தமானது, ஏனெனில் எந்தவொரு பழைய அல்லது புதிய சட்டத்திற்கு அந்தஸ்து வழங்குவதற்கும் அல்லது ரத்து செய்வதற்குமான ஏகபோக உரிமை கொண்டது உச்ச நீதிமன்றம்.
எப்போதுமே ஓரினச்சேர்க்கை தொடர்பான விவாதங்கள், முன்முடிவுகளுடனும், இரட்டைக் கோட்பாடுகளின் காரணமாகவும் திசை திருப்பப்படுகிறது. தற்போதும் இந்த விவகாரத்தில் இதே ஆபத்து ஏற்படலாம் என்று தோன்றுகிறது.
அனைத்து மதங்களும் ஓரின உறவுகளை இயற்கைக்கு மாறானவை என்றும் பாவச்செயல் என்றும் கருதுவது, இந்த வழக்கில் நீதிபதிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்.

பட மூலாதாரம், Getty Images
கிரிஸ்தவ அமைப்புகளும், அடிப்படைவாத முஸ்லிம் மத குருக்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னர் இந்துக்களிடம் பாலியல் உறவு, காமம் பற்றிய உணர்வுகள் வெறுப்பாகவோ குறுகிய கண்ணோட்டத்தையோ கொண்டிருந்ததில்லை.
இந்துமதக் கடவுளரான சிவனின் ஓர் வடிவம் அர்த்தநாரீஸ்வரர். ஆணிலே பெண்மையும், பெண்மையில் ஆண்மை கொண்டது தான் ,அர்த்தனாரிஸ்வர தத்துவம் ஆகும். இதை தற்போது 'ஆண்ட்ரோஜென் பாலுணர்வு' (Androgen sexuality) என்று எளிமையான வார்த்தைகளில் சொல்லிவிடலாம்.
அதேபோல் விஷ்ணு மோகினி ரூபம் எடுத்துக் கொண்டு சிவபெருமானை வழிபடுவதாக இந்தியா புராணக் கதைகளில் சொல்லப்பட்டிருப்பதை வைத்து, இது இந்து மத பக்தர்களுக்கு இயற்கைக்கு மாறானது என்று தோன்றியதில்லை என்று கூறலாம்.
மகாபாரதத்தில், அர்ஜூனன் ஓராண்டுக்கு மட்டும் 'பிரஹனலை' என்ற பெயரில் பெண்ணாக மாறி வசித்தாலும், அவன் மாவீரன் என்ற பெயரை இழக்கவில்ல்லை. பெண்ணாக வசித்தது அர்ஜுனனுக்கு களங்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதேபோல் இதே இதிகாசத்தில், திரெளபதியின் மூத்த சகோதரன் ஷிகர்ண்டிக்கு ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை, பாலின அறுவை சிகிச்சை இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நடைபெற்றதற்கான நிகழ்வாகவும் கருதலாம்.

குப்தர்களின் காலத்தில் தொகுக்கப்பட்ட வாத்சாயனரின் காமசூத்திரம் என்ற புத்தகத்தில், பாலியல் சேவை செய்பவர்கள், உடலுக்கு மசாஜ் செய்பவர்கள், முடி திருத்துபவர்கள் என ஆண் பணியாளர்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் பற்றிய விவரங்கள் விவரமாக கூறப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, அந்த காம அனுபவம் உற்சாகமாக இருந்ததாகவும் காமசூத்திரம் பதிவு செய்துள்ளது.
பெண்த்தன்மை கொண்ட ஆண்கள் பாவிகள் என்றோ, குற்றவாளிகள் என்றோ அறிவிக்கப்படவில்லை. காமசூத்திரத்தில், பெண்களுக்கு இடையிலான பாலியல் தொடர்புகள் குறித்த இயல்பான வர்ணனைகளும் காணப்படுகின்றன.
கஜுராஹோ ஆலயம், ஒடிஷாவின் புகழ் பெற்ற ஆலயம் என இந்தியாவின் பல இந்து மத கோயில்களின் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களும் பாலுணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
இதன் பொருள் என்ன? பண்டைய இந்தியாவில் பாலியல் ரீதியிலான சுதந்திரமும், வெளிப்படையான சிந்தனையும் இருந்ததற்கான ஆதாரங்கள் இவை. இடைக்காலத்தில் ஓரினச்சேர்க்கை இயல்பானதாக கருதப்பட்டதற்கான சான்றுகளாகவும் இவற்றை கருதலாம்.
இவற்றின் சாராம்சம் என்ன? ஆபிரகாமிய சமயங்களான யூதம், கிறித்தவம் மற்றும் இஸ்லாமியம் ஆகியவற்றில் மட்டுமே ஓரினச்சேர்க்கை தவறானதாக கருதப்பட்டது; இந்து மதத்தில் இல்லை என்பதுதான்.
மேற்கத்திய நாடுகளிலும், கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளிலும், பெரியவர்களும், சிறுவர்களும் உடல் உறவு கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. தவறான பாலியல் உறவுக்கு 'கிரேக்க காதல்' என்று அழைக்கப்படுவது சுவராசியமான விஷயம்.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஆஸ்கார் வைல்டு முதல் கிறிஸ்டோபர் ஐஷர்வுட் வரை, மேல்தட்டு செல்வந்தர்கள் மொராக்கோ முதல் மலாயா வரை பயணித்தது வெறும் சிற்றுண்டிக்காக மட்டுமல்ல, சிற்றின்பம் என்று சொல்லப்படும் பாலியல் உறவுக்காக, ஆண்களைத் தேடியும் பயணித்தார்கள் என்று கூறப்படுகிறது.
தத்துவயியலில் புதிய கோணத்தை வழங்கிய மைக்கேல் ஃபூக்கோ, தான் ஓர் ஓரின சேர்க்கையாளர் என்பதை ஒருபோதும் மறைத்ததில்லை.
ஆனால், பிரபல கணினி விஞ்ஞானி, கணிதவியலாளர், மறைகுறியீட்டு பகுப்பாய்வாளர், தத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் கோட்பாட்டு உயிரியல் வல்லுநர் என பன்முகத்தன்மை கொண்ட அலன் டூரிங் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டில் மனவேதனையடைந்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த துரதிர்ஷ்டவசமான தற்கொலைக்கு காரணம், பாசாங்குத்தனம் மற்றும் இரட்டை தரநிலை கொண்ட நடவடிக்கைகளே.

பட மூலாதாரம், Getty Images
1960களில் வொல்ஃபான்டன் கமிஷன், தாக்கல் செய்த அறிக்கைக்குப் பிறகு, ஓரினச்சேர்க்கை விக்டோரியன் சட்டத்தை பிரிட்டன் ரத்து செய்துவிட்டது.
ஆனால், இந்தியா விடுதலை பெற்ற பிறகும்கூட, பிரிட்டன் அரசின் காலனி ஆட்சி காலத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அந்த சட்டத்தை மாற்றமில்லாமல் அப்படியே தொடர முடிவெடுத்தது.
ஓரினச்சேர்க்கை என்பது ஒருவரின் தனியுரிமை மற்றும் அந்தரங்க அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, ஓரினச்சேர்க்கையாளர்களின் நடத்தையை போலீஸ் எவ்வாறு கண்காணிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
மேற்கத்திய நாடுகளில் மூன்றாம் பாலினத்தவர் என்று ஓரின சேர்க்கையாளர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, இந்தியாவில் நீடிக்கும் பிரிட்டனின் பழைய சட்டத்தினால், பலர் துன்புறுத்தப்பட்டு, வாழ்க்கையையே தொலைத்துவிட்டனர். தங்கள் வாழ்வாதாரத்திற்காக விபச்சாரம் செய்ய வேண்டிய நிலைமைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
கிறித்தவ நாடான அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஓரினச்சேர்க்கை என்பது குற்றப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. அங்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக் கொள்வது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.
'ஓரினச்சேர்க்கையாளர்களும் நாம் வணங்கும் கடவுளின் பிள்ளைகளே, நம் வணங்கும் கடவுளையே அவர்களும் வணங்குகிறார்கள்; எனவே அவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது' என்று போப் கூறுகிறார்.
துரதிருஷ்டவசமாக, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுகிற பாலியல் வன்கொடுமை "கெடூரங்கள்" மற்றும் அவை திருச்சபையால் மறைக்கப்படுவது வெளியாகியிருக்கும் இந்த சூழ்நிலையில் ஓரினச்சேர்க்கை பற்றி போப் ஃபிரான்ஸிஸ் வெளிப்படையாக பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.


வயது வந்தவர்கள் ஒப்புதலின் அடிப்படையில் ஓரினச் சேர்க்கை தொடர்பு கொள்வதற்கும், குழந்தைகளை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்துக் கொள்வது அவசியமான ஒன்று.
இவை குறித்த தவறான புரிதல் அல்லது விளக்கத்தின் காரணமாக 377 சட்டப்பிரிவு தொடர முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஓரினச்சேர்க்கை என்பது உடல் ரீதியிலான அல்லது மன ரீதியிலான நோய் அல்ல என்று 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்டன.

ஓரினச்சேர்க்கையை இயற்கைக்கு மாறான உறவு என்று அழைக்க முடியாது. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வதற்கான அடிப்படை உரிமை அவர்களுக்கும் உண்டு, அதை யாரும் மறுக்க முடியாது.


மதச்சார்பற்ற நாடான இந்தியாவின், எந்த மதத்தின் நம்பிக்கைக்கு ஏற்பவும், சட்டத்தை உருவாக்கவோ அல்லது அமல்படுத்தவோ முடியாது.
இந்த பிரச்சனை ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்கானது மட்டுமல்ல, சட்டம் மற்றும் சட்டத்தின் முன் அனைவரின் சமம் என்பது போன்ற அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடையது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்