LGBT: இந்தியாவில் ஓரினச்சேர்க்கை - சட்டப் போராட்டம் கடந்து வந்த பாதை
இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 சட்டபூர்வமாகச் செல்லுமா இல்லையா என்று இன்னும் சற்று நேரத்தில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
அந்த 377 சட்டப் பிரிவு குறித்த விரிவான விளக்கத்தை இங்கே பகிர்கிறோம்.
பட மூலாதாரம், AFP
"இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்," என்று பிரிவு 377 கூறுகிறது.
விக்டோரியன் காலத்தின் இந்தச் சட்டப்பிரிவு 150 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது.
அக்டோபர் 2017ஆம் தேதி வரையிலான தகவலின்படி நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, ஸ்பெயின், தென்னாபிரிக்கா, நார்வே, சுவீடன், மெக்சிகோ, ஐஸ்லாந்து, போர்ச்சுகல், அர்ஜென்டினா, டென்மார்க், உருகுவே, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரேசில், பிரிட்டன், லக்ஸம்பர்க், அமெரிக்கா, பின்லாந்து, கொலம்பியா, ஜெர்மனி மற்றும் மால்டா ஆகிய 25 நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமானதாக உள்ளது . பிற நாடுகளில் அது சட்டவிரோதமானது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூத் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 'பாலியல் சுதந்திரத்துக்கான உரிமையும்' அடிப்படை உரிமைகளுள் ஒன்றா என்று தீர்ப்பளிக்க உள்ளது. குறிப்பாக 'அந்தரங்க உரிமை' ஓர் அடிபப்டை உரிமைதான் என்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்பளித்தபின் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது.
ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் பிரிவு 377 அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 10 அன்று, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
விசாரணைகள் திறன்பட மேற்கொள்ளப்படுவதில்லை என்பதால், இந்தப் பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படுவதும் மிகவும் அரிதாகவே உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இதுவரை இந்த வழக்கை மூன்று நாட்கள் விசாரித்துள்ள நீதிமன்றம் சட்டப்பிரிவு 377ஐ நீக்கிவிட்டு, ஓரினச்சேர்க்கையாளர்கள் சுதந்திரமாகவும், சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்காமலும் வாழவதற்காக வழிவகுக்கும் என்பதான போதுமான குறியீடுகளை வெளிப்படுத்தியுள்ளது.
"தனக்கான துணையைத் தேர்வு செய்வது ஒருவரது வாழ்வதற்கான உரிமை என்பதை ஏற்கனேவே உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளதால், அதே தர்க்க அடிப்படையை ஒரே பாலினத்தைச் சேர்ந்தவரையும் துணையாகத் தேர்வு செய்ய அனுமதி உண்டு என நீட்டிக்கலாம். இதை குற்றமில்லை என்று ஆக்கிவிட்டால் அவர்கள் வலுவடைந்துள்ளதாக உணர்வார்கள்," என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விசாரணையின்போது கூறியுள்ளது.
இது குறித்து கருது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்த உச்சநீதிமன்றம், இது பெரும்பான்மை நியதியின் அடிப்படையில் அல்லாமல், அரசியல் சாசனத்தின் நியதியின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியல் சாசனத்தின் பிரிவு 14, 19 மற்றும் 21 ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வழக்கை நீதிமன்றம் அணுகவுள்ளது. இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட ஓரினச்சேர்க்கை செயல்பாட்டாளர்கள், நீதிமன்றத்தின் வெளிப்படையான ஆதரவுக்குப் பிறகு ஊக்கமடைந்துள்ளனர்.
ஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்குவதற்கு ஆதரவான வாதங்கள்
ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதுவது அடிப்படை அரசியலமைப்பை மீறுவதுடன், பாலின சிறுபான்மையினராக அறியப்படும், சமூகத்தில் உள்ள ஒரு பெரும் பகுதியினரின் மனித உரிமைகளையும் மீறுகிறது. ஓரினச்சேர்க்கை இயற்கையின் விதிகளுக்கு முரணானது என்று சமூகம் கருதுவது இதற்கு விதிவிலக்காகாது.
பட மூலாதாரம், Getty Images
எல்லா ஆண்களும், எல்லா பெண்களும் எதிர்பாலினத்தவர்கள் மீது மட்டுமே ஈர்ப்பு கொண்டுள்ளவர்களாக இருப்பதில்லை. அவர்கள் ஒருபாலுறவுக்காரர்கள், லெஸ்பியன்கள், இரு பாலினத்தவர்களுடனும் உறவு கொள்பவர்கள் என்று கூறப்படுபவர்கள். இது மரபு ரீதியாக வரும் ஓர் இயல்பே தவிர, அந்த நபர்களின் தேர்வாக இருப்பதில்லை. பதிவயதின்போது தங்களது பாலின ஈர்ப்புகள் குறித்து ஒருவர் உணரத் தொடங்குவார். இந்த உணர்வை மாற்ற முடியாது. குணப்படுத்த இது ஒரு நோய் அல்ல.
பாலின சிறுபான்மையினராக உள்ள அவர்களுக்கு, இயல்பான பாலியல் விருப்பங்களுள்ள பிறரைவிடவும், அச்சமின்றி சுதந்திரமாக வாழவும், தங்கள் திறன்களை பயன்படுத்தி இலக்குகளை அடையவும் சமூகப் பாதுகாப்பு தேவைப்படுகிறது.
படிக்கும் மற்றும் வேலை செய்யும் இடங்களில் மட்டுமல்லாது தங்கள் குடும்பத்தில்கூட பாரபட்சத்தை சந்திப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.
2013இல் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு பிரிவு 377 சட்டபூர்வமானது என்று தீர்ப்பளித்திருந்தது. அதற்கு முன்பு பிரிவு 377 சட்டவிரோதமானது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்திருந்த தீர்ப்பை, உச்சநீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு ரத்து செய்தது.
ஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்குவதற்கு எதிரான வாதங்கள்
சட்டபூர்வ வயதை அடைந்த இருவர் உறவு கொள்வது அவர்கள் தனிப்பட்ட உரிமையே என்பதை ஏற்றுக்கொண்டாலும், விழுமியம், நன்னடத்தை மற்றும் உடல்நலம் ஆகியவற்றின் அடிப்படையில் பாலுறவுகொள்வது குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்று இந்த தரப்பினர் வாதிடுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
76 நாடுகள் ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருத்துவதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றனர். ஒரு சமூகத்தால் அறநெறியாக கருதப்படுபவையும் இந்த சட்டப்பிரிவு செல்லுமா என முடிவு செய்வதில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு குற்றத்தை செய்பவர்கள் விரும்புகிறார்கள் என்பதால் அந்தக் குற்றத்தை சரி என்று கூறிவிட முடியாது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிரிவு 377ஐ ஆதரித்து வாதாடியது. எனினும், உயர் நீதி மன்றம் இப்பிரிவு செல்லாது என அறிவித்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தில் இருந்த நிலையையே அப்போதைய மத்திய அரசு எடுத்துள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
பின்னர் ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் தலையீட்டால், நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுவதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பு நிலை எதையும் கொண்டிருக்காதபோதும், பிரிவு 377 செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அப்போது அறிவித்தது.
இப்போது இரண்டாம் முறையாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில், "ஓரினச்சேர்க்கை அனுமதிக்கப்பட்டால் எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி உள்ளிட்ட நோய்கள் மேலும் பரவுவதுடன், மனநல பாதிப்புகளும் மக்களை பாதிக்கும். ஓரினச்சேர்கையால் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. எனவே எல்லோரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்திருந்தால் மனித இனமே அழிந்திருக்கும். பல சமூக பிரச்சனைகளுக்கு இத்துடன் தொடர்புள்ளது. ஓரினச்சேர்க்கை என்பது வழக்கத்துக்கு முரணானது, தகாதது, அருவருப்பானது மற்றும் தவறானது" என்று மத்திய சுகாதார அமைச்சகம் 70 பக்கங்கள் கொண்ட பிரமானப் பாத்திரம் தாக்கல் செய்தது.
கடைசி நேரத்தில் இதை மறுத்த உள்துறை அமைச்சகம், பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை ஒத்த ஒரு நான்கு பக்க பிராமானப் பத்திரத்தை தாக்கல் செய்தது. ஆட்சிக்கு வந்தால் பிரிவு 377 நீக்கப்படுமென்று பாரதிய ஜனதா கூறியிருந்தது.
நீதித்துறை விவாதங்கள் உள்ளபோதிலும், அந்தரங்க உரிமை என்பது ஒவ்வொரு வழக்கின் அடிப்படையிலும் முடிவு செய்யப்படுகிறது. தனிமனித சுதந்திரம், இந்தியா முழுதும் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக இடம் பெயர்வதற்கான உரிமை , பேச்சுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அந்தரங்க உரிமையும் ஓர் அடிப்படை உரிமை ஆகியுள்ள நிலையில், பாலினத் தேர்வை மேற்கொள்ளும் உரிமையை அறுதியான உரிமையாக நீதிமன்றம் அறிவிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் முன் இயற்கையின் விதி என்று கருத்தப்பட்டவற்றை அடியோடு மாற்றிய அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவ முன்னேற்றங்கள் ஆகியவற்றையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று நீதிமன்றத்தின் முடிவு தெரிந்துவிடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்