ஒருபாலுறவு குற்றமல்ல: "இறுதியில் வென்றது காதலே..."

  • அபர்ணா ராமமூர்த்தி
  • பிபிசி தமிழ்
செயற்பாட்டாளர் மாலினி

பட மூலாதாரம், FACEBOOK@MALINI JEEVARATHNAM

படக்குறிப்பு,

செயற்பாட்டாளர் மாலினி

"நாங்கள் ஒருபாலுறவு குறித்து பிரசங்கம் செய்யவில்லை. எங்களை ஒதுக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். நாங்களும் சக மனிதர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் கம்பீரமாக சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது". இது ஒருபாலின சேர்க்கை குறித்து குறும்படம் இயக்கி சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற செயற்பாட்டாளர் மாலினியின் வார்த்தைகள்.

இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒருபாலுறவைக் குற்றமாக்கும் சட்டப்பிரிவை நீக்கி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய செயற்பாட்டாளர் மாலினி. "அழுவதா? சிரிப்பதா? என்ன சொல்வதென்று தெரியவில்லை. திகட்ட திகட்ட சந்தோஷமாக இருக்கிறது" என்று அவர் கூறும் குரலில் இன்பம் பெருக்கெடுப்பதை நம்மால் உணர முடிகிறது.

"இது உண்மையா என்று கூட என்னால் நம்ப முடியவில்லை. இந்த தீர்ப்பு வருவதற்காக உழைத்த ஒவ்வொரு ஒருபாலுறவு செயற்பாட்டாளருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்கிறார் மாலினி.

பட மூலாதாரம், FACEBOOK@MALINI JEEVARATHNAM

ஒருபாலுறவு குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் சமூகத்தில் இதற்கு இருக்கும் மனத்தடை குறித்து கேட்டதற்கு பதிலளித்த மாலினி, "மாற்ற முடியாதது என்று எதுவுமில்லை. எதையும் மாற்ற முடியும். மாற்றிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

'எங்கள் உரிமைகளை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை'

"இதன் பிறகுதான் அதிகளவிலான நிராகரிப்பை நாங்கள் சந்திக்கப் போகிறோம். ஆனால், இனி எங்களிடம் சட்டம் உள்ளது. எங்களை ஒடுக்கவோ, ஒதுக்கவோ, எங்களின் உரிமைகளை தடுக்கவோ யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது."

'உங்கள் அமைதி உங்களை பாதுகாக்காது' என்று ஆர்ட்ரே லார்டே சொன்னதைதான் நான் இங்கு கூற விரும்புகிறேன். யாரேனும் உங்களை ஒடுக்க வந்தால், நீங்கள் அமைதியாக இருக்காதீர்கள். அதே நேரத்தில் இதனை தவறாகவும் பயன்படுத்திவிடக் கூடாது. யாரின் விருப்பமும் இல்லாமல் யாரையும் தொடுவது என்பது தவறு. எதையும் யார் மீதும் திணிக்கக்கூடாது.

"அடுத்தகட்டமாக இதுகுறித்து திரைப்படம் இயக்க வேண்டும் என்பதே என் கனவு, ஆசை எல்லாமே. கலை என்ற ஒன்றினால் சமூகத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். என் மக்களுக்காக ஒரு கலைஞனாக நான் திரைப்படம் எடுப்பேன்" என்றும் மாலினி தெரிவித்தார்.

'காதல்' - இறுதியில் காதலே வென்றது" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாலினி.

"வாழ்க்கையை அர்த்தமாக்குவது காதல். காதலிக்கும் உரிமையே நம்மை மனிதனாக்குகிறது. காதலை வெளிப்படுத்துவது குற்றம் என்றால் அது மனிதாபிமானத்திற்கு எதிரானது மற்றும் கொடூரமானது" என்று இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், SUPREME COURT OF INDIA

அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படுமா?

இதுகுறித்து கருத்து தெரிவித்த தஞ்சாவூரை சேர்ந்த ஆராய்ச்சி மாணவரான செம்மல், ஒருபாலுறவு குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளித்தாலும், ஒருபுறம் இது ஐயத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்.

"படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரின் மத்தியிலும் ஒருபாலினத்தவர் குறித்த விழிப்புணர்வு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், ஒருபாலுறவு குற்றமல்ல என்ற தீர்ப்பினால் சமூகத்தினரிடம் இருக்கும் மனத்தடை நீங்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது."

படக்குறிப்பு,

ஆராய்ச்சி மாணவர் செம்மல் (வலது)

வாடகைக்கு வீடு, அலுவலகங்களில் வேலை என எங்கும் புறக்கணிப்படாமல், இந்த தீர்ப்பால் இவர்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுமா என்பது தெரியவில்லை என்கிறார் செம்மல்.

"நான் ஒருபாலுறவினர்தான் என்று கூறும் சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் அவர்களது அடிப்படை தேவைகள் பூர்த்தி ஆகுமா என்பது தெரியவில்லை" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :