ஒருபாலுறவு: 'மதரீதியாக அல்ல; மானுட ரீதியாக அணுக வேண்டும்'

டாக்டர் ஷாலினி

பட மூலாதாரம், FACEBOOK@SHALINI

படக்குறிப்பு,

டாக்டர் ஷாலினி

ஒருபாலின உறவை தண்டனைக்குரிய குற்றமல்ல என இந்திய உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமையன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நீண்ட காலமாக பேசிவரும் பிரபல மனநல மருத்துவருமான டாக்டர் ஷாலினி, இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து:

கேள்வி: ஒருபாலின உறவு குற்றமல்ல என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இது மிக முக்கியமான தீர்ப்பு. முன்பிருந்த சட்டம், கிறிஸ்தவ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. மதங்கள் ஒருபாலின ஈர்ப்பைப் பாவம் என்று கருதியதால்தான் அவை சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டன. ஆனால், இந்தச் சட்டங்களை அமல்படுத்திய மேலை நாடுகளிலேயே ஒருபாலின ஈர்ப்பு குற்றமல்ல என்று நீண்ட நாட்களுக்கு முன்பே ஆக்கப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவிலும் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. பல வருடங்களுக்கு முன்னால், அதாவது 50-60 வருடங்களுக்கு முன்னால் ஒருபாலின ஈர்ப்பு என்றால் ஏதோ இயற்கைக்கு மாறானதோ, இயற்கையாக அப்படி இருக்காதோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால், இப்போது ஒருபாலின ஈர்ப்பு என்பது மனிதர்களிடம் மட்டுமல்ல; விலங்குகளிடமும்கூட இருக்கிறது என்ற புரிதல் வந்திருக்கிறது. இதனைத் தவறு என்று சொல்வதன் மூலம் ஒருபாலின ஈர்ப்பாளர்களுக்கு நாம் தவறு இழைக்கிறோம் என்ற புரிதல் வந்திருப்பதால் இதை குற்றமல்ல என்று ஆக்கியிருக்கிறோம்.

கே. சட்டம் ஒருபாலின ஈர்ப்பை குற்றமல்ல என்று சொல்லிவிட்டது. சமூகம் இதை ஏற்க எவ்வளவு காலம் ஆகக்கூடும்?

ப. ஒருபாலின ஈர்ப்பு குறித்து மிக முதிர்ச்சியான பார்வை, அந்த காலத்திலேயே நம் நாட்டில் இருந்திருக்கிறது. பல ஆழ்வார்களை இறைவனை நாயகி பாவத்தில் பாடியிருக்கிறார்கள். அதனால், இது ஏதோ நாம் பேசாத விஷயமல்ல. இது பலருக்குப் பிடித்திருக்கிறது; அதை நாம் குறைசொல்லக்கூடாது என்ற யதார்த்தமான பார்வையிலிருந்து நாம் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

கே. இந்த 377வது பிரிவின் கீழ் பெரிதாக யாரும் தண்டிக்கப்படவில்லையென்றாலும், சமூகம் சார்ந்த மனத் தடை மிகக் கடுமையாக இருந்தது. இப்போது சட்டம் போய்விட்டது. அதனால், சமூகத்தின் பார்வையும் மாறிவிடுமா?

ப. இதைப் பற்றி நாம் பேசாததால் நிறைய ஒருபாலின ஈர்ப்பாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு, இரு பாலின உறவுக்குள் தள்ளப்பட்டார்கள். அதனால், இன்னொருவரும் பாதிப்பிற்குள்ளானார்கள். ஒரு ஆண் ஒருபாலின ஈர்ப்பாளராக இருக்கும்போது, அவருக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தால் அந்தப் பெண் என்ன செய்வாள்? மேலும் இந்தியாவில் நாம் இம்மாதிரியான ஈர்ப்போடு நிம்மதியாக வாழ முடியாது என்ற எண்ணத்தில் வெளிநாடுகளுக்கு பலர் சென்றார்கள். நாம் அவர்களுடைய மன நிலையைப் புரிந்துகொள்ளாமல், அவர்களைத் தண்டித்துவந்தோம். இப்போது சட்டம் மாறியிருக்கிறது. அவர்களுக்கான உரிமை பேசப்படுகிறது. இதனால், சமுதாயத்தில் இதைப் பற்றிப் பேச்சு அடிபடும். சமூகம்தான் தன் மனதை விசாலமாக்கிக்கொள்ள முயற்சியெடுக்க வேண்டும்.

கே. ஒருபாலின ஈர்ப்பு என்பது ஒரு மாறுபாடு, அதைக் குணப்படுத்த முடியுமென்றெல்லாம் சில மருத்துவர்கள் இன்னமும் கூறுகிறார்கள்..

ப. இது ஒரு நோய் அல்ல. இது ஒரு தன்மை. 2-3 வயதிலேயே இந்த தன்மை வெளிப்படும். அவர்களை மாற்ற முயற்சிக்கக்கூடாது. மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகத்தினால், சிலருக்கு இம்மாதிரி ஈர்ப்பு ஏற்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் நாம் சிகிச்சையளிக்கலாம். மற்றபடி இதை நோயென்று பார்க்க வேண்டியதில்லை.

கே. ஒருபாலின ஈர்ப்பாளர்களின் பெற்றோர் தம் குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்?

ப. பெரும்பாலான ஒருபாலின ஈர்ப்பை மாற்ற முடியாது. இது சிகிச்சைக்கு அப்பாற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது பிறக்கும்போதே உருவாகும் தன்மை. எப்படி, இடது கைப் பழக்கம் இருக்கிறதோ அது போன்ற ஒரு இயல்பு. எப்படி இடது கையால் எழுதும் குழந்தையை வலது கையில் எழுதப் பழக்கக்கூடாது என்கிறோமோ அதுபோலத்தான், இவர்களையும் இரு பாலின ஈர்ப்பாளர்களாக மாற்ற முயற்சிக்கக்கூடாது. பெற்றோர்களாவது குறைந்த பட்சம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைகள், 'சரி, நம் பெற்றோராவது இதைப் புரிந்துகொள்கிறார்கள். நாம் வாழலாம். சந்தோஷமாக இருக்கலாம்' என்று நினைப்பார்கள். பெற்றோர் அவசியம் குழந்தைகளை ஆதரித்துத்தான் ஆக வேண்டும்.

கே. மதங்கள் ஒருபாலின ஈர்ப்பை எப்படி அணுகுகின்றன?

ப. இந்து மதம் இதைப் பற்றி திறந்த மனதோடுதான் இருக்கிறது. ஆப்ரஹாமிய மதங்களான யூதமும் கிறிஸ்தவமும் இதைக் கடுமையாக எதிர்த்தன. இஸ்லாம் இதை கடுமையாக எதிர்ப்பதாக நான் கேள்விப்படவில்லை. சில மதங்கள் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றன. சில மதங்கள் இதைத் தீவிரமாக எதிர்க்கின்றன. ஆனால், இந்த விவகாரத்தை மதரீதியாக அணுகுவது தவறு. அறிவியல் ரீதியாகவும் மானுட ரீதியாகவும்தான் அணுக வேண்டும்.

கே. ஒருபாலின ஈர்ப்பாளர்கள் தினம்தோறும் தன் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். வீடு கிடைப்பது, வேலை கிடைப்பது போன்றவை அவர்களுக்குப் பெரும் பிரச்சனையாக இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன செய்யலாம்?

ப. இனி ஒருபாலின ஈர்ப்பைக் காரணம் காட்டி யாராவது வீடோ,வேலையோ மறுத்தால் சட்டரீதியாக அதை அணுக முடியும். எங்களை, எங்கள் பாலின ஈர்ப்பை வைத்து பாகுபடுத்துகிறீர்கள், இது சமூக நீதிக்கு எதிரானது என்று சொல்ல முடியும். அவர்கள் தொடர்ந்து இது தொடர்பாக வாதாடி, அவர்களுக்குரிய இடத்தைப் பெறுவார்கள் என்றுதான் எதிர்பார்க்கிறோம். மற்றவர்களும் தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனக்குத் தெரிந்தது, தான் எப்படியிருக்கிறோம் என்பதுதான் சரி என்று பிடிவாதமாக இருக்கக்கூடாது.

பட மூலாதாரம், Getty Images

கே. ஒருபாலின ஈர்ப்பு எண்ணம் கொண்டவர்களைப் பற்றி, குறிப்பாக ஆண் ஒருபாலின ஈர்ப்பாளர்களைப் பற்றி சமூகத்தில் ஒரு மனத்தடை இருக்கிறது. அவர்கள் எப்போதுமே பாலியல் உறவுக்காக அழைப்பவர்கள் என்ற எண்ணம் இருக்கிறது..

ப. அது உண்மையல்ல. அவர்கள் செக்ஸைவிட, அன்பையும் காதலையும் பாசத்தையும் அரவணைப்பையும் பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரு உறவைத்தான் தேடுகிறார்கள். இந்த பெரிய வளையத்திற்குள் செக்ஸும் வரும். ஆனால், அவர்கள் வெறும் செக்ஸிற்காக மட்டும் அழைக்கிறார்கள் என்பது அவர்களைப் பற்றி சொல்லப்படும் கட்டுக்கதை. அதை நாம் நம்ப வேண்டிய அவசியமில்லை.

கே. ஒருபாலின ஈர்ப்பு குற்றமல்ல என்று ஆகிவிட்ட நிலையில், ஒருபாலின ஈர்ப்பாளர்களிடம் திருமணம் சாத்தியமா? அதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமா?

ப. சேர்ந்து வாழ்வது என்பது இனிமேல் சாத்தியமாகும். திருமணம் என்பது கட்டாயமல்ல. ஒப்புதலோடு சேர்ந்து வாழ்ந்தாலே அது சட்டபூர்வமானதுதான். இதற்காக ஒரு ஆடம்பரமான விழா தேவையில்லை. இது இல்லாமலேயே சேர்ந்து வாழலாம். சேர்ந்து வாழ்வது திருமணம் செய்து வாழ்வதற்கு இணையானது என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இது ஒருபாலின ஈர்ப்பாளர்களுக்கும் பொருந்தும். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பது இனிமேல்தான் தெரியவரும். அதற்கேற்றபடி சட்டங்களை நாம் மேம்படுத்த வேண்டியிருக்கும்.

கே. ஒருபாலின ஈர்ப்பு குறித்த இந்தத் தீர்ப்புக்கு கடுமையான எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ப. நமக்குத் தெரிந்த நியாயங்கள், இயல்புகளைத் தவிர, எத்தனையோ இந்த உலகில் இருக்கிறது. நமக்குத் தெரியாது, நம்முடைய அறியாமையால் இவ்வளவுதான் வாழ்க்கை என்று நாம் நினைப்பதால், நமக்கு மாறான பழக்கங்களைக் கொண்டவர்களைத் தண்டிக்க நமக்கு உரிமையில்லை. இயற்கை என்பது மிகப் பிரம்மாண்டமானது. நமக்குத் தெரிந்ததைவைத்து மட்டும் எந்த முடிவுக்கும் வரக்கூடாது. இதைப் பற்றிய கட்டுரைகள், ஆவணப் படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லையென்றால், அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். குறைசொல்லக் கூடாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :