போராடி வென்ற காதல் - திருமணச் சான்றிதழ் கிடைக்காத மூன்றாம் பால் தம்பதி

ஒருபாலுறவு கொள்வது சட்டவிரோதமானதல்ல என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது நாடு முழுவதும் கொண்டாட்டங்களையும் விவாதங்களையும் தூண்டியுள்ளது.

LGBT

எல்.ஜி.பி.டி (LGBT) குழுக்களைச் சேர்ந்தவரக்ளுக்கு (லெஸ்பியன் - பெண் ஒரு பாலுறவினர், கே - ஆண் ஒருபாலுறவினர், பை செக்சுவல் -இருபாலினத்தவர்கள் உடனும் உறவு கொள்வோர், டிரான்ஸ்ஜெண்டர் - பால் மாறிய திருநங்கை மற்றும் திருநம்பிகள்) இந்தத் தீர்ப்பு ஒரு சட்டபூர்வமான விடுதலையைத் தரும் என்று நம்பப்படுகிறது.

இந்த சூழலில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை பிரீத்திஷா, பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி பிரேம் குமார் இருவரும், தாங்கள் சந்தித்துவரும் ஒரு சட்டத் சிக்கல் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்கள்.

பிரீத்திஷா - பிரேம் இருவரும் சாதி, சடங்குகளை மறுத்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

பல புறக்கணிப்புகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டாலும் திருமண வாழ்க்கைக்கு இன்னும் இவர்களுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை.

இன்னும் கிடைக்காத சட்ட அங்கீகாரம்

அவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன என்பது பிரேம் மற்றும் பிரீத்திஷாவின் வார்த்தைகளில்..

"தயவு செய்து எங்களுக்கு திருமணம் நடந்ததற்கான சான்றிதழை வழங்குங்கள். இல்லாவிட்டால் எனக்கு வேறு வழியில்லை. எங்களால் அலைய முடியவில்லை. எங்களுக்கு பண வசதியும் இல்லை. நாங்கள் குடும்பமாக இணைந்து சுக துக்கங்களை பகிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் நன்றாக வாழ உதவுங்கள்."

இந்த ஆண்டு மகளிர் தினத்தன்று (மார்ச் 8, 2018) பிரீத்திஷா - பிரேம் இருவரும் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். இதுவரை இத்தகைய தம்பதிக்கு நிகழ்ந்த திருமணத்தை பதிவு செய்ததில்லை என்பதால் அதிகாரிகள் தங்கள் திருமணத்தை இதுவரை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யவில்லை என்று கூறுகிறார் பிரீத்திஷா.

"உரிமையுடன் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். குடும்பமாக வாழ்வது என்பது எல்லோருக்குமான அடிப்படை உரிமை. அப்படி இருக்கும்போது மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த எங்களுக்கு மட்டும் குடும்பமாக வாழ்வதற்கான உரிமை இல்லையா," என்று இன்னும் தங்கள் திருமண பதிவுச் சான்றிதழ் கிடைக்காதது குறித்து கேள்வி எழுப்புகிறார் பிரேம்.

மூன்றாம் பால், ஒருபாலுறவு குறித்து..

"நாங்கள் ஒருபாலுறவினர் அல்ல. பால் மாறி திருமணம் செய்துகொண்டவர்கள். ஆனால், அடுத்தவர்களின் படுக்கை அறையை எட்டிபார்ப்பது முறையல்ல என்றே நினைக்கிறன். நான் சிவ பக்தை. சைவம் உண்பவள். அதற்காக பிறரும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கமாட்டேன்," என்கிறார் பிரீத்திஷா.

"ஒரு ஊனமுற்ற குழந்தையை நாம் விட்டுவிட முடியாது. அதேபோல இத்தகைய உணர்வுகள் உள்ளவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு தேவை. அவர்களே ஏற்றுக்கொண்டாலும் அக்கம்பக்கத்தினர் ஏற்றுக்கொள்வதில்லை. இதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை? அவர்கள் தொடர்பே இல்லமல் இதில் நுழைந்து குட்டையைக் குழப்பி பிறர் வாழ்க்கை பாழாக்குக்கிறார்கள்."

பிரேம்,"இன்றைய தலைமுறையினர் மூன்றாம் பால், ஒருபாலுறவு போன்றவை குறித்து புரிந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு இது இயல்பானதாக்கி விட்டது. நமது பெற்றோர் தலைமுறையினர் இடையேதான் புரிதல் இல்லை. அவர்களுக்கு இது தவறாகத்தான் தெரியும். ஆனால், குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டால் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது," என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :