"என்னோட கடைசிகாலம் வரைக்கும் மரம் நடுவேன்" - 82 வயது முதியவரின் லட்சியம்

வேலுச்சாமி

கட்டடங்கள் மட்டுமே நிரம்பிய வாழ்வியல் சூழல் மனிதர்களுக்கு நல்லதல்ல என கூறும் திருப்பூரை சேர்ந்த 82 வயது முதியவர் வேலுச்சாமி, தனது தள்ளாத வயதிலும் மரக்கன்றுகளை சைக்கிளில் எடுத்துச் சென்று வீடு வீடாக கொடுத்து வருகிறார்.

பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்துள்ள திருப்பூரில் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில மக்கள் அதிகம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு எஞ்சிய குறைந்த நிலத்திலும் கடடடங்களை எழுப்பி வாடகைக்கு விட்டு விடுவது வழக்கம்.வீட்டிற்கு ஒரு மரமாவது நட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் பொதுமக்களை வலியுறுத்தி வரும் நிலையில் திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் மரங்கள், செடி கொடிகளின் ஊடே ஒரு வீட்டை காண முடிகிறது.

தனக்கு சொந்தமான 7 சென்ட் நிலத்தில் பெரும்பாலான இடத்தை மரங்கள், செடி கொடிகளால் நிரப்பியுள்ளார் 82 வயதான முதியவர் வேலுச்சாமி. கடுமையான வெயிலை கடந்து சென்று அவரது வீட்டருகே சென்றபோது குளுமையான காற்று நம்மை வரவேற்கிறது.

நுழைவாயிலிலேயே வரவேற்று நம்மை நகரப்பகுதியில் அவர் அமைத்திருக்கும் அவரது குட்டி காட்டிற்குள் அழைத்து சென்று பிபிசி தமிழிடம் பேசத்தொடங்கினார்.

''எனக்கு சின்ன வயசுல இருந்தே இயற்கை விவசாயத்துலயும், மரங்கள் வளர்க்கறதுலயும் ரொம்ப ஆசை. நான் 50 வருஷமா கோவை, கர்நாடகா பகுதிகளில் இயற்கை விவசாயம் செய்துட்டு இருந்தேன். திருப்பூருக்கு வந்து ஒரு பதினெட்டு வருஷம் ஆகிடுச்சு. சின்ன வயசுல இருந்து விவசாயம் மரங்கள்னு இருந்ததால இங்க வந்து பார்த்தா நெறைய கட்டடமா இருந்துச்சு. அது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு'' என்று கூறினார்.

''அப்பறம் என்னோட ஏழு சென்ட் எடத்துல அளவா வீடு கட்டிட்டு அதிகமான எடத்துல நிறைய மரங்க, செடி, கொடி, பூ, பழச்செடி எல்லாம் வச்சு பராமரிச்சுட்டு வந்தேன்'' என்று கூறுகிறார் முதியவர் வேலுச்சாமி.

அவரது சொந்த இடத்திலும் வீதிகளிலும் மரங்களை பராமரிப்பது மட்டுமல்லாமல், தனது தள்ளாத வயதிலும் ஒய்வு நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடுவீடாக சென்று மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து வருகிறார் முதியவர். தனது வீட்டை சுற்றியுள்ள ஏழு சென்ட் நிலத்தை ஒரு காடாகவே மாற்றி வைத்துள்ளார்.

அரசு, வேம்பு, ஆலமரம், பூவரசன், அத்தி, புங்கை, புன்னை, இலந்தை, வாதநாராயணன், ஈட்டி, கருங்காலி, பப்பாளி, முருங்கை, சிவப்பு மாதுளை, காரமரம், யானைக் குன்றிமணி என மரங்கள் தொடங்கி, அதற்கு இடையில் பழச்செடிகள், அரியவகை முலிகை செடிகளான மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி, பிரண்டை, வெள்ளெருக்கு, கரு ஊமத்தம், சிரியானங்கை, கற்பூரவள்ளி, நொச்சி, நின்னை, இலுப்பை, நிஷ்டக்கொடி என அந்த சிறிய இடத்திற்குள் ஒரு குட்டிக்காட்டை உருவாக்கி வைத்துள்ளார் முதியவர் வேலுச்சாமி.

இதில் இயற்கை முறையில் ஒவ்வொரு மரங்கள், செடி கொடிகளை வளர்க்கும் முறையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்.

வேலுச்சாமி

மேலும் பிபிசியிடம் முதியவர் பேசியபோது, ''இயற்கையாக உரங்களை உருவாக்கி பயன்படுத்தணும். மாட்டு கோமியம் பத்து லிட்டர், மாட்டு சாணம் பத்து கிலோ, முளை கட்டிய கொள்ளு இரண்டு கிலோ, கரும்பு வெல்லம் ரெண்டு கிலோ என எல்லாத்தையும் 200 லிட்டர் தண்ணீரில்நல்லா கலக்கணும். அதை 48 மணி நேரத்துக்கு காலையும் மாலையும், ரெண்டு வேளை கடிகார முள் சுத்தற மாறி சுத்தி விடனும். அந்த உரம் ஒரு ஏக்கர் நிலத்துல போடற பயிருக்கு போதுமானதா இருக்கும். அந்த உரம் நாம யூரியா பொட்டாஸ்னு போடறதவிட நல்ல வெளச்சல குடுக்கும், மண்ணும் உயிரோட இருக்கும். அதே மாறி குறைந்த அளவவுல தண்ணீர பயன்படுத்துற முறையையும் என்னை தேடி வரவங்களுக்கு சொல்லி தருகிறேன்'' என்கிறார்.

அவரை தேடி வருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் மரக்கன்றுகளை வழங்க தயார் நிலையில் வைத்துள்ளார். கன்றுகளை வாங்கிச் செல்பவர்களிடம் மரங்களை நடுவதன் அவசியத்தையும் இயற்கை விவசாயத்தை பற்றி தெரிவிப்பதையும் அவர் மறப்பதில்லை. காலியாக இருக்கும் இடங்களில் வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்கும் பட்சத்தில் குழி தோண்டுவதில் ஆரம்பித்து கன்று மரமாகும் வரை அதன் மீது கவனம் செலுத்துகிறார் முதியவர் வேலுச்சாமி.

''ஆரம்பத்துல என்னோட வீடு, வீட்டை சுத்தி இருக்குற இடத்தில மட்டும் மரங்களை நட்டு வளர்த்தேன்; அப்புறம் மெயின் ரோட்லையும் நிறைய மரங்களை வளர்த்தேன்; அதுக்கு அரசில்வாதிங்க, வேற ஒருசிலரு ரோட்ல மரமெல்லாம் நடக்கூடாதுன்னு சண்டைக்கு வருவாங்க. அவங்ககிட்டயும் பொறுமையா மரம் வளர்ப்பதை பத்தி எடுத்து சொல்லுவேன்'' என்று வேலுச்சாமி தெரிவித்தார்.

வேலுச்சாமி

''அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. ஆனா என்னோட கடைசி காலம் வரைக்கும் மரங்கள நட்டுகிட்டேதான் இருப்பேன். அதுக்காகவே என்னோட நண்பர்களோட சேந்து மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்துல ஒரு ஏக்கர் நிலம் வாங்கி போட்டுருக்கேன. அங்கபோய் நிறைய மரங்கள நடப்போறேன். அதுல இப்ப இருக்குற குழந்தைங்களுக்கு இயற்கை விவசாயத்த பத்தி விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவேன்'' என வெள்ளந்தியாகா சிரித்துக்கொண்டே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முதியவர் வேலுச்சாமி.

முதியவர் வேலுச்சாமியை அந்த பகுதியினர் மிகவும் மரியாதையோடும் அன்போடும் பார்க்கின்றனர். மரம் தரும் சாமி என்றே சிலர் கூறுகின்றனர்.

முதியவர் குறித்து அந்த பகுதியை சேர்ந்த சரவணா பிபிசி தமிழிடம் கூறும்போது, ''அய்யாவுக்கு ரொம்ப வயசாகிருச்சு, ஆனாலும் சைக்கிளை எடுத்துட்டு வீடு வீடா மரச்செடி கொடுக்க போவாரு. அவரு வீட்டுக்கு எப்ப போனாலும் வரவங்களுக்கு குடுக்க செடி ரெடியா வச்சுருப்பாரு. நெறையபேர் அய்யாவ தேடி வந்து விவரம் கேட்டுட்டு போவாங்க. இந்த ஏரியாவுல எல்லாம் அவர் வச்ச மரம்தான்'' என பெருமையுடன் முதியவரை பற்றி கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :