"நான் டி.ஜி.பி. ஆவதை தடுக்கவே குட்கா விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டது": ஜார்ஜ்

ஜார்ஜ்
படக்குறிப்பு,

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜார்ஜ்

தானோ, டி.கே. ராஜேந்திரனோ காவல்துறை தலைவராவதைத் தடுக்கவே குட்கா ஊழல் விவகாரத்தில் தங்களை சம்பந்தப்படுத்தி தகவல்கள் வெளியிடப்பட்டன என சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ். ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை ஜார்ஜின் வீட்டில் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா என்ற பாக்கிற்கு தடைவிதிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் ஜார்ஜ். அந்த காலகட்டத்தில் சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில் ஒரு குட்கா கிடங்கு ஒன்றில் மிகப் பெரிய சோதனை நடத்தப்பட்டது. இதற்கு பிறகு இந்த விவகாரத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வருமானவரித் துறை எம்டிஎம் குட்கா உற்பத்தியாளர் மாதவராவின் இருப்பிடங்களில் நடத்திய சோதனையில், அவரது நாட்குறிப்பு சிக்கியது. அதில் காவல் ஆணையர் ஜார்ஜ் பெயரும் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அந்தத் தருணத்தில் மூன்றாவது முறையாக சென்னை நகர ஆணையரான ஜார்ஜ் குட்கா முறைகேடு குறித்து அதிகாரிகள் சிலர் பெயரைக் குறிப்பிட்டு தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதன் பின்னர் அவர் ஓய்வுபெற்றார்.

இந்த நிலையில், தி.மு.க. தொடர்ந்த வழக்கை அடுத்து குட்கா ஊழல் விவகாரத்தை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த இரு நாட்களாக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன், முன்னாள் ஆணையர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரது இல்லங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து தன் தரப்பைத் தெரிவிப்பதற்காக முன்னாள் காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த செய்தியாளர் சந்திப்பில் பின்வருமாறு கூறினார் ஜார்ஜ்: "சட்டமன்ற உறுப்பினரான அன்பழகன், குட்கா விவகாரம் குறித்து சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். குட்கா தயாரிப்பாளர்களால் காவல்துறை ஆணையருக்கு 21.4.2016, 20.05.2016, 20.06.2016 ஆகிய மூன்று தேதிகளில் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த காலகட்டத்தில் நான் காவல்துறை ஆணையராக இருக்கவில்லை. சென்னையின் காவல்துறை ஆணையராக இருந்த நான், கால்பந்து விவகாரத்தால் 10.10. 2015 ஆன்று இடமாற்றம் செய்யப்பட்டேன். மீண்டும் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதிதான் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டேன்.

அந்த நேரத்தில் ஆணையராக இருந்தவர் மீது நான் குற்றம்சாட்டவில்லை. அன்பழகனின் மனுவில் நான் அந்த நேரத்தில் ஆணையராக இருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல என்று சொல்லவருகிறேன்.

பட மூலாதாரம், MAIL TODAY

எதிர்கட்சியின் வழக்கறிஞராக இருந்த வில்சன் இதைப் புரிந்துகொண்டிருக்கலாம். அதனால், அவருடைய மனுவில் என் பெயர் இடம்பெறவில்லை. சி.பி.ஐயின் முதல் தகவல் அறிக்கையைப் பார்த்தாலே அது புரியும். பாரா 34ல் வில்சனின் வாதம் இடம்பெற்றிருக்கிறது. அதில் அவர் ஒரு கடிதத்தை மேற்கோள்காட்டியிருக்கிறார். அடுத்து வந்த காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் உள்துறைச் செயலருக்கு எழுதிய கடித்தின் அடிப்படையில் முதல்கட்ட ஆதாரம் இருப்பதாக வில்சன் அதில் சொல்கிறார். அதாவது, அடுத்த வந்த ஆணையர் என்கிறார்.

2016ல் நான் மீண்டும் ஆணையராக நியமிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதைச் சொல்ல விரும்புகிறேன். அந்தத் தருணத்தில் குட்கா ஊழல் குறித்து வதந்திகள் பரவ ஆரம்பித்தன. ஆணையர் மட்டத்தில் மூத்த அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அந்தத் தருணத்திலேயே அரசுக்கு இதைப் பற்றித் தெரியும்; இது தொடர்பாக உயர் மட்டத்தில் விவாதம் நடந்திருக்கிறது, முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதையும் நான் அறிந்தேன். ஆனால், விசாரணை எதற்கும் உத்தரவிடப்படவில்லை.

இந்த காலகட்டத்தில், டிசம்பர் முதல் வாரத்தில் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அந்தத் தருணத்தில் மாநகர ஆணையராக இருந்த நான், சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவிவரும் இந்த வதந்திகளையும் தவறான செய்திகளையும் நிறுத்த ஏதாவது விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென நினைத்தேன். அந்தத் தருணத்தில் ஆணையர் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருந்ததால், நானே விசாரணைக்கு உத்தரவிட்டால் சரியாக இருக்காது என நினைத்தேன்.

ஆகவே, வேறு ஏதாவது அமைப்பு விசாரணை நடத்தினால் நன்றாக இருக்குமென நினைத்தேன். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு ஒரு அறிக்கை அளித்தேன். அவை ஊடகங்களில் வந்துவிட்டன.

இதற்கு முன்பாக ஒரு ஆரம்பகட்ட விசாரணை நடத்தினேன். உளவுப் பிரிவின் துணை ஆணையராக இருந்த விமலாவை அழைத்து விசாரித்தேன். அவர் அதற்கு முன்பாக மாதாவரம் பகுதியின் துணை ஆணையராக பல நாட்கள் பணியாற்றியவர். அவர் ஒரு நல்ல அதிகாரி. "நீங்கள் நீண்ட காலம் துணை ஆணையராக இருந்தவர். உங்களுக்கு எப்படி குட்கா விவகாரம் குறித்து தெரியாமல் போனது?" என்று கேட்டேன். அவர் தெரியாது என்று பதிலளித்தார்.

விமலா அளித்த அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது: 'நான் உளவுப் பிரிவின் துணை ஆணையராக 20.8.2015ல் செயல்பட ஆரம்பித்தேன். அதற்கு முன்பாக, மாதாவரம் காவல் மாவட்டத்தில் பணியாற்றினேன். அப்போது மத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செங்குன்றத்தில் உள்ள தீர்த்தங்கரையம்பட்டுவில் சோதனை ஒன்றை மேற்கொண்டனர். அங்கிருந்த பான் மசாலா பொருட்களைக் கைப்பற்றினர். நான் அங்கு புழல் பகுதியின் இணை ஆணையர் மன்னர் மன்னுடன் சென்றேன். ஆய்வாளர் சம்பத்தும் உடன் வந்தார். இது 2014 ஜூன் எட்டாம் தேதி நடந்தது. அந்த நேரத்தில் மத்தியக் குற்றப் பிரிவின் துணை ஆணையராக இருந்த ஜெயக்குமாரும் அங்கு வந்தார்.

அந்த கிடங்கில் பாக்குப் பொடி, எலக்காய், கிராம்பு போன்ற பொருட்கள் இருந்தன. இதைக் கலக்க சிறிய எந்திரங்களும் இருந்தன. புகையிலைப் பொருட்கள் எதையும் நான் பார்க்கவில்லை. இது குறித்து தன் உயரதிகாரிகளுக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் (திருவள்ளூர்) அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியான சிவகுமார் அங்கு வந்து அந்தப் பொருட்கள் தடைசெய்யப்பட்டவையா என ஆராய்ந்தார்.

அதில், அந்த பொருட்கள் பான் மசாலா தயாரிக்க ஏற்றவை என சான்றிதழ் அளிக்கப்பட்டதால் நடவடிக்கை கைவிடப்பட்டது என அறிக்கை அளிக்கப்பட்டது."

பட மூலாதாரம், Getty Images

அங்கு சென்ற மற்றொரு அதிகாரியிடமும் நான் விசாரித்தேன். அவர் நான்கு ஆய்வாளர்களுடன் அங்கு சென்றார். ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு இந்த விவகாரம் துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு ஃபோனில் தெரிவிக்கப்பட்டது. அவர் இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டு, மாதவரத்தில் நடந்துகொண்டிருந்த செம்மரக்கட்டை தொடர்பான சோதனைக்குச் செல்லும்படி கூறப்பட்டார்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு இந்த சோதனை குறித்துத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் அந்த அணியை அங்கிருந்து செல்லும்படி கூறியிருக்கிறார் என்பதுதான்.

இந்த குட்கா விவகாரம் 2011லிருந்து பல ஆண்டுகளுக்கு நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் எனது புரிதல். அந்த காலகட்டத்தில் பணிபுரிந்த ஆணையர், துணை ஆணையர்கள், இணை ஆணையர்கள், கூடுதல் ஆணையர்கள், ஆய்வாளர்களின் பட்டியலையும் விமலா என்னிடம் அளித்தார். கூடுதல் ஆணையர்கள் தாமரைக் கண்ணன், ஆபாஷ்குமார், ரவிகுமார், கருணாசாகர், சேஷசாயி, ஸ்ரீதர், வடபகுதி இணை ஆணையர்கள் செந்தாமரைக் கண்ணன், கே. சங்கர், ஸ்ரீதர், தினகரன், ஜோஷி நிர்மல் குமார், மாதாவரம் இணை ஆணையர்கள் ராஜேந்திரன், லட்சுமி, புகழேந்தி, ராமகிருஷ்ணன், விமலா, உதவி ஆணையர்கள் கந்தசாமி, மன்னர்மன்னன், லிங்கத்திருமாறன் ஆகியோர் இந்த காலகட்டத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் மாநகர ஆணையராக ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரன், திரிபாதி, ஷுக்லா ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.

நான் மூன்றாவது முறையாக சென்னை மாநகர ஆணையராக ஆன பிறகு, மத்திய குற்றப் பிரிவில் கூடுதல் ஆணையராக இருந்த நல்லசிவத்தை அழைத்து, ஜெயக்குமார் சோதனை நடந்த இடத்திற்குச் சென்றது தொடர்பாக எனக்கு ஏன் சொல்லவில்லையென்று கேட்டேன். அவர், ஜெயக்குமார் தனக்கு இதைச் சொல்லவில்லை என்றார். ஃபோனில்கூட யாரும் இது தொடர்பாக சொல்லவில்லையென்றார்.

உளவுத் துறை அதிகாரியாக இருந்த வரதராஜு, அப்போதைய ஆணையர் டி.கே. ராஜேந்திரனுக்கு இவ்வளவு பெரிய நடவடிக்கை குறித்து அறக்கை அளித்தாரா என, ராஜேந்திரனிடம் கேட்டேன். அவர் இல்லையென்றார். விமலா தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருக்கிறார். யார் அந்த உயர் அதிகாரிகள்? இவையெல்லாம் அடிப்படையான கேள்விகள்.

சென்னையில் சுமார் 300 காவல் நிலையங்கள் உள்ளன. இவ்வளவு பெரிய சட்டவிரோத நடவடிக்கை ஆணையரின் ஆதரவுடன் மட்டும் நடந்துவிட முடியுமா? அதற்குக் கீழே ஆறேழு மட்டங்கள் இருக்கின்றன. பல்வேறு காலகட்டங்களில் இது நடந்திருக்கிறது. அவர்களுக்கெல்லாம் இது தெரியுமா? அவர்கள் என்ன செய்தார்கள்?

ஒரு குடும்பம் போல ஒன்றாகப் பணியாற்றிய அதிகாரிகளைப் பற்றியே நான் சொல்ல வேண்டியிருப்பது குறித்து நான் வருந்துகிறேன்.

எனக்குக் கீழே பணியாற்றிய அதிகாரிகளுக்கு, அவர்களது பணி குறித்து நல்ல மதிப்பீடுகளையே வழங்கியிருக்கிறேன். ஆனால், துரோகம் செய்த அதிகாரிகளைப் பற்றி என்ன சொல்வது? ஆணையர் அலுவலகத்தில் இருந்தபடியே பணியாற்றிய ஜெயக்குமாருக்கு மிக மோசமான பணி மதிப்பீட்டை அளித்தேன். சென்னை நகரில் நடக்கும் திட்டமிடப்பட்ட, பெரிய குற்றங்களையும் கும்பல் குற்றங்களையும் குறைக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பான தகவல்கள் அவருக்குத் தெரிந்தபோதும் அவர் அதனை தன் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. அவர் நம்பிக்கைக்கு உரியவகையில் நடந்துகொள்ளவில்லை. அவருக்கு சராசரிக்கும் குறைந்த மதிப்பீட்டையே நான் அளித்தேன்.

இந்த அறிக்கைக்குப் பிறகு, உள்ளூர் ஊடகங்கள் என் மீது தாக்குதல் நடத்தின. என் முகத்தைப் போட்டு போஸ்டர்கள் அடித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டன.

குட்கா ஊழல் விவகாரம் எப்போது வெளியானது என்று பாருங்கள். 2017 ஜூன் 27ஆம் தேதி. அதாவது புதிய காவல் துறை தலைவர் நியமனம் செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக வெளியானது.

நேற்று சிபிஐ சோதனை நடத்தியபோது என்ன எடுத்துச் சென்றார்கள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. 1994ல் வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடத்தின் விற்பனைப் பத்திரம், சில ஒத்தி பத்திரங்கள், காரின் காப்பீட்டு ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன."

ஜார்ஜ் இந்தத் தகவல்களைத் தெரிவித்த பிறகு, செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.

18.12.2015 அன்று முன்னாள் ஆணையருக்கு கிறிஸ்துமஸிற்காக 15 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை ஆவணங்களில் சொல்லப்பட்டிருப்பது குறித்து குறிப்பாகக் கேட்டபோது ஜார்ஜ் கோபமடைந்தார். "இது முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்தவர், ஒரு முன்னாள் ஆணையருக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டுமெனக் கேள்வியெழுப்பினார். நான் ஒரு கிறிஸ்தவன். ஆகவே என் மதத்தை தொடர்புபடுத்தி யாராவது பணம் வாங்கியிருக்கலாம். அப்படியிருந்தால் அது பற்றி விசாரிக்கட்டும்." என்று கோபத்துடன் பதிலளித்தார்.

"இந்த எல்லா விவகாரமுமே பெரிதாக்கப்பட்டது, நானோ டி.கே. ராஜேந்திரனோ காவல்துறைத் தலைவராக ஆவதைத் தடுப்பதற்காகத்தான். டி.கே. ராஜேந்திரன் ஓய்வுபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக இந்த விவகாரம் வெளியானது. நான் குட்கா ஊழலே நடக்கவில்லையெனக் கூறவில்லை. ஆனால், எப்படி ரகசியமான ஆவணங்கள் எப்படி வெளியாகின?" என ஜார்ஜ் கேள்விகளை எழுப்பினார்.

தானோ, டி.கே. ராஜேந்திரனோ டி.ஜி.பியாவதைத் தடுக்கவே இந்த விவகாரம் வெளியிடப்பட்டது என்பதை செய்தியாளர் சந்திப்பின் இறுதியிலும் ஜார்ஜ் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :