'தட்டில் இருந்து உணவு காணாமல் போகும் நாள் வெகுதூரமில்லை…'

  • பிரியங்கா துபே
  • பிபிசி செய்தியாளர்
'தட்டில் இருந்து உணவு காணமல் போகும் நாள் வெகுதூரமில்லை…'

பட மூலாதாரம், Thinkstock

'இந்தியாவில் விவசாயிகள் இறந்தால் அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை', இதை படித்துக் கொண்டிருக்கும்போதே, சாதம், சப்பாத்தி, சோளம், பருப்பு, வடை, பழங்கள் என எதாவது ஒரு உணவை நீங்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கலாம்.

எந்தவொரு உணவுப்பொருளாக இருந்தாலும், அதை தயாரிக்க தேவையான அடிப்படை மூலப்பொருட்களான தானியங்களும், காய்கறிகளும், கனிகளும் பூமியில் விளைபவை. அதை பச்சையாகவோ, சமைத்தோ விரும்பிய விதத்தில் நாம் உண்கிறோம்.

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றில், முதலில் குறிப்பிடப்படும் உணவு இல்லை என்றால் அடிப்படை தேவைகள் யாவை என்ற கேள்விகளை கேட்கவே தேவையில்லை. ஏன் தெரியுமா? மனித இனமே பூண்டோடு அழிந்துவிடும் பட்சத்தில் பிறகு கேள்விக்கும் பதிலுக்கும் இடம் எங்கே?

நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருள், நமது நகரில் நமக்கு கிடைக்கிறது. வீட்டில் அமர்ந்து கொண்டு, விவசாயிகளிடம் இருந்து கிடைத்த உணவுப் பொருட்களை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டுக் கொண்டே தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறோம், ஆன்லைனில் கழிவு விலையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆன்லைனில் டிசைனர் ஆடைகளை பார்த்து மகிழும்போதும், வாங்கும்போதும், அவற்றுக்கான மூலப்பொருட்களை தந்தவர் விதர்பாவின் பருத்தி விவசாயியாகவும் இருக்கலாம் என்பது பலருக்கு தெரியாது. அந்த மூலப்பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை அடிக்கடி படிக்க நேரும்போது, அவை படித்துவிட்டு கடந்து செல்லும் ஒரு செய்தியாக உங்களுக்கு தோன்றலாம்.

தற்கொலை செய்துக் கொள்ளும் விவசாயியின் பெயரோ, ஊரோ எதுவுமே தெரிய வேண்டாம். தொடர்ந்து பல ஆண்டுகளாக விவசாயத் தொழில் செய்பவர்கள் நசிந்து, நலிந்து போயிருக்கின்றனர் என்பதே அவர்களின் தற்கொலை செய்திகள் உணர்த்தும் மறைபொருள். இது உள்ளார்ந்த அர்த்தம் மட்டுமல்ல, வாழ்வா சாவா எனும் அவர்களின் போராட்டம். சராசரியாக, இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என்ற தகவல் நிலைமையின் விபரீதத்திற்கு கட்டியம் கூறுகிறது.

சரி, இந்த நிலைமைக்கு காரணம் என்ன? விவசாயத்தில் ஏற்படும் தொடர் நஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியாதது, விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்றமுடியாமல் வாழ்வாதாரமே நசிந்து போக, எதிர்காலம் இருண்டுபோக, வாழ்வதைவிட சாவதே மேல் என்று விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.

தங்கள் பயிர்களைப் பாதுகாப்பதற்காக வாங்கி வைத்த பூச்சிக்கொல்லியே சில நேரங்களில் அவர்களின் உயிரை குடிக்கும் மருந்தாகிவிடுகிறது. ரயில் தண்டவாளங்கள், கிணறுகள், நாலு முழக்கயிறு போன்றவையே பிரச்சனைகளின் முடிவு என்று நினைத்து, வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

ஆனால், விவசாயிகளின் நிலைமை மோசமாகிவிட்டது, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது போன்ற செய்திகளை கடந்த இரு தசாப்தங்களில் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பதால், அவை பொதுமக்களிடையே பெரிய அளவு தாக்கத்தையோ வருத்தத்தையோ ஏற்படுத்துவதில்லை.

பட மூலாதாரம், Getty Images

விவசாய நெருக்கடி பற்றி கவலைப்பட வேண்டியது ஏன்?

இந்தியாவில் தொடர்ந்து தீவிரமடைந்துக் கொண்டே செல்லும் விவசாய நெருக்கடி பற்றி பேசுவதற்கான அவசியம் என்ன? கேள்விக்கான பதிலாக புள்ளிவிவரங்களை கொடுப்பதற்கு முன்னர் ஒரு சிறிய கதையை கேளுங்கள்.

நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, முதன்முதலாக பள்ளியின் இறைவணக்கக் கூட்டத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 'இந்திய விவசாயி' என்ற தலைப்பில் பேசிய நான், 'இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாயியே இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு' என்று பேசியது இப்போதும் என் நினைவில் உள்ளது.

சிறுமியாக இருந்தபோது, அப்பா எழுதிக் கொடுத்த உரையை 'பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயி' என்று பயந்துக்கொண்டே மேடை ஏறி பேசினேன். ஆனால் தற்போது வளர்ந்தபிறகு, 'பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்பட்ட விவசாயியின் பொருளாதார முதுகெலும்பே நொறுங்கும் நிலையில் உள்ளது' என்பது எனக்கு புரிகிறது.

'விவசாயி' என்ற பதத்திற்கு உணவு வழங்குபவர் என்றே பொருள் சொல்லும் பாரம்பரியத்தை கொண்ட இந்தியாவில், கடந்த 20 ஆண்டுகளாக தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள், பத்திரிகைகள் முதல் நாடாளுமன்றம் மேசைகள் வரை வெறும் செய்திகளாகவே தங்கிவிடுகின்றன.

'விவசாயி தற்கொலை' என்பது, பிரதான செய்தி ஊடகங்களில், ஒரு சம்பிரதாயமான செய்தியாக மாறிவிட்டது. 'விவசாயிகளின் மகன்கள்' என்று கூறிக்கொள்ளும் தலைவர்களால் நிரம்பியிருக்கும் நாடாளுமன்றத்தில் இருந்து 'கடன் தள்ளுபடி' என்ற முழக்கங்கள், விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடையாத காரணம் என்ன?

பட மூலாதாரம், Reuters

70 ஆண்டுகளுக்கு பிறகும் மாறாத விவசாயிகளின் நிலை

இதற்கிடையில், விவசாயிகளின் பிரச்சனையை நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியை நாங்கள் மேற்கொள்கிறோம். நாசிக்கில் இருந்து மும்பை வரை, விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டனர்.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்னதாக, பிரபல எழுத்தாளர் பிரேம்சந்த்தின் கதைகளில் இடம் பெற்றிருந்த விவசாயிகளின் நிலை 70 ஆண்டுகளுக்கு பிறகும் மாறவில்லை.

தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் (NCRB) தரவுகளின்படி 1995இல் இருந்து, இதுவரை இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 2016ஆம் ஆண்டில், இந்தியாவில் 11,370 விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டிருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

விவசாயச் செலவுகள் அதிகரித்து இருப்பதால், விவசாயம் செய்வதற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போவதே தற்கொலைகளின் பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம்.

விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, பருவமழை பொய்த்துப்போவது, போன்றவை விவசாய நெருக்கடிக்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் விட தற்கொலைக்கு பெரிய காரணம் விவசாயிளின் அதிருப்தியே.

பட மூலாதாரம், Getty Images

விவசாயிகளின் நிலை பற்றிய பிபிசி தொடர்

ஆனால், உண்மை என்னவென்றால் நம் நாடு விவசாயத்தை பிரதானமாக கொண்ட நாடு. விவசாயிகளிடம் மட்டுமே நாடு அதிக நம்பிக்கை கொள்ளமுடியும். விவசாயிகளைப் பற்றி சிறப்பு கவனம் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் நமது குழந்தைகளின் தட்டில் சாதமோ, வேறு எதாவது உணவோ இருக்காது.

இந்திய நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கும் 'விவசாயிகளின் வாரிசுகள்', தேர்தலின்போது, விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளாத இந்தியாவை உருவாக்குவதாக கொடுத்த உறுதிமொழிகளை நினைவுபடுத்தவேண்டும். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட இந்திய நாட்டை 'விவசாயிகள் தற்கொலை' அதிகமாக செய்து கொண்ட நாடாக மாற்றுவதில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

'விவசாயிகள் தற்கொலை' மற்றும் 'விவசாய பிரச்சனை' பற்றி சிறப்புத் தொடர் ஒன்றை பிபிசி செய்திப்பிரிவு தொடங்குகிறது. இந்தத் தொடரில், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பு வெளியாகும்.

கடந்த இரண்டு மாதங்களாக இந்த மூன்று மாநிலங்களிலும், 9 மாவட்டங்களில் சுமார் 5000 கிலோமீட்டர் பயணித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய விவசாயம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி, பிரச்சனைகள், சிக்கல்களை அலசும் இந்த சிறப்புத் தொடர், அவற்றில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகளையும் அலசுகிறது.

இந்த தொடரில் என்ன நடக்கும்?

இந்த சிறப்புத் தொடரில் கள ஆய்வுகளை பஞ்சாபின் பர்னாலாவில் இருந்து ஹர்பால் கெளர் மற்றும் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் இருந்து பூஜா ஆவுட் வழங்குவார்கள்.

தெலுங்கானாவின் வாரங்கலில் வசிக்கும் விவசாயிகள், தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடும் தங்கள் முயற்சிகளைப் பற்றி பகிர்ந்துக் கொள்ளவிருக்கின்றனர்.

உங்களுடைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :