14 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஹர்திக் பட்டேலின் உடல்நிலை மோசமடைந்தது
குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 14 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த ஹர்திக் பட்டேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், @HARDIKPATEL_
உண்ணாவிரதம் இருக்கும் ஹர்திக் பட்டேல்
பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஹர்திக் பட்டேல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
கடந்த 2 நாட்களாக அவர் தண்ணீர்கூட குடிக்காததால், உடலில் நீர்சத்து குறைந்தது. ஹார்திக் படேலை சந்தித்து, உண்ணாவிரதத்தை முறித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார் பாடிதார் இனத் தலைவர் நரேஷ் பட்டேல். அதன்பிறகு, 14வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) அவர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பட மூலாதாரம், @HARDIKPATEL_
ஹர்திக் பட்டேல்
ஹர்திக்கின் உண்ணாவிரத்த்தின் பின்னணியில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான் என்று குஜராத் மாநில அரசு குற்றம் சாட்டுகிறது. ஹர்திக் பட்டேலின் உண்ணாவிரதம் தொடங்கிய பிறகு, சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா ஆம் ஆத்மி கட்சி மற்றும் தி.மு.க தலைவர்களும் அகமதாபாத் சென்று ஹர்திக் பட்டேலை சந்தித்தனர்.
குஜராத் மாநிலத்தில் பட்டேல் சிறுபான்மை இனத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் பட்டேல் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார்.
போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 14 பேர் உயிரிழந்தனர். அந்த போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அகமதாபாத், காந்தி நகரில், தனது பண்ணை வீட்டு வளாகத்தில் ஹர்திக் பட்டேல் உண்ணா விரதத்தை துவக்கினார்.
பட மூலாதாரம், @HARDIKPATEL_
ஹர்திக் பட்டேல்
இதற்கிடையில் ஹர்திக் பட்டேல் உயில் ஒன்றை எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. 25 வயது இளைஞர் ஒருவர், பிரபலமானவராகவும், உண்ணாவிரதம் இருப்பதாலும் அவர் உயில் எழுதியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.
குஜராத்தின் மக்கள் தொகையில் 14 சதவீதமாக இருக்கும் இந்த சாதி சமூக ரீதியில் மேலே இருக்கிற, செல்வாக்கு மிக்க விவசாய சாதி. இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தீவிரமாகப் போராடிவருகின்றனர். இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்த வாய்ப்பு குறைவாக இருந்தாலும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பட்டேல்கள் கோருகின்றனர்.
இரண்டாண்டுகள் முன்பு பட்டேல் சமூகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் இறந்தனர்.
போராட்டத்தை ஏற்பாடு செய்த ஹர்திக் பட்டேல் மீது தேசவிரோத குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தொடரப்பட்டு, 9 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறுமாதம் மாநிலத்துக்கு வெளியே இருக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை விடுதலை வழங்கப்பட்டது.
சிறைவாசமும், மாநிலத்துக்கு வெளியே அனுப்பியதும் பட்டேல்களின் மத்தியில் ஹர்திக்கை ஒரு நாயகனாக்கியது.
குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது காங்கிரசுடன் கூட்டணி அறிவித்தார் ஹர்திக்.
ஆனால், பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது, 'பா.ஜ.கவின் வெற்றிக்கு காரணம் அரசியல் சாதுரியம் அல்ல, வாக்குப்பதிவு இயந்திரமும் பணமுமே' என்று ஹர்திக் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்