பாலியல் வழக்கில் சிக்கிய தலைமை ஆசிரியர் தமிழகத்திற்கு மாற்றம்

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

கர்நாடகாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஒன்றில் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் ஒருவர் தமிழகத்தில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதால், இங்குள்ள குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

படக்குறிப்பு,

தலைமை ஆசிரியர் குமார் தாக்கூர்

கடந்த ஜனவரி 2017ல் பெங்களுருவில் உள்ள கேந்திரிய வித்யாலயா (கே.வி) பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தெரிவித்த தகவலை கொண்டு ‘சைல்டு ரைட்ஸ் டிரஸ்ட்‘ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தலைமை ஆசிரியர் குமார் தாக்கூர் மீது போக்சோ(குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்கும் சட்டம் POCSO) சட்டத்தின் கீழ் புகார் அளித்தது.

அந்த புகார் பல்வேறு கட்டங்களாக விசாரிக்கப்பட்டது. வழக்கு பதிவான போதிலும், குமார் தாகூர் பெங்களுருவில் உள்ள பள்ளியில் இருந்து மாற்றப்பட்டு தற்போது திருவண்ணாமலையில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பணிபுரிந்துவருகிறார்.

குமார் தாக்கூர் உடனடியாக பள்ளியில் இருந்து நீக்கப்படவேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் நல ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஆன்டிரூ ஜேசுராஜ்.

''தமிழகத்தில் உள்ள கே.வி. பள்ளியில் குழந்தைகள் மத்தியில் பணிபுரிய குமார் தாகூர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சியாக உள்ளது. தரமான கல்வி என்பது வெறும் பள்ளியில் கட்டடங்களையும், கணினி அறைகளையும் மட்டுமே குறிக்காது. குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை தருவதே சிறந்த பள்ளியாக இருக்கமுடியும். திருவண்ணாமலை பள்ளியில் குமார் தாக்கூர் பணிபுரியும் ஒவ்வொரு நிமிடமும் அங்குள்ள குழந்தைகளுக்கு ஆபத்துதான். அவர் உடனடியாக நீக்கப்படவேண்டும்,'' என்கிறார் ஆன்டிரூ ஜேசுராஜ்.

குமார் தாக்கூரின் மீது வழக்கு தொடுத்த ‘சைல்டு ரைட்ஸ் டிரஸ்ட்‘ நிறுவனத்தைச் சேர்ந்த வாசுதேவ ஷர்மா, குமார் தாக்கூர் குழந்தைகள் இருக்கும் இடத்தில் தொடர்ந்து பணியாற்ற எவ்வாறு பள்ளி நிறுவனங்கள் அனுமதிக்கின்றன என்பது கேள்விக்குறியாக இருப்பதாக கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

''வழக்கு மிக தாமதமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. குமார் தாக்கூரும் பள்ளியில் வேலை செய்துவருகிறார் என்பது அச்சப்படவேண்டிய விஷயம். குழந்தைகள் மட்டுமல்லாது ஆசிரியைகளும் அவர் மீது புகார் கூறியுள்ளார்கள்,'' என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ''குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக பேசினார் என்றும் தன்னிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் கூறினார் என்றும் எங்களுக்கு தகவல் வந்துள்ளது. சில ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியிலான படங்களை அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது,'' என்றும் வாசுதேவ ஷர்மா கூறுகிறார்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை புகார் காரணமாகதான் குமார் தாக்கூர் மாற்றலாகி திருவண்ணாமலை கே.வி.பள்ளிக்கு வந்துள்ளார் என்று பள்ளியில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியும் என்கிறார் பள்ளி நிர்வாக குழுவில் இடம்பெற்றுள்ள பெற்றோரான காந்திமதி.

''பணியில் சேர்ந்தவுடன் குழந்தைகளிடம் பேசிய தலைமை ஆசிரியர் குமார் தாக்கூர், குழந்தைகள் தன்னிடம் சந்தேகங்களை எந்த நேரமும் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். பள்ளியில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அவர் மீதான வழக்கு பற்றிய விவரங்கள் தெரியும். இதுதொடர்பாக என்ன செய்வது என்று ஆலோசித்துவருகிறோம். அவரை பள்ளியில் அமர்த்தியது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற புகார்களில் குற்றம்சாட்டப்பட்ட நபரை பணியிட மாறுதல் செய்வது ஒரு தீர்வாகாது,'' என்று கூறினார் காந்திமதி.

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில் பாலியல் வன்முறை செய்ததாக புகாருக்கு ஆளாகியுள்ள குமார் தாக்கூரிடம் அவர் மீது எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, ''நான் இங்கு தலைமை ஆசிரியராக வேலைசெய்கிறேன். என் மீதான வழக்கு கர்நாடகாவில் நடந்துவருகிறது. எனக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது என்பது துறை ரீதியாக எடுத்த முடிவு. என்ன காரணத்திற்காக நான் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டேன் என்றே எனக்கு தெரியாது. இதற்கு மேல் வேறு தகவல்களை கூறமுடியாது,'' என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

குமார் தாக்கூர் விவகாரம் குறித்து தமிழக குழந்தைகள் நல ஆணையார் நிர்மலாவிடம் பேசியபோது, குழந்தைகள் இருக்கும் இடத்தில் பாலியல் வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பணிபுரிவது தொடர்பாக மத்திய மனிதவள அமைச்சகம் முடிவு எடுக்கவேண்டும் என்றார்.

''தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கே.வி. பள்ளிகள் இல்லை என்பதால் மத்திய அரசின் விதிகளை கொண்டே இந்த விவகாரத்தை அணுகமுடியும். தமிழக அரசின் ஆளுகைக்குக் கீழ் வரும் பள்ளிகளில் இதுபோன்ற குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் குழந்தைகள் இருக்கும் இடத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். முடிந்த அளவில் விரைவில் நடவடிக்கை எடுப்போம்,'' என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :