சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை: விவசாயிகளை சந்திக்கச் சென்றதால் கைதானேன் - யோகேந்திர யாதவ்

சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டம்: விவசாயிகளை சந்திக்க யோகேந்திர யாதவுக்கு தடை

பட மூலாதாரம், Getty Images

சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படப்போவதாக கூறியுள்ள விவசாயிகளை நேரில் சந்திக்க, டெல்லியில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த ஜெய் கிசான் அந்தோலன் என்ற விவசாயிகளுக்கான அமைப்பின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், TWITTER

திருவண்ணாமலையில் உள்ள விவசாயிகளை சந்திக்க வந்த யோகேந்திர யாதவ் மற்றும் அவருடன் வந்திருந்த பிற விவசாய அமைப்புகளைச் சேர்ந்த தாலிப் சிங் (ஹரியானா), லிங்கராஜ் (ஒடிசா) ஆகியோரும் அவருடன் சென்றிருந்தனர்.

யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவருக்கு ஆதரவாக பலரும் ட்வீட் செய்துள்ளனர்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கமல்ஹாசன், தமிழக விவசாயிகளிடம் கருத்து கேட்கச்சென்ற யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டது விமர்சனத்திற்குரியது என்றும் கடும் கண்டனத்திற்குரியது என்றும் பதிவிட்டுள்ளார்.

மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், "தமிழகத்தில் காவல்துறையின் ஆட்சி நடப்பதாகவும், டெல்லி அவர்களை இயக்கிக்கொண்டிருப்பதாகவும்" பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், TWITTER

முன்னதாக ''சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளை சந்திக்க திருவண்ணாமலைக்கு வந்தோம். பாதிவழியில் செங்கம் அருகே நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். நாங்கள் விவசாயிகளை சந்திக்கக்கூடாது என்பதற்காக தடுக்கிறார்கள். உண்மையில் விவசாயிகள் தங்களது நிலங்களை இந்த திட்டத்திற்காக தர விரும்புகிறார்களா? அல்லது கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? என்று அறிந்துகொள்ள வந்தோம். அருண் என்ற ஒரு விவசாயியை சந்தித்தோம். அடுத்த இடத்திற்கு செல்லும்முன் தடுத்து தனியார் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளோம். அந்த சமயத்தில் அருண் மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார், அதை காவல்துறையினர் பிடுங்கிக்கொண்டனர்,'' என்று அடைத்துவைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து பேசிய ஒரு காணொளியில் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.

''நான் விவசாயிகளை சந்தித்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். நான் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளை சந்தித்தால், எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்? தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறது,'' என்று யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

''யோகேந்திர யாதவ் மற்றும் பிற நபர்களை கிராமங்களுக்குள் செல்ல அனுமதித்தால் மக்களிடம் அமைதியின்மை(social unrest) ஏற்படும் என்று எண்ணுகிறோம். அதனால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவுள்ளோம்,'' என்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :