யானைகள் பாலத்தை கடக்க பாதியில் நிற்கும் ரயில்கள்
இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.
தி இந்து(ஆங்கிலம்): யானைகள் பாலத்தை கடக்க பாதியில் நிற்கும் ரயில்கள்
பட மூலாதாரம், Getty Images
தென் கிழக்கு ரயில்வேயில், யானைகள் பாலத்தை கடப்பதற்காக ரயில்களை நிறுத்துவது என்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
யானைகள் பாலத்தை கடக்க தகுந்த நேரம் அளித்த பின்னரே ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தின் தென் பகுதியில் உள்ள நக்ரகடா மற்றும் சல்சா பகுதிகளுக்கு இடையே பெரும் யானைக்கூட்டம் பாலத்தை கடக்க முயற்சித்ததையடுத்து பமன்ஹத் - சிலிகுரி பயணிகள் ரயில் கடந்த வியாழக்கிழமையன்று நிறுத்தப்பட்டது.
அதேபோல சில தினங்களுக்கு முன்பு, கும்லா மற்றும் சிவோக் ரயில் நிலையங்களுக்கு இடையில் இதே காரணத்திற்காக இதே ரயில் நிறுத்தப்பட்டு பின்னர் இயக்கப்பட்டதாக இச்செய்தி மேலும் விவரிக்கிறது.
தினமணி: 'ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நீர் ஆய்வு - தமிழக அரசு எதிர்ப்பு'
பட மூலாதாரம், Getty Images
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய நிலத்தடி நீர்வள வாரியத்தின் அறிக்கை இருப்பதாகக்கூறி தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையை தமிழகம் நிராகரிப்பதாகவும், மத்திய அரசு ஆய்வறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வலியுறுத்தி உள்ளார். தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாடு தொடர்பாக மத்திய நிலத்தடி நீர் ஆணையம் மேற்கொண்ட ஆய்வு தன்னிச்சையானது. இதுகுறித்து தமிழக அரசுக்கு எந்த தகவலையும் தராதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவெடுத்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தலைமை செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த மத்திய நிலத்தடி நீர்வள வாரியத்தின் அறிக்கையால் தூத்துக்குடியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இச்செய்தி விவரிக்கிறது.
தினமலர்: 'ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்'
பட மூலாதாரம், Getty Images
கோப்புப்படம்
ஈரோடு அரசு மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விஜயகுமார் மற்றும் கலானி தம்பதிக்கு இரண்டு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை சுகப்பிரசவத்திலும், பிற குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமாகவும் எடுக்கப்பட்டன.
"ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறப்பதே அரிது. இந்நிலையில் நான்கு குழந்தைகள் பிறந்தது ஆச்சரியம். தாய் மற்றும் குழந்தைகளை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக" அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பிரபாவதி தேவி கூறியதாக இந்த நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்