7 பேரையும் முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை - தமிழக அமைச்சரவை முடிவு

ராஜீவ் கொலை வழக்கு

பட மூலாதாரம், Getty Images

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைதண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அமைச்சரவை கூட்டம் தற்போது துவங்கியுள்ளது.

18.07: ஒட்டு மொத்த தமிழ் மக்களின் எண்ணம் இவர்கள் அனைவரும் விடுதலையாக வேண்டும் என்பதே- அமைச்சர் ஜெயக்குமார்

18.03: அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

17.58: 7 பேரையும் முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

17.57: அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளரை சந்தித்து வருகின்றனர்.

17.56: அமைச்சரவைக் கூட்டம் நிறைவு.

17.55: ஏழு பேரை விடுதலை செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான ஆட்சபனையும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

17.26: ஏறத்தாழ ஒரு மணி நேரமாக நடந்து வருகிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம்.

16.50: அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர் சந்திப்பு இருப்பதாக சட்டபேரவை அலுவலர்கள் தெரிவித்தனர்.

16.45: என் மகனை விடுவிப்பார்கள் என நம்புகிறேன் என பிபிசி தமிழிடம் பேசிய அற்புதம்மாள் தெர்வித்தார்.

பட மூலாதாரம், Getty Images

16.30: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைதண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்.

தேர்தல் பிரசாரத்திற்காக 1991ல் ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு வந்திருந்த சமயத்தில், ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் பேரறிவாளன்,முருகன் மற்றும் சாந்தனுக்கு முதலில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுட்கால சிறைதண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி,ரவிச்சந்திரன் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோரும் ஆயுள்தண்டனை பெற்றவர்கள்.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் பல ஆண்டுகாலமாகத் தனது மகன் பேரறிவாளன் தவறுதலாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் வழக்கு நடத்தப்பட்ட விதத்திலும் பிரச்சனை இருந்தது என்றும் கூறி வருகிறார். தூக்குத்தண்டனைக்கு எதிராக போராடிய அவர், தண்டனை காலத்தில் பேரறிவாளனின் நன்னடத்தையைக் காரணமாக கொண்டு அவரை விடுவிக்கவேண்டும் என்று கோரிவந்தார்.

பட மூலாதாரம், STRDEL

வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என பல சமூகஅமைப்புகள் பிரசாரம் செய்துவந்த நிலையில், அவர்களின் விடுதலை தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுதலை பற்றி முடிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு அவருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை இன்று கூடி முடிவுசெய்யவுள்ளது. ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டபோது, பதில் ஏதும் வரவில்லை.

ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :