‘நாங்கள் அலெக்சாண்டர் படை வீரர்களின் வம்சாவளியினர்’ - இமயமலையில் ஒரு ஆச்சர்ய கிராமம்

'நாங்கள் அலெக்ஸாண்டர் படை வீரர்களின் வம்சாவளியினர்'

தன்னிலை மறந்து ஞானத்தை தேடி அலைபவர்களின் சொர்க்கபுரி பார்வதி பள்ளதாக்கு. அப்படிதான் இமாச்சல பிரதேச பகுதியில் இருக்கும் இப்பகுதி அறியப்படுகிறது. ஆனால், உண்மையில் இது மட்டும் அந்த மலானா கிராமத்தின் அடையாளம் அல்ல. ஆம், அந்த பகுதியை குறித்து சுவாரஸ்யமான கதைகள் பல உலா வருகின்றன.

விடுபடுதலுக்கான வழி

இமயமலையில் அமைந்திருக்கும் அந்த மலானா கிராமத்தை சுற்றி எங்கும் பனி படர்ந்திருக்கிறது. ஏறத்தாழ 1700 பேர் வசிக்கும் இந்த கிராமத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பனி, குளிர்காற்று வீசும் இந்த பகுதிக்கு அவர்கள் வருவதற்கு ஒரு காரணம் 'கஞ்சா'வும் கூட. உள்ளூர் மக்கள் அதனை புனித மூலிகையாககருதுகிறார்கள். ஆனால், வெளியிலிருந்து வருபவர்களுக்கு 'விடுபடுதல்'-க்கான வழி இந்த மூலிகை.

ஆனால், இந்த கிராமத்திற்கு நான் பயணிக்க காரணம் இவை எதுவும் இல்லை என்கிறார் மெக் சக்ரோபர்தி.

அவர் பார்வையிலிருந்து விரியும் கதை மிக சுவாரஸ்யமான ஒன்றாக உள்ளது. அலெக்சாண்டர் காலத்திலிருந்து இந்த கதை விரிகிறது.

அலெக்சாண்டர் காலம்

போரஸ் மன்னருடன் அலெக்சாண்டர் போரிட்ட வரலாறு ஒன்று உண்டல்லவா? கிறிஸ்து பிறப்பதற்கு 326 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த போரின் போது காயம்பட்டா அலெக்ஸாண்டர் படை வீரர்கள் இந்த கிராமத்தில் தங்கி இருக்கிறார்கள். இப்போது மாலானா கிராமத்தில் வாழும் மக்களின் மூதாதையர்கள் அந்த அலெக்சாண்டர் படை வீரர்கள் என கூறப்படுகிறது.

அந்த காலக்கட்டத்தை சேர்ந்த கலைப் பொருட்கள் எல்லாம் அந்த கிராமத்தில் கிடைக்கிறது. ஆனால், இவர்கள்தான் அந்த படை வீரர்களின் சந்ததி என்பதற்கான எந்த உறுதியான சான்றும் இல்லை. மரபணு ஆய்வு உட்பட எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடைபெறவில்லை.

அந்த கிராமத்தில் பலருடன் உரையாடினேன். ஆனால், இந்த அலெக்ஸாண்டர் கதை எந்தப் புள்ளியில் தொடங்கியது என்று யாருக்கும் தெரியவில்லை.

மலானா கிராமத்தில் பல தசாப்தங்கள் தங்கி ஆய்வு செய்த திரைப்பட கலைஞர் அம்லான் தத்தா, "இந்த மக்கள் தாங்கள் அலெக்சாண்டர் படையை சேர்ந்த மக்களின் வழி வந்தவர்கள என ஆழமாக நம்புகிறார்கள். அவரின் படையை சேர்ந்தது என்று நம்பப்படும் சில ஆயுங்களும் இங்கு உள்ளது. ஆனால், உறுதியான எந்த ஆதாரங்களும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்." என்கிறார்.

இந்த கிராமத்தில் வசிக்கும் பழங்குடிகளுடன் ஒப்பிடுகையில் இவர்களின் தோற்றம், உடல்வாகு வேறுவிதமாகதான் உள்ளது. அவர்கள் கனஷி எனும் ஒரு மொழி பேசுகிறார்கள். இந்த மொழியை அவர்கள் புனிதமானதாக கருதுகிறார்கள். இதனை அவர்கள் வேறு யாருக்கும் கற்பிப்பதும் இல்லை.

மொழி ஆய்வு

கனஷி மொழியை சுவீடன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மொழியியல் அறிஞர் அஞ்சு சக்ஸேனே ஆய்வு செய்து வருகிறார். அவர், "கனஷி மொழி அழிவின் விளிம்பில் இருக்கிறது. இம்மொழியை யாரும் இப்போது எழுதுவதும் இல்லை. விவரிக்கப்படாத மொழி இது" என்கிறார்.

இந்த கிராமத்தை சுற்றி அனைவரும் இந்தோ- ஆர்ய மொழி பேசும்போது இந்த கனஷி மக்கள் மட்டும் சைனோ - திபெத்திய மொழியை பேசுகிறார்கள். இது பல சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்புகிறது என்கிறார்.

எப்படி பயணிப்பது?

புதிரான ஒரு விஷயத்துக்கு பயணிப்பது போலதான் உள்ளது இந்த மலானா கிராமத்திற்கு பயணிப்பதும். இந்த கிராமத்திற்கென்று முறையான சாலை வசதி இல்லை. பார்வதி பள்ளதாக்கில் உள்ள ஜாரி கிராமத்திலிருந்து நான்கு மணிநேரம் மலையில் நடந்து இந்த கிராமத்தை வந்தடைந்திருக்கிறார் மெக் சக்ரோபர்தி.

அந்த பயணம் குறித்து அவர் விவரிக்கும் போது, இந்த பயணமானது அவ்வளவு சுலபமானதாக ஒன்றும் இல்லை என்கிறார். அவர், "மலையில் ஏறிக் கொண்டிருக்கும் போதே, வழியெங்கும் மலானா மக்களை சந்திக்க தொடங்கிவிட்டேன். அவர்களின் தோற்றம் முற்றும் முழுவதுமாக வேறுமாதிரி இருந்தது. இளம் பழுப்பு நிற முடி, அதே நிறத்தில் விழிகள், நீளமான மூக்கு என எனக்கு அவர்கள் ஹிமாச்சல் மக்கள் போல தெரியவில்லை. அவர்கள் மத்திய தரைக்கடல் மக்கள் போலதான் இருந்தனர்" என்கிறார்.

நாங்கள் ஆரியர்கள்

லே பகுதிக்கு பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த ஜெகநாதனும் இப்படியான கதை ஒன்றை விவரிக்கிறார்.

இந்தியா முழுவதும் தொடர்ந்து பயணம் செய்து வருகிறார் ஜெகநாதான். பிபிசி தமிழின் செய்தியாளர் நியாஸ் அகமதிடம் பேசிய அவர், "காஷ்மீர் லே பகுதியிலிருந்து மேற்காக உள்ள தா, ஹனு, கர்கல் ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் பயணம் செய்தேன். அங்குள்ளவர்கள் தங்களை ஆரியர்கள் என்றும், அலெக்சாண்டர் படை வீரர்களின் வம்சாவளியினர் என்றும் கூறிக் கொள்கிறார்கள்" என்கிறார்.

மேலும் அவர், "அவர்கள் தோற்றம் முற்றும் முழுவதுமாக வேறாக இருக்கிறது. அவர்களின் உடை, பண்பாடும் தனித்துவமானதாக இருக்கிறது. சரளமாக சமஸ்கிரிதம் பேசுகிறார்கள். ஒரு நெடிய ஆய்வு மேற்கொள்ளப்படும்பட்சத்தில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வர வாய்ப்புள்ளது" என்கிறார்.

அந்த கிராமத்தில் ஆரியர்களின் கோயில் ஒன்றும், அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஜெகநாதன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :