ராஜீவ் கொலை வழக்கு: ஏழு பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, 161வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு: ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை

பட மூலாதாரம், Getty Images

சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆறாம் தேதியன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து இவர்கள் எழுவரையும் விடுதலைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்தன.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் மாலை 4.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் துவங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மாநில மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பேரறிவாளன் என்பவரின் கருணை மனுவை 161வது பிரிவின் கீழ் பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது. இருந்தாலும் இவர்களைத் தவிர மீதமுள்ள ஆறு நபர்களும் அரசுக்கு மனு அளித்திருந்தனர். அதைக் கருத்தில் கொண்டு, 7 பேரையும் முன்விடுதலை செய்ய மேதகு ஆளுநருக்கு மேற்படி சட்டப்பிரிவின் கீழ் பரிந்துரைசெய்ய அமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டது" என்று கூறினார்.

நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றமே 161வது பிரிவின் கீழ் முடிவெடுக்கலாம் என்று சொல்லிவிட்ட நிலையில், இன்று அமைச்சரவையைக் கூட்டி இந்தத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக ஜெயக்குமார் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பரிந்துரை ஆளுநருக்கு எப்போது அனுப்பப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, இன்றே உடனடியாக அனுப்பப்படுமெனவும் அமைச்சர் பதிலளித்தார். இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதியே ஞாயிற்றுக் கிழமையன்று இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாகவும் எந்தத் தாமதமுமின்றி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் ஜெயக்குமார் கூறினார்.

அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, அமைச்சரவையின் பரிந்துரையை கண்டிப்பாக ஆளுநர் ஏற்றுக்கொண்டாக வேண்டுமெனவும் ஆளுநர் என்பவர் மாநில அரசைத்தான் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்றும் அரசு எடுக்கும் முடிவுகளை அவர் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

இதில் ஆளுநர் கால தாமதம் செய்ய முடியாது எனவும், அமைச்சரவை கூடி முடிவெடுத்துவிட்ட நிலையில் 161வது பிரிவின் கீழ் அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

பட மூலாதாரம், DIPR

ராஜீவ் காந்தி கொலையாளிகளை இப்படி முன்கூட்டி விடுவிக்கலாமா எனக் கேட்டபோது, அவையெல்லாம் கடந்த காலம். இப்போது ஒட்டுமொத்தத் தமிழகமும் இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென நினைப்பதாகவும் அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் 2014ல் அமைச்சரவை கூடி இவர்களை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றியதாகவும் அதனை அன்றைக்கே மத்திய அரசு ஏற்காததனால், இப்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜெயக்குமார் கூறினார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் ஆலோசனையை ஆளுநர் கேட்க வேண்டியதில்லையென்றும் 161வது பிரிவு முழுக்க முழுக்க மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால் அமைச்சரவை முடிவை அவர் ஏற்க வேண்டுமென்றும் ஜெயக்குமார் கூறினார்.

இன்று கூடிய அமைச்சரவையில், 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானம் தவிர, மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரைக்கு பாரத் ரத்னா விருதை அளிக்கப் பரிந்துரை, சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறைந்த முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் பெயரைச் சூட்டப் பரிந்துரை, ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது அளிக்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை மீண்டும் வலியுறுத்தும் தீர்மானம் ஆகியவையும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

'7 பேரை விடுவிக்க முடியாது - மத்திய அரசு'

ஆகஸ்ட் 10 ஆம் தேதி பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில் இவர்கள் யாரையும் விடுவிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறி இருந்தது.

முன்னதாக ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தபோது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றது நீதிமன்றம். மேலும் ஏழு பேரை விடுவிக்க இடைக்காலத்தடை விதித்தது.

நாங்கள் மத்திய அரசிடம் எங்கள் கோரிக்கையை தெரிவித்திருந்தோம். அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளிக்காமல் நேரடியாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிவிட்டார்கள் . மத்திய அரசின் நிலைப்பாடு தெரியவேண்டும் என்றது தமிழக அரசு.

இந்நிலையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தெரிவித்தது.

நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்சிற்கு வந்த இவ்வழக்கில் மத்திய அரசு வாதிடுகையில், இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றது மிகக்கடுமையான குற்றம். அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத இயக்கங்களின் உதவியோடு கொன்றுள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கு கருணை வழங்கப்பட்டு விட்டது.

மரண தண்டனை ஆயுள் தண்டனையாகிவிட்டது. இனி இன்னொரு முறை கருணை காண்பிக்கமுடியாது. ஏனெனில் இவர்களை விடுவித்தால் அது ஓர் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ஆகவே இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றது.

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டோம்: ராகுல் காந்தி

இவ்வாண்டு மார்ச் மாதம் சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டதாக கூறினார்.

"ராஜிவ் காந்தியின் குடும்பத்தினரே ஒருவர் பின் ஒருவராக வெளிப்படுத்தும் எண்ணங்களை மத்திய, மாநில அரசுகள் கருத்திற்கொண்டு 27 ஆண்டுகாலமாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யவேண்டும்" என அப்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :