அரசு உதவிகளால் குறைந்துள்ளதா விவசாயிகள் தற்கொலை?
- பிரியங்கா துபே
- பிபிசி
விவசாயிகளின் தற்கொலை மற்றும் விவசாயிகளின் நெருக்கடி பற்றிய பிபிசி சிறப்புத் தொடரின் இரண்டாவது பகுதி. இதனை தென்னிந்தியாவில் அமைந்திருக்கும் தெலங்கானா மாநிலத்தில் இருந்து தொடங்கலாம்.
பட மூலாதாரம், PRIYANKA DUBEY/BBC
கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங் கடந்த 2015ஆம் ஆண்டு தெலங்கானாவில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 1,358 ஆக இருந்தது. அதுவே 2016இல் 632ஆக குறைந்துவிட்டது என்று புள்ளிவிவரங்களை தெரிவித்தார்.
இதை அடுத்து, தெலங்கானா அரசும், தேசிய பொருளாதார நிபுணர்களும், விவசாய நெருக்கடியில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டதாக கருத்துக்களை தெரிவித்தனர். இது உண்மையா? தெலங்கானாவில் விவசாயிகளின் தற்கொலை விகிதம் குறைந்திருக்கிறதா? விவசாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் காண்பதற்காக நேரிடையாக களத்திற்கே சென்று ஆய்வு மேற்கொண்டோம்.
தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் ராயாவரம் கிராமத்திற்கு சென்றோம். இந்த கிராமம், முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு வசிக்கும் விவசாயிகளின் நிலைமையையும் இந்தியாவின் பிற பகுதியில் வசிக்கும் விவசாயிகளின் நிலைமைக்கும் குறைந்ததில்லை. அடேல் அஷோக் என்ற 23 வயது இளம் விவசாயியை சந்தித்தோம். இவர் தனது வயலில் இருந்து நிலையான வருமானம் கிடைப்பதாக தெரிவித்தார்.
அவர் பயிரிட்டாலும் சரி, நிலத்தை தரிசாக போட்டு வைத்திருந்தாலும் சரி, போகம் ஒன்றுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாய் என்ற வீதம் தெலங்கானா அரசு வழங்கும் நிதியுதவியை அவர் பெறுகிறார்.
ஆண்டுக்கு இரு போகம் (இரு முறை பயிரிடுவது) என்ற கணக்கில் அரசிடம் இருந்து அடல் அஷோக்குக்கு ஒரு தொகை கிடைக்கிறது. இதைத்தவிர, பயிர் சாகுபடியில் இருந்தும் அவருக்கு வருமானம் கிடைக்கிறது. சரி, அரசு உதவிகளை அஷோக் எப்படி பெறுகிறார்?
விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் அடேல் அஷோக்கின் தந்தை அடேல் நரசிம்முலு, தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் அரசு வழங்கும் நிதியுதவி கணிசமான தொகைதான்.
அஷோக்கை சந்திப்பதற்காக காலை ஐந்து மணிக்கே ஹைதராபாதில் இருந்து கிளம்பிவிட்டோம். விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் மிக அதிகமாக பதிவாகும் மாவட்டங்களில் சித்தபேட்டும் ஒன்று. ஆகஸ்ட் மாதத்தில் ராயவரம் கிராமத்தில் நெல் மற்றும் பருத்திப் பயிர்கள் பச்சை பசேலென்று கண்களுக்கு குளுமையை தந்தன.
பட மூலாதாரம், PRIYANKA DUBEY/BBC
காலை எட்டு மணி சுமாருக்கு அஷோக்கின் கிராமத்தை சென்றடைந்தோம். இந்த கிராமத்தில் மட்டும் இதுவரை நான்கு விவசாயிகளின் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாட்டு சாணத்தால் வீடு சுத்தம் செய்யப்பட்டு, வெளிப்புற சுவர்களில் வறட்டி காய்ந்துக் கொண்டிருந்தது. விடியற்காலையிலேயே அந்த குடும்பத்தின் வேலை தொடங்கிவிட்டிருந்ததற்கான சான்றுகளாகவே அவை தெரிந்தன.
அடேல் அஷோக்கிடம் அவரது தந்தையைப் பற்றி விசாரித்தோம். தந்தையின் புகைப்படம் மற்றும் அவர் தற்கொலை செய்துக் கொண்டதற்கு ஆதாரமான ஆவணங்களை எடுத்து காண்பித்தார்.
தெலுங்கில் எழுதப்பட்டிருந்த பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்தோம். "எங்கள் குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது, அதில் 1.2 ஏக்கர் நிலத்திற்கு பத்திரம் உள்ளது. இதைத்தவிர அப்பா மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, மொத்தம் ஐந்து ஏக்கர் நிலத்தில் பருத்தி, நெல் மற்றும் சோளம் பயிரிட்டு வந்தார். வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் இருந்து, விவசாயத்திற்காக நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார், அதற்காக மாதம் 12 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுக்கவேண்டும்".
''மாதம் 12 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுக்கும் அளவுக்கு எங்களுக்கு வருமானம் இல்லை. ஆனால் வட்டிக்கு கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம், எதாவது சொல்லி சமாளிப்பார். ஆனால், அவர் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து போயிருந்தார். செய்யும் தொழிலில் வருமானமும் இல்லை, கடனையோ, வட்டியையோ கொடுக்கவும் முடியவில்லை, வீட்டின் நிலைமையோ மோசமாகிக் கொண்டே இருந்தது''.
''இந்த நிலையில், ஒரு நாள் மாலை ஆறு மணி சுமாருக்கு வீட்டின் பின்புறத்திற்கு சென்று, அங்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். நாங்கள் அனைவரும் வீட்டின் முன்முற்றத்தில் அமர்ந்திருந்தோம். வீட்டின் பின்புறம் சென்றபோது, அப்பா மயங்கிக்கிடப்பதை பார்த்து, பதறிப்போய் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தோம், ஆனால் அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்துவிட்டார்கள்" என்று அந்த சோகமான தினத்தை நினைவுகூர்கிறார் அஷோக்.
நரசிம்மலுவின் தற்கொலைக்கு பிறகு விவசாயத்தை பார்க்கும் பொறுப்பு அஷோக்கிடம் வந்தது. முதலமைச்சர் கே.சி.ஆர் 'ரயத் பந்து' (விவசாய நண்பன்) திட்டம் போன்ற திட்டங்கள் அஷோக்கை விவசாயத்தில் ஈடுபட வைத்தது.
இதுபோன்ற விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டங்களே தெலங்கானா மாநில விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கின்றன. இந்தத் திட்டத்தின் படி, போகம் ஒன்றுக்கு நான்காயிரம், பயிர் ஒன்றுக்கு நான்காயிரம் என்ற கணக்கில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அஷோக்கிடம் இருக்கும் 1.2 ஏக்கர் நிலத்திற்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி கிடைக்கிறது. அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியுதவியில் இருந்து அடுத்த விதைப்புக்கான பொருட்களை வாங்குவதாக கூறுகிறார் அடேல் அஷோக்.
விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை குறைந்தது
விவசாயிகளின் நண்பன் என்ற அரசின் திட்டம் உண்மையிலுமே தெலங்கானா மாநில விவசாயத்தையும், விவசாயிகளின் நிலைமையிலும் மாற்றஙக்ளை ஏற்படுத்தியுள்ளதா? பல காரணங்களில் இதுவும் ஒன்று என்றுதான் கூறலாம்.
பட மூலாதாரம், PRIYANKA DUBEY/BBC
பொதுவாகவே விவசாயிகளின் தற்கொலையில் தேசிய அளவில் ஆண்டுதோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பிடிக்கும் தெலங்கானாவில் விவசாயிகளின் தற்கொலை விகிதம் பாதியாக அதாவது 50 சதவிகிதமாக குறைந்துவிட்டது.
தேசிய குற்ற பதிவேடு முகமை (என்.சி.ஆர்.பி), 2015ஆம் ஆண்டுக்கு பிறகு, விவசாயிகளின் தற்கொலை தொடர்பான புள்ளிவிவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. எனவே, 2016இல் விவசாய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையே எழுத்துப்பூர்வமான இறுதி புள்ளிவிவரமாக கருதப்படுகிறது.
இருந்தபோதிலும், விவசாயிகளின் தற்கொலை விகிதம் 50 சதவிகிதம் குறைந்துவிட்டாலும், பட்டியலில் மகாராஷ்டிரா (2550), கர்நாடகா (1212) மாநிலங்களுக்கு அடுத்த இடத்தில், நாட்டில் மூன்றாவது இடத்தில்தான் தெலங்கானா இருக்கிறது.
விவசாயிகளின் தற்கொலை விகிதம் பாதியாக குறைந்ததற்கு காரணம் என்ன?
2015ஆம் ஆண்டுவரை நாட்டில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக இருந்த தெலங்கானாவில் அந்த பிரச்சனை பாதியாக குறைந்ததற்கான காரணங்கள் எவை?
விவசாயிகளின் நண்பன் என்ற திட்டத்தை, நாட்டின் எதிர்காலத்திற்கான விவசாய திட்டம் என்று நாட்டின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் சொன்னதற்கான காரணம் என்ன? இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன? குறைபாடுகள் என்ன?
இந்த கேள்விகளுக்கான பதில்களைத்தேடி, தெலங்கானாவின் ஜன்காவ், சித்திபேட் மற்றும் வாரங்கல் புறநகர் பகுதிகளுக்கு பயணித்தோம். அத்துடன், 'ரயத் பந்து' திட்டத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தெலங்கான ராஷ்ட்ரிய சமிதியின் மூத்த தலைவர் சுகேந்தேர் ரெட்டியுடனும் கலந்துரையாடினோம். ஹைதராபாதில் அமைந்துள்ல 'ரயத் பந்து' திட்டத்தை செயல்படுத்தும் குழுவின் அலுவலகத்தில் சுகேந்தரை சந்தித்தோம்.
விவசாய கடன் தள்ளுபடி என்ற அம்சத்தை முதலில் விரிவாக பேசினோம். அப்போது, "விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் கொடுக்கத் தொடங்கினோம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக 'மிஷன் குகதியா' என்ற திட்டத்தைத் தொடங்கினோம். அதன்படி, மாநிலத்தில் நீர் நிலைகளையும், சிறு சிறு குளங்களையும் உருவாக்கினோம். ஒரு கோடி ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாசனம் செய்யத் தேவையான நீரை வழங்கவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டோம். இதற்காக மாநிலத்தில் பலவிதமான திட்டங்களைத் தொடங்கினோம்" என்று சுகேந்தேர் ரெட்டி தெரிவித்தார்.
பட மூலாதாரம், PRIYANKA DUBEY / BBC
தெலங்கானா மாநில அரசும், முதலமைச்சரும் 'விவசாயம்' என்ற அடிப்படைத் தொழிலுக்கு நண்பர்கள் என்று கூறிய சுகேந்தேர் ரெட்டி, மாநிலத்தில் விவசாயிகளின் நிலையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவதில் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதன் பெயரே 'முதலீடு ஆதரவு திட்டம்' என்று கூறும் சுகேந்தர் ரெட்டி, விவசாயப் பணிகளுக்காக விவசாயிகள் செய்யும் செலவுகளில் அவர்களுக்கு கைகொடுக்க விரும்புகிறோம். இதனால் கடன் சுமை குறைவதுடன், பயிர்களில் நட்டம் ஏற்பட்டாலும், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பின் அளவு குறையும். இந்த ஆண்டு கரிஃப் பருவத்தின் முதல் சாகுபடிக்காக, 6 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, 57.89 லட்சம் காசோலைகளாக விவசாயிகளுக்கு அரசு விநியோகிக்க முடிவு செய்திருக்கிறது என்று அவர் விளக்கினார்.
"கணிசமான எண்ணிக்கையிலான காசோலைகள் விநியோகிக்கப்பட்டுவிட்டாலும், இன்னும் 7.79 லட்சம் காசோலைகள் விநியோகிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதேபோல், இந்த ஆண்டின் அடுத்த பயிர் பருவத்திலும் 6 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்" என்று சுகேந்தர் ரெட்டி கூறுகிறார்.
ஆனால், குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்பவர்கள் 'ரயத் பந்து' திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பதை இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய குறையாக மாநிலத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் விவசாயத்துறை செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.
ரயத் பந்து திட்டத்தின் குறைபாடுகள்
விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் ஹைதராபாதை சேர்ந்த 'ரயது ஸ்வராஜ் வேதிகா' என்ற அரசு சாரா அமைப்புடன் இணைந்து பணியாற்றும் கிரண் வாஸ்ஸா இவ்வாறு கூறுகிறார்: "எங்களது ஆய்வின்படி, தெலங்கானாவில் 75 சதவிகிதத்திற்கு அதிகமான விவசாயிகள் எதாவது ஒரு விதத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்துதான் விவசாயம் செய்கிறார்கள். லட்சக்கணக்கில் இருக்கும் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. இதில் 18 சதவிகித விவசாயிகளிடம் ஒரு துண்டு நிலம் கூட கிடையாது".
பட மூலாதாரம், PRIYANKA DUBEY / BBC
"தெலங்கானாவில் இவர்கள், 'கெளல் ரயது' என்று அறியப்படுகிறார்கள். இவர்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு? 'ரய்து பந்த் திட்டம்' கெளல் ரயதுகளின் நலன்களை முற்றிலுமாக புறக்கணிக்கிறது. இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு உடனடியான ஒரு தீர்வை வழங்கியிருக்கலாம். மக்களிடத்தில் முதலமைச்சருக்கு நற்பெயரை வாங்கிக் கொடுத்திருக்கலாம். இந்தத் திட்டத்தினால் கிடைத்த புகழால், அவர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகலாம். ஆனால் இந்தத் திட்டத்தால் விவசாயிகளின் நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வு கிடைக்காது. விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை தேவை என்பதுதான் தற்போதைய தேவை".
'ரயது பந்து' திட்டத்தினால் தாங்கள் ஓரளவு பயனடைந்துள்ளதாக இங்கிருக்கும் விவசாயிகள் கருதுகின்றனர். ஆனால் அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை உரிய முறையில் தொடர்வதாக உறுதியளித்தால், தங்களுக்கு அரசின் மானியங்களோ, நிதியுதவிகளோ தேவையில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
வாரங்கல் புறநகர் பகுதியில் வசிக்கும் ஆத்மகுரூ கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ் ரெட்டி, ஆண்டுக்கு ஒருமுறை பருத்தி அல்லது நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு தோராயமாக 6,000 ரூபாய் செலவாவதாகவும், ஆனால் அதை விற்பனை செய்தால் கிடைப்பது வெறும் 3,500 ரூபாய்தான் என்றும் கூறுகிறார்.
மேலும், "ஏக்கருக்கு 2,500 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது, எந்த ஒரு தொழிலும் இப்படி நட்டம் ஏற்பட்டால் எப்படி நடக்கும்? 'மிஷன் கக்தியா' என்ற திட்டத்தால் நீர்ப்பாசன வசதிகள் மேம்பட்டிருப்பதும், ரயத் பந்து திட்டத்தின் கீழ், நிதியுதவி கிடைப்பதும் உண்மைதான். ஆனால், வாரங்கல் பகுதியில் வழக்கமாக பருத்தி சாகுபடியில் ஏக்கர் ஒன்றுக்கு 10 குவிண்டாலுக்கு பதிலாக 3 குவிண்டால் மட்டுமே மகசூல் கிடைக்கிறது. இதுபோன்ற நிலைதான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது" என்று அவர் கூறுகிறார்.
"அரசின் மானியங்கள் கிடைத்தாலும் எங்களுக்கு நட்டம்தான் ஏற்படுகிறது. அரசின் நிதியுதவி எங்கள் நட்டத்தை குறைக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். எங்கள் விளைபொருட்களுக்கு சந்தையில் உரிய விலை கிடைத்தால், அரசு கொடுக்கும் நான்காயிரம் ரூபாய் நிதியுதவியே எங்களுக்கு தேவையில்லையே," என்கிறார் அவர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய கேள்விக்கு பதில் கூறுவதை தவிர்த்த சுகேந்தேர் ரெட்டி, "பயிரில் ஈரப்பதம் தங்கிவிட்டால், அரசு நிர்ணயிக்கும் விலை கிடைப்பது கடினம், அதை சரிசெய்ய முயற்சிக்கிறோம். தற்போது பயிரை அறுவடை செய்து உலர்த்தும் ஹார்வெஸ்டர் கருவியும் வந்துவிட்டது, தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்கள், இந்த பிரச்சனைகளை தீர்க்கும்" என்று பதில் சொல்லி முடிக்கிறார்.
அரசாங்கத்தின் வாக்குறுதிகள் ஒரு புறம் இருந்தாலும், தெலங்கானா கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்கப்படவேண்டும் என்று கருதுகிறார்கள். கூலி வேலை செய்து குடும்பம் நடத்தும் ஷோபா, ஜன்காவில் தனது மாமியார் மற்றும் இரண்டு மகன்களோடு வசிக்கிறார். அவரது கணவர் ஸ்ரீனிவாஸிடம் சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. அவர் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
விவசாய செலவுகளுக்காக வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல், 2014ஆம் ஆண்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து ஸ்ரீநிவாஸ் தற்கொலை செய்துக்கொண்டார். தந்தையின் மரணத்திற்கு பிறகு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லத் தொடங்கினார் 21 வயது மகன் கணேஷ். அரசின் நலத்திட்டங்களால் தங்கள் குடும்பத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று சொல்கிறார் கணேஷ்.
தந்தை ஸ்ரீநிவாஸின் புகைப்படத்தை கையில் வைத்து பார்த்துக் கொண்டே பேசும் கணேஷ், "என் அப்பாவுக்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. அரசின் புதிய திட்டத்தின்படி, எங்களைப் போன்ற குத்தகைக்காரர்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தில் நன்மை கிடைக்கிறது. எங்களைப் போன்ற கெளலி விவசாயிகளுக்காக அரசாங்கம் எதையுமே செய்யாமல் எங்களை அனாதரவாக நிறுத்திவிட்டது" என்று கூறி வருந்துகிறார்.
அருகிலுள்ள ஹரிகோபாலா கிராமத்தை சேர்ந்த விவசாயி சுக்மாரி சுமையாவின் கருத்தோ வேறாக இருக்கிறது. ரயத் பந்து திட்டம் பெருவிவசாயிகளுக்குமே பயனளிப்பதாக சொல்கிறார்.
"காப்பீடு திட்டம் மிகவும் நல்லது, ஆனால் ரயத் பந்து திட்டம் பெருவிவசாயிகளுக்கு மட்டுமே நன்மை தருகிறது. என்னிடம் 4 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது, எனவே இந்த பருவத்தில் 16 ஆயிரம் ரூபாய் அரசு நிதியுதவியும் கிடைத்தது. ஆனால் சாகுபடி செலவுகள் இன்று கட்டுபடியாகாத அளவுக்கு அதிகமாகிவிட்டன. தொழிலாளர்களுக்கான கூலி, பூச்சிக்கொல்லி, உரம், விதைகள் என அனைத்து உள்ளீடுகளுக்குமான விலைகள் அதிகரித்துவிட்டன. ஆனால் சந்தையில் விளைபொருட்களுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை. எனவே 25 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கான நிதியுதவியை குறைத்துவிட்டு, சிறிய விவசாயிகளுக்கான நிதியுதவியை அதிகரிக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று சொல்கிறார் சுக்மாரி சுமையா.
பட மூலாதாரம், PRIYANKA DUBEY / BBC
ரயத் பந்து திட்டத்திற்கு பிறகு 'ரயதூ பீமா யோஜனா' என்ற மற்றொரு காப்பீட்டுத் திட்டம் தெலங்கானா விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, விவசாயிகளுக்கான 5 லட்சம் ரூபாய் காப்பீடு திட்டம்.
இந்த திட்டத்தை விவரிக்கும் சுகேந்தர், "விவசாயிகளின் வாழ்க்கைக்கு பிறகும் அவர்களின் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடாது என்று அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த விரும்புகிறோம். எனவே, எல்.ஐ.சி மூலமாக ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி, தெலங்கானாவைச் சேர்ந்த 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது" என்று சொல்கிறார்.
இந்த காப்பீடு திட்டத்திற்கான வருடாந்திர பிரீமியமாக விவசாயி ஒருவருக்கு 2271 ரூபாயை அரசு எல்.ஐ.சி.க்கு செலுத்துகிறது. முதல் தவணையாக 630 கோடி ரூபாய் காப்பீட்டு பிரீமியம் செலுத்தப்பட்டுள்ளது. விபத்து மற்றும் எதிர்பாராத விதங்களில் ஏற்படும் இறப்புக்கு இந்த காப்பீடு இழப்பீடு கொடுக்கும்" என்று சுகேந்தர் கூறுகிறார்.
சித்திபேட்டில் ராயவரம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் விவசாயிகளுக்கான காப்பீட்டு திட்டத்தின் பத்திர சான்றிதழ்களை படித்து பார்த்தேன். சித்திபேட் மாவட்டத்தில் ராயவரம், ஜன்காவ் மாவட்டத்தின் அகராஜ்பலி மற்றும் ஹரிகோபாலா, நகர்புற வாரங்கல் மாவட்டத்தின் ஆத்மகுரூ கிராமம் என மூன்று மாவட்ட விவசாயிகளும் ரய்தூ காப்பீட்டு திட்டத்தால் திருப்தியடைந்துள்ளனர்.
அக்ராஜ்பலி கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்ற விவசாயி, தன்னிடம் 2.5 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், இந்த காப்பீட்டுத் திட்டத்தால் தனக்கு நன்மை கிடைக்கும் என்றாலும், 'மிஷன் காக்தியா'வால் அவரது கிராமத்திற்கு எந்த நல்லதும் நடக்கவில்லை என்றும் சொல்கிறார், ஏனெனில் அவரது வயலுக்கு அருகில் குளம் எதுவும் இல்லை".
ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்காகவே தெலங்கானா அரசு இந்தத் திட்டங்களைத் தொடங்கியிருப்பதாக நம்புகிறார், தெலங்கானா மாநிலத்தில் விவசாயிகளின் உரிமைகளுக்காக நீண்ட காலமாக பணியாற்றிவரும், சுயாதீன சமூக ஆர்வலர் நைன்லா கோவர்தன்.
"இவை அனைத்தையும் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாக தொடங்கியதற்கான காரணம் என்ன? கே.சி.ஆர். அரசு, தனது கருவூலத்தை காலி செய்து அடுத்த தேர்தலுக்கு தயாராகிறது, அறிவிக்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடிகள் இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை. வாக்குகளை சட்டபூர்வமான ஊழல் மூலம் பணம் கொடுக்கும் விதமாக இத்தகைய திட்டங்களுடன் மக்களை அணுகுகிறார்கள், உண்மையில் விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை கிடைப்பது போன்ற அடிப்படை உரிமைகளுக்காக விவசாயிகள் இன்றும் போராடுகின்றனர்" என்று முத்தாய்ப்பாக சொல்லி முடிக்கிறார் சமூக ஆர்வலர் நைன்லா கோவர்தன்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்