‘செல்போன் வாங்கி தராததால் தீக்குளித்த கல்லூரி மாணவி’

இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.

இந்து தமிழ்: 'செல்போன் வாங்கி தராததால் தீக்குளித்த கல்லூரி மாணவி'

பட மூலாதாரம், Getty Images

செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மன நல மருத்துவர்கள், குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்தாதீர்கள் என பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ்.

"திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். கொத்தனார் வேலை செய்கிறார். சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மகள் மாலதி (18). கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். தனது தோழிகள் வைத்துள்ளதைப் போல தனக்கும் ஸ்மார்ட் போன் வேண்டும் என தந்தையிடம் நீண்ட நாட்களாக மாலதி கேட்டு வந்துள்ளார். பிறந்த நாள் அன்று வாங்கி தருவதாக பாஸ்கர் உறுதி அளித்திருந்தார். கடந்த வியாழக்கிழமை மாலதி பிறந்தநாள். ஆனால் சொன்னபடி, பாஸ்கரால் போன் வாங்கித் தரமுடியவில்லை. அவரும் சமாதானம் செய்திருக்கிறார்.

இந்நிலையில் மாலதி நேற்று இரவு தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு வலியால் துடித்தார். இதனால் பெற்றோரும் உறவினர் களும் அதிர்ச்சி அடைந்தனர். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, மாலதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்து விட்ட தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொளத்தூர் போலீஸார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ்.

'தமிழகத்தில் இன்று கடைகள் அடைப்பு'

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று முழுஅடைப்புப் போராட்டம் நடக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. பேருந்துகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்கிறது அந்நாளிதழ்.

பட மூலாதாரம், Getty Images

"சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை வரலாறுகாணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர் கிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் அதன் விலையை குறைக்க வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு (பாரத் பந்த்) காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இந்த முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது." என்று அந்நாளிதழ் விவரிக்கிறது.

தினத்தந்தி: 'எழுவர் விடுதலை: ஒரு மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கலாம்'

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், கவர்னர் நினைத்தால் 1½ மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று தமிழக முன்னாள் தலைமை குற்றவியல் வக்கீல் பி.குமரேசன் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"தமிழக அமைச்சரவையில் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் கவர்னரிடம் உள்ளது. அதே நேரம், தமிழக அரசின் இந்த தீர்மானத்தை அப்படியே கவர்னர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருக்கு அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், அதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பலாம்.

தமிழக அரசு விளக்கம் அளித்த பிறகு, அதை ஏற்றுக்கொள்வது குறித்து கவர்னர் இறுதி முடிவு எடுக்கலாம். இவர்கள் அனைவரும் நீண்ட காலம் சிறையில் இருப்பதனால், இவர்களை உண்மையிலேயே விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், இந்த விடுதலை நடவடிக்கை அனைத்தையும் 1½ மணி நேரத்தில் முடித்து, விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கலாம்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'அஜய் பாரத்; அடல் பாஜக: மோதி திட்டம்'

அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு "அஜய் பாரத்; அடல் பாஜக'' (வெல்ல முடியாத பாரதம்; அசைக்க முடியாத பாஜக) என்ற பிரசார முழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துள்ளார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோதி, ஞாயிற்றுக்கிழமை உரையாற்றியபோது, அடல் பிகாரி வாஜ்பாயை கெளரவிக்கும் நோக்கிலும் இந்த முழக்கத்துடன் பேசத் தொடங்கினார் என்கிறது அச்செய்தி.

இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் கூறுகையில், "அஜய் பாரத், அடல் பாஜக என்பதன் அர்த்தம், யாராலும் வசப்படுத்த முடியாத வெற்றியாளராக இந்தியா திகழுகிறது என்பதும், ஒரு கட்சி தமது கொள்கைகளில் உறுதியாக இருக்கிறது'' என்று விவரிக்கிறது தினமணி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'புலம்பெயர்ந்தவர்கள் ஆதரவு மையம்'

பட மூலாதாரம், Getty Images

திருப்பூரில் இடம்பெயர்ந்தவர்களுக்கு, வேலை மற்றும் தங்கும் வசதி குறித்து உதவுவதற்கு, புலம்பெயர்ந்தவர்கள் ஆதரவு மையத்தை ஒடிஷா அரசாங்கம் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

மேலும் முதல்முறையாக இம்மாதிரியான ஆதரவு மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது அச்செய்தி.

ஒடிஷாவிலிருந்து கோயம்புத்தூர் மற்றும் திருப்பூருக்கு வேலை தேடி வரும் அதிக அளவிலான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக இந்த மையம் செயல்படும்.

சுமார் 30,000 தொழிலாளர்கள் ஒடிஷாவிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கு வந்துள்ளதாக, ஒடிஷா அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

30,000 பணியாளர்களும் பயன்படும் வகையில், தங்கும் வசதி, ஆலோசனை அறை, முதலுதவி வசதிகள் ஆகியவை இந்த ஆதரவு மையத்தில் வழங்கப்படும் என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :