"நீங்கள் ஏன் தாலி அணியவில்லை?" - வரவர ராவ் மகளிடம் கேள்வியெழுப்பிய காவல்துறை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வரவர ராவ்

"என்னுடைய தாத்தா வீட்டில் சோதனை நடந்ததென்று பள்ளியின் வேன் டிரைவரின் மூலம் எனக்கு தெரியவந்தது. அன்றைய தினத்தின் மாலை வேளையில் எங்களது குடும்பத்தினருடன் இணைந்து என்னுடைய பாட்டி நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் கூறிய விடயங்களின் மூலம்தான் அன்றைய நாள் முழுவதும் அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதுகுறித்து கேட்டவுடன், கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை" என்று வரவர ராவின் வீட்டில் புனே காவல்துறையினர் நடத்திய சோதனை குறித்து அவரது ஒன்பது வயது பேத்தி எழுதுகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதுமுள்ள பல்வேறு செயற்பாட்டாளர்களின் வீடுகளில் புனே காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஹைதராபாத்தில் வசிக்கும் கவிஞரும், செயற்பாட்டாளருமான வரவர ராவும், அவரது மகளின் வீடும் அடக்கம்.

இந்நிலையில், புனே காவல்துறையினர் சோதனை நடத்திய விதம், அவர்கள் எழுப்பிய கேள்விகள் ஆகியவை குறித்து வரவர ராவின் மகளான பாவனா பிபிசியிடம் பேசினார்.

"பிராமணரான நீங்கள் ஏன் பொட்டு வைக்கவில்லை என்று காவல்துறையினர் என்னிடம் கேட்டனர். ஆனால், பெரிய நட்சத்திரங்கள் பொட்டு வைக்கவில்லை என்றால் காவல்துறையினருக்கு கவலையில்லை. ஆனால், நான் பொட்டு வைக்காததுதான் அவர்களுக்கு பிரச்சனையாக தெரிந்தது" என்று பாவனா கூறினார்.

கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரியும் பாவனா அன்றைய தினம் கல்லூரிக்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது காலை 8:30 மணியளவில் புனே மற்றும் தெலங்கானா காவல்துறையினர் கூட்டமாக அவரது வீட்டிற்குள் நுழைந்தனர். தனது கணவர் படுக்கையிலிருந்து தூங்கி எழுந்த நேரத்தில் வீட்டிற்குள் காவல்துறையினர் வந்ததை பார்த்தவுடன் தான் அதிர்ச்சியடைந்துவிட்டதாக பாவனா கூறுகிறார். நல்ல வேளையாக காவல்துறையினர் வந்த நேரத்தில் தனது மகள் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

"வரவர ராவை தேடி தாங்கள் வந்ததாக என்னிடமே கடிதத்தை காட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டிற்குள் வந்த உடனேயே முதல் வேலையாக எங்களது அலைபேசியை பறிமுதல் செய்ததோடு, மற்ற தகவல்தொடர்பு சாதனங்களின் இணைப்பையும் துண்டித்தனர். மேலும், வீட்டின் மேசைகளிலும், அறைகளிலுள்ள அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை நோட்டமிட்டனர்" என்று பாவனா கூறுகிறார்.

சிவப்பு வண்ண அட்டைகளை கொண்ட புத்தகங்களை பார்த்து ஆச்சரியமடைந்த காவல்துறையினர், ஏன் மாவோ, மார்க்சின் புத்தகங்களை வைத்துள்ளீர்கள் என்று என்னிடம் விசாரித்தனர்.

"நானும் என்னுடைய கணவரும் கல்வித்துறையில் பணிபுரிவதால் கேசட் வடிவில் கற்பித்த சில பாடங்களை சேமித்து வைத்திருந்தோம். நாங்கள் ஏன் கேசட்டுகளை வைத்திருக்கிறோம் என்றும் காவல்துறையினர் எங்களிடம் கேட்டனர்" என்று அவர் மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வரவர ராவ்

பாவனாவின் கணவரான சத்யநாராயணா ஹைதராபாத்திலுள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்திலுள்ள (இஎஃப்எல்யு) கலாசார படிப்புகளுக்கான துறையின் தலைவராக உள்ளார்.

எங்களது வீட்டை சோதனையிட வந்திருந்த காவல்துறையினரின் ஒருவர், இவ்வளவு புத்தகங்களை படித்த நாங்கள் எவ்வளவு அபாயமானவர்களாக இருப்போம் என்று கூறியது எங்கள் இருவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மேலும், மன உளைச்சலை உண்டாக்கும் பல்வேறு கேள்விகளை காவல்துறையினர் எங்களிடம் கேட்டனர். பெண்களுக்கான அமைப்பான சைதன்யா வைவஸ்தாபகத்தின் நிறுவன உறுப்பினராகவும், மஹிளா மார்கம் என்னும் இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர் போன்ற தனிப்பட்ட அடையாளத்தோடு நான் வாழ்ந்து வருகிறேன். ஆனால், வரவர ராவின் மகள், சத்தியநாராயணாவின் மனைவி ஆகியவற்றின் அடிப்படையில்தான் காவல்துறையினர் என்னிடம் நடந்துகொண்டனர்.

உங்கள் வீட்டில் ஏன் கடவுளின் ஒரு படம்கூட இல்லை? நீங்கள் ஏன் பண்டிகைகளை கொண்டாடாடுவதில்லை? நீங்கள் ஏன் தாலி அணியவில்லை? என்பது போன்ற பல கேள்விகளை தன்னிடம் காவல்துறையினர் எழுப்பியதாக பாவனா கூறினார்.

இவற்றையெல்லாம் செய்யாதே என்று உங்கள் தந்தையால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா? என்றும் அவர்கள் கேட்டனர். எங்களது வாழ்க்கைப்போக்கும், சாதி மறுப்பு திருமணமும் அவர்களுக்கு மிகவும் அந்நியமாக தெரிந்தது. ஆனால், எங்களது வீட்டில் இருந்த அதிகளவிலான புத்தகங்களே அவர்களது மிகப் பெரிய கவலையாக இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள்

"எனது மகள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு திரும்ப வரும் நேரம் ஆகியபோதுகூட காவல்துறையினர் தொடர்ந்து எங்களது வீட்டில் சோதனை நடத்தியதால், இது எனது மகளுக்கு எந்த விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்? ஒருவேளை காவல்துறையினர் எங்களை கைது செய்தால் என்ன நடக்கும்? என்பதை எண்ணி நான் கவலைக்கொண்டேன்" என்று பாவனா பிபிசியிடம் கூறினார்.

நல்ல வேளையாக எங்களது வீட்டின் வெளியே காத்துக்கொண்டிருந்த நண்பர்கள் சிலர் பள்ளியிலிருந்து வந்த எங்களது மகளை அவர்களது வீட்டிற்கு கொண்டுசென்றுவிட்டனர் என்று அவர் கூறினார்.

அதன் பிறகுதான் ஆணைப்பத்திரம் எதுவுமே இல்லாமல் அவர்கள் எங்களது வீட்டில் சோதனை நடத்தியது எங்களுக்கு தெரியவந்தது. காவல்துறையினரின் நடவடிக்கையை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்ள விரும்புகிறோம். எங்களது அலைபேசிகள், மடிமேற்கணினிகள், தரவு சேமிப்பு கருவிகள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை போன்று உணருகிறோம் என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்