ஸ்டெர்லைட்: தமிழக கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கை விசாரிக்க அனுமதிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி, அதற்கு எதிராக பொதுமக்கள் போராடிவந்த நிலையில், மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லாது என்று கூறி அந்த ஆலையை நடத்திவந்த வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் தொடர்பாக குழு அமைக்கப்பட்டதை எதிர்த்தும், ஸ்டெர்லைட் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்கக்கூடாது என்று கூறியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அந்த அமைப்பிடம்தான் முறையிட வேண்டுமென்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர முடியாது என்றும் தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் இது தொடர்பாக விசாரிக்க குழு அமைத்தது தவறு என்றும் கூறினார்.

ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விசாரணைக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழக அரசு தன் தரப்புக் கருத்தை அறிக்கையாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதியன்று தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அரசின் நீர்வளத் துறை செயலருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் மூலம் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் எந்த அளவுக்கு மாசடைந்திருக்கின்றது என்ற ஆய்வு மாநில அரசுக்குத் தெரியாமல் செய்யப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல ஆய்வுகளுக்குப் பிறகே, ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை புதுப்பிக்க மறுத்து உத்தரவிட்டது என்றும் தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால், தற்போது நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக இருப்பதாகவும் தூத்துக்குடியில் தற்போதுதான் அமைதி திரும்பிவரும் நிலையில் இம்மாதிரி ஒரு அறிக்கை தேவையில்லாதது எனவும் இந்த அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாகவும் தலைமைச் செயலர் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :