எட்டுவழிச்சாலை: "தமிழ்நாட்டில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறது"- யோகேந்திர யாதவ்

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
யோகேந்திர யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

யோகேந்திர யாதவ்

சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டம் அடுத்துவரும் இருபது ஆண்டுகளுக்கு பயன்தரும் வழியில் அமையும் என்று தமிழகம் மற்றும் மத்திய அரசைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கூறுவதில் உண்மை இருப்பதாக தோன்றவில்லை.

அரசியல்வாதிகளின் சட்டைப்பைகளை விரைவாக அடுத்த இருபது வாரங்களில் நிறைத்துக்கொள்வதற்காக கொண்டுவரப்படும் திட்டம் இது என்கிறார் ஜெய் கிசான் அந்தோலன் என்ற விவசாய அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ்.

ஆம் ஆத்மி கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்து அந்தக் கட்சி தில்லியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் யோகேந்திர யாதவ். பிறகு கட்சித் தலைவர் கேஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இவர் தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் . சென்னை -சேலம் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் அழைப்பு விடுத்ததின் பேரில் கடந்த வாரம் அவர் தமிழகம் வந்திருந்தார் .

எட்டுவழிச்சாலை அமையவுள்ள திருவண்ணாமலை முதல் கரூர் வரையுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை சந்தித்து பேச வந்த அவர் இரண்டு முறை தடுத்துநிறுத்தப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டார்.

படக்குறிப்பு,

நடிகர் கமல் மற்றும் யோகேந்திர யாதவ் சந்திப்பு

மூன்று நாள் பயணத்தின் முடிவில், சென்னை வந்திருந்த யோகேந்திர யாதவ் தனது அனுபவத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

திருவண்ணமலையில் விவசாயிகளைச் சந்திக்க சென்ற அவரை எந்த காரணமும் சொல்லாமல் காவல்துறையினர் தடுத்துவைத்த நிகழ்வு அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ''போலீஸ் ராஜ்ஜியம் எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்துகொண்டேன். எந்த காரணத்தையும் என்னிடம் காவல்துறையினர் சொல்லவில்லை. விவசாயிகளைச் சந்திக்கவந்த என்னை மிரட்டி,தடுத்து அந்த சந்திப்பை தொடரவிடாமல் செய்தார்கள். ஒரே ஒரு விவசாயியைத்தான் நான் சந்தித்தேன். நான் பயணத்தை தொடர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். என் நண்பரின் அலைபேசியை காவலர்கள் பிடுங்கிக்கொண்டார்கள்,'' என்று முதல் நாள் அவர் அடைத்துவைக்கப்பட்டது பற்றி பேசினார்.

திருவண்ணாமலை முதல் கரூர் வரை

முதல் நாள் மாலையில் காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கி, அவரை மேலும் பயணம் செய்யக்கூடாது என்று அறிவித்தார்கள். ''போலியாக நோட்டீஸ் ஒன்றை தயாரித்துவந்து என்னிடம் கொடுத்தார்கள். நான் தமிழகம் வரும் முன்னரே பயணத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறும் நோட்டீசை கொடுத்தார்கள். அந்த நோட்டீஸ் தமிழகத்தில் உள்ள பல சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்கள்.

நானும் பலரிடம் விசாரித்துவிட்டேன். யாரிடமும் இதுபோன்ற அறிக்கை அளிக்கப்படவில்லை. நான் மீண்டும் பயணத்தை தொடங்கினேன். மீண்டும் தடுத்துவைத்தார்கள். என்னை கைது செய்தார்கள். இரவு நேரம் விடுவித்தார்கள். மீண்டும் என் பயணத்தை நோக்கி செல்வதாக சொல்லிவிட்டு கரூர் நோக்கிச் சென்றேன்,'' என்று இரவில் தடுப்புகாவலில் இருந்து வெளியேற்றப்பட்ட விவரங்களை தெரிவித்தார்.

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு,

தருமபுரியிலுள்ள விவசாயிகளுடன் யோகேந்திர யாதவ்

விவசாயிகளை சந்திப்பதற்கு ஏன் தடைவிதிக்கிறார்கள்?

தமிழகம் வருவதற்கு முன்பு எட்டுவழிச்சாலை திட்டம் பற்றி எந்த அபிப்ராயம் இல்லாமல் இருந்ததாக கூறும் யோகேந்திர யாதவ் தற்போது திட்டத்தின் நோக்கம் குறித்து அரசு தெளிவான விவரம் கொடுத்தால் அவர்களின் நியாயத்தைக் கேட்டறிய ஆவலாக இருப்பதாக கூறுகிறார். ''சாலை போடுங்கள். மக்களுக்கு பயன் தரும் திட்டத்தை எதிர்ப்பது என் நோக்கம் அல்ல.

ஆனால் விவசாயிகளை அவர்களின் வீடுகளில் சென்று நான் சந்தித்தால் அது பொதுமக்களிடம் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று கூறி என்னை தமிழக அரசு தடுக்கிறது என்பது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த நிலையிலும் கூட, தமிழக அரசிடம் உள்ள நியாயங்களை கேட்டறிய விரும்புகிறேன். சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கு ஏற்கனவே மூன்று விதமான சாலைகள் இருக்கும்போது எதற்காக இந்த புதிய சாலை? ஏன் நிலம் கையகப்படுத்தும் கிராமங்களில் உள்ள மக்களை சந்திக்க தடை விதிக்கிறார்கள்?,'' என்று கேள்விஎழுப்புகிறார்.

சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வு அறிக்கையை தயார் செய்துள்ள நிறுவனம் உலகவங்கியால் தடை செய்யப்பட்ட நிறுவனம் என்று கூறிய யோகேந்திர யாதவ், ''சுமார் ரூ.10,000 கோடி செலவில் ஒரு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர திட்டமிடுகின்றன என்கிறபோது, அவர்கள் ஏன் அறிக்கை தயாரிப்பதில் ஒரு தடை செய்யப்பட்ட நிறுவனத்தின் ஆய்வை அனுமதிக்கிறார்கள்.

அதிலும் அந்த அறிக்கை இணையத்தில் கிடைக்கும் அறிக்கைளில் இருந்து பல பகுதிகளை காப்பியடித்து எழுதியது என்று தெளிவாக தெரிந்துவிட்ட பிறகும், அரசு இந்த திட்டதில் ஏன் பிடிவாதமாக இருக்கிறது? இந்த திட்டத்தால், சீனாவில் உள்ள கிராமங்கள் பயன்பெறும் என்கிறது அறிக்கை. இதுபோன்ற மோசமான செயலை ஏன் அரசியல்வாதிகள் ஆதரிக்கிறார்கள் என்பதை யோசிக்கவேண்டும்,'' என்கிறார்.

எமர்ஜென்சி காலத்தில் இருக்கிறோமா?

எட்டுவழிச்சாலை திட்டத்தை அமலாக்குவதற்கு தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துவதாக கூறுகிறார் யோகேந்திர யாதவ். ''திருவண்ணாமலையில் எங்களை காவலர்கள் தடுத்தபோது, விவசாய அமைப்பை சேர்ந்த நான் பிற விவசாயி ஒருவரை ஏன் சந்திக்கக்கூடாது என்று கேள்வியைக் கூட கேட்க அனுமதிக்கப்படவில்லை. என்னுடன் வந்திருந்த நண்பர்கள் பலரும் இதுபோன்ற ஒடுக்குமுறை எமர்ஜென்சி காலத்தில் தங்களுக்கு நேர்ந்தது என்று நினைவுகூர்கிறார்கள். அரசு இயந்திரம் சாதாரண மனிதர்களை இப்படி ஒடுக்குவது என்ன நியாயம்?. பல இடங்களில் தடை விதிக்கிறார்கள். நம் பயணத்தை தடுக்க போலியாக ஆவணங்களைத் தயாரித்து தருகிறார்கள் என்பதெல்லாம் எமர்ஜென்சி காலத்தை போன்ற உணர்வை தற்போது ஏற்படுத்துகின்றன,'' என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :