ஹைதராபாத் நிஜாமின் 2 கிலோ தங்க டிபன் பாக்சுக்கு என்ன ஆனது?

ஹைதராபாத்தின் புகழ்பெற்ற நிஜாம் அருங்காட்சியகத்திலுள்ள 7வது நிஜாம் மிர் கானுக்கு சொந்தமான தங்கத்தில் செய்யப்பட்ட தேநீர் கோப்பை, கோப்பை வைக்கும் சிறு தட்டு, தேக்கரண்டி மற்றும் தங்க டிபன் பாக்ஸ் ஆகியவை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருடப்பட்டது.

அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்கள் தக்காணத்து சுல்தான்களின் கலாசாரத்தை பிரதிபலிப்பதுடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் கருதப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை குறித்து நிஜாமின் கொள்ளுப்பேரனான நவாப் நஜாப் அலி கான் பிபிசியிடம் பேசினார்.

நிஜாம்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களது மாளிகைகளில் ஒன்றாக விளங்கிய இந்த கட்டடம் கடந்த 2000வது ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

தனது கொள்ளுத்தாத்தா இந்த அருங்காட்சியகத்திலுள்ள பெரும்பாலான பொருட்களுடன் சிறப்பான பிணைப்பை கொண்டிருந்ததாகவும், குறிப்பாக தற்போது களவாடப்பட்டுள்ள பொருட்கள் நிஜாமுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்ததாகவும் நவாப் நஜாப் அலி கான் கூறினார்.

தற்போது திருடப்பட்டுள்ள பொருட்களில் ஒன்றான மதிய உணவு பெட்டி தங்கத்தால் செய்யப்பட்டு, அதன் மேலே வைரம் பொறிக்கப்பட்டது எனவும், சுமார் இரண்டு கிலோ எடை கொண்டதாக அது இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

அவை தனது கொள்ளுத்தாத்தாவுக்கு அடையாளம் தெரியாத யாரோ ஒருவரால் பரிசாக வழங்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"மிகவும் தனிப்பட்ட மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது" என்றும் இவற்றை பாதுகாக்க தவறிய அருங்காட்சியக நிர்வாகத்தின் செயல்பாடு அதிருப்தியை அளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை NAZAF ALI KHAN
Image caption நவாப் நஜாப் அலி கான்

இந்த அருங்காட்சியகத்தில் வேறென்ன பொருட்களெல்லாம் உள்ளது?

நிஜாம் உடுத்திய உடைகள், அவர் பயன்படுத்திய பலதரப்பட்ட வாசனை திரவிய பாட்டில்கள், காலணிகள், தொப்பிகள் மற்றும் பைகள் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமில்லாமல், சீக்கியர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள் போன்ற பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் அளித்த தங்கம் மற்றும் வெள்ளியிலான கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தனது பிராந்தியத்தில் எப்போதெல்லாம் நிஜாம் வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறாரோ அப்போதெல்லாம் மக்கள் அவருக்கு வெள்ளியிலான கொலுறுவை அளித்ததாக அவர் மேலும் கூறுகிறார். அவ்வாறு அளிக்கப்பட்ட யானை தந்தத்திலான கைப்பிடியை கொண்ட ஒரு கொலுறுவை கொண்டே ஹைதராபாத்தின் பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான உஸ்மான் சாகர் கட்டப்பட்டதாகவும், அதை இந்த அருங்காட்சியகத்தில் காண முடியுமென்றும் அவர் கூறினார்.

"உஸ்மானியா கலைக்கல்லூரி கட்டடம், மோசம்ஜாஹி சந்தை, நாம்பள்ளி ரயில் நிலையம், உயர்நீதிமன்ற கட்டடம், உஸ்மானியா மருத்துவமனை போன்ற 500க்கும் மேற்பட்ட நினைவுச்சின்னங்களின் மாதிரிகள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன" என்று கூறும் நஜாப் அலி கான், இதிலுள்ள மொத்த கலைப்பொருட்களின் மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய் இருக்குமென்று கூறுகிறார்.

மஸ்ரத் மஹால் மாளிகையின் மேல் மாடிக்கு செல்வதற்கு நிஜாம் பயன்படுத்திய மரத்தினாலான (லிஃப்ட்) தூக்கியையும் இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். தனது நூற்றுக்கும் மேற்பட்ட உடைமைகளை வைத்துக்கொள்வதற்காக 140 அலமாரிகளை கொண்ட மிகப் பெரிய துணிமணி அடுக்கையை நிஜாம் வைத்திருந்ததாக நவாப் அலி கான் கூறுகிறார்.

நிஜாம் மிகவும் விரும்பி பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஜாகுவார் நிறுவன வாகனங்கள் பலக்னுமா மாளிகையின் புல்வெளிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. நிஜாமின் பெருந்தன்மையை பற்றி பேசும்போது, வெறும் ஒரு ரூபாய்க்கு நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்-ஐ நிஜாம் அரசாங்கத்துக்கு குத்தகைக்கு கொடுத்ததை அவர் நினைவுகூறுகிறார்.

சமீபத்தில் நடந்துள்ள திருட்டு சம்பவம் குறித்து பேசுகையில், இது அருங்காட்சியக மேற்பார்வையிலுள்ள குளறுபடிகள் மற்றும் அலட்சியத்தால் நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

நிஜாம் அருங்காட்சியகத்தின் பாழடைந்த மரத்தினாலான படிகள், அங்குள்ள கலைப்பொருட்கள் அதன் நிர்வாகத்தால் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறன்றன என்பதற்கு ஒரு சாட்சியம் என்று அவர் கூறுகிறார்.

பிபிசியிடம் பேசிய வரலாற்றாசிரியரான முகம்மது சபியுல்லா, 7ஆம் நிஜாமான நிஜாம் மிர் கான் தக்காணத்தின் அரசராக 1911ஆம் ஆண்டு ஆகஸ்டு 29ஆம் தேதி முதல் 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வரை ஆட்சியில் இருந்ததாக கூறுகிறார். இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கலைப்பொருட்கள் மற்றும் பரிசுகள் கடந்த 1937ஆம் ஆண்டு நடந்த நிஜாம் மிர் கானின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின்போது பலதரப்பட்ட மக்களால் அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டவை என்று சபியுல்லா கூறினார்.

தங்கத் தகடு போர்த்திய நிஜாமின் அரியணை, வெள்ளியிலான வாசனை திரவிய பாட்டில் ஆகியவை பல்வன்ச்சா ஆட்சியாளர்களாலும், யானை தந்தத்தால் செய்யப்பட்ட சார்மினாரின் மாதிரி மைசூர் ராஜாவாலும், பிரான்சில் இருந்து பீங்கானாலான தேநீர் கோப்பை, லண்டனில் இருந்து வந்த காப்பி செய்ய பயன்படும் பாத்திரங்கள், முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட கைத்தடி ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாய்வாளர் சபியுல்லா பிபிசியிடம் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :