பாலியல் குற்றச்சாட்டு: திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் விடுவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான குமார் தாக்கூர் திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா (மத்திய அரசுப்பள்ளி) பள்ளியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இப்பள்ளியில் பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட முதல்வர், கடந்த ஒரு மாதமாக பணியில் இருந்ததை ஊடகங்கள் வெளிப்படுதியத்தை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடக மாநிலத்தில் கேந்திரிய வித்யாலயா (கே.வி) பள்ளியில் பணிபுரிந்தபோது குமார் தாக்கூர் அங்குள்ள குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் சைல்ட் ரைட்ஸ் டிரஸ்ட் அமைப்பு புகார் அளித்தது. இதையடுத்து அங்குள்ள மற்றொரு பள்ளிக்கு அவர் மாற்றப்பட்டர். மீண்டும் சர்ச்சை எழவே, கர்நாடகாவில் இருந்து தமிழகத்தில் திருவண்ணாமலையில் உள்ள கே.வி.பள்ளிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டார்.

குற்றம் சுமத்தப்பட்ட குமார் தாக்கூர் தொடர்ந்து பள்ளியில் பணிபுரிவது தொடர்பாக பிபிசி தமிழ் உட்பட பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதில் பிபிசி தமிழிடம் பேசிய குமார் தாக்கூர், தான் கர்நடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்று கூறினார். அவர் மீது வழக்கு நடந்தாலும், கடந்த ஒரு மாதமாக திருவண்ணாமலையில் பணிபுரிந்து வருவதாக உறுதிப்படுத்தினார்.

அதேபோல கே.வி பள்ளி நிர்வாகத்தில் இடம்பெற்ற பெற்றோர் ஒருவரும் குமார் தாக்கூர் விவகாரத்தை எவ்வாறு கையாளுவது என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த செய்தியை அடுத்து, குமார் தாக்கூர் மீதான வழக்கு நடந்து வந்தாலும், போக்சோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச்சட்டம்) குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், பள்ளியில் பணிபுரிவது அங்குள்ள குழந்தைகளுக்கு அச்ச உணர்வை தரும் என்று குழந்தைகள் நலஆர்வலர்கள் தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்திடம் தெரிவித்து, அவரை உடனடியாக நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தொடர்ந்து குமார் தாக்கூர் மீதான வழக்கு பற்றிய விவாதங்கள் எழவே, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பள்ளி முதல்வர் பணியில் இருந்து அவரை விடுவிக்கும் ஆணையை பிறப்பித்தார்.

''தமிழகத்தில் உள்ள மற்ற கேவி பள்ளிகளைப்போல அல்லாமல், திருவண்ணாமலையில் உள்ள கேவி பள்ளிக்கான இடத்தை மாநில அரசு வழங்கியுள்ளது என்பதால் பள்ளியின் நிர்வாகத் தலைவர் பொறுப்பு மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. இதனை பயன்படுத்தி, குமார் தாக்கூரை பணியில் இருந்து விடுவிக்கும் உத்தரவைப் பிறப்பித்தேன். மேலும் இவர் எவ்வாறு திருவண்ணாமலையில் உள்ள பள்ளியில் அமர்த்தப்பட்டர் என்று கே.வி. பள்ளிகளுக்கான ஆணையத்திடம் விவரங்கள் கேட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளேன்,'' என்று ஆட்சியர் கந்தசாமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

குமார் தாக்கூர் போல பாலியல் வன்முறை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் வழக்கை எதிர்கொண்டு, தீர்ப்பில் குற்றவாளி அல்ல என்று நிரூபணம் ஆகும்வரை குழந்தைகள் இருக்கும் பள்ளிகள், நூலகம் போன்ற எந்த இடங்களிலும் பணியில் அமர்த்தக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கவேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் ஆண்ட்ரூ சேசுராஜ்.

''குமார் தாக்கூர் விவகாரத்தில் பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டது பேருதவியாக இருந்தது. கேவி பள்ளியில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் குமார் தாக்கூர் பற்றி தெரியும் என்றும் குழந்தைகளின் பாதுகாப்பை எண்ணிவருந்தும் பெற்றோரின் நிலையை வெளிப்படுத்தியதற்கு நன்றி. ஊடக வெளிச்சத்தால் இன்று குமார் தாக்கூர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் வேறு பள்ளியில் சேரக்கூடாது. இந்த நடைமுறையை கே.வி. பள்ளிகள் பின்பற்றவேண்டும்,''என்று தெரிவித்தார் ஆண்ட்ரூ.

பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவருக்கு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளை குமார் தாக்கூர் துண்டித்ததால் அவரது கருத்தைப் பெற இயலவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :