30 ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி கருக்கலைப்பு: கருவுக்கு வாழ்வுரிமை உண்டா?

கரு படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண் கருவுற்றிருந்த நிலையில், அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 18 வயது பெண்ணின் கரு 27 வாரங்கள் வளர்ந்துவிட்ட நிலையில், கருக்கலைப்பு செய்வது தாயின் உயிருக்கே ஆபத்தானது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்றம், ஒரு பெண்ணின் கருப்பையில் வளரும் கருவுக்கு உள்ள உரிமைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின்படி, எந்தவொரு சட்டத்தையும் மீறாத வரையில், அனைவருக்கும் சுதந்திரத்துடன் வாழும் உரிமை இருக்கிறது.

இதை அடுத்து, உயிருள்ள மனிதருக்கு நிகரான உரிமைகள், ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் கருவுக்கும் உண்டா என்ற கேள்வி எழுகிறது. உலகில் இதைப் பற்றி இதுவரை இந்த விதமான கேள்விகளோ, கருத்துக்களோ பேசப்பட்டதில்லை.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ், 'கரு' என்ற சொல்லுக்கான வரையறை எதுவும் இருந்ததில்லை.

கரு என்றால் என்ன?

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம்) 1994ஆம் ஆண்டு, அறிமுகப்படுத்தப்பட்டபோது, கரு என்ற வார்த்தை முதன்முதலில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்டது.

ஒரு பெண்ணின் கருப்பையில், சினைமுட்டையுடன் விந்து இணைந்த எட்டாவது வாரத்தில், அதாவது 57 வது நாளில் இருந்து குழந்தை பிறக்கும்வரை, அது 'கரு' (' Foetus' means 'embryo' என்று வரையறுக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை BSIP

பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே விரும்பும் சமுதாயத்தில், கருவுற்றிருக்கும் பெண்ணின் கருப்பை திரவம் (அம்னியா சென்டஸிஸ்) சோதனை செய்யப்பட்டு, கருவில் உருவாகி இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால், கருவை கலைத்துவிடும் நடைமுறைகள் தொடங்கின.

கரு உருவாவதற்கு முன்னதாகவோ, பிறகோ பாலின தேர்வை தடை செய்யவும், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறியும் தொழில்நுட்பத்தை சீரமைக்கவும், பரம்பரை மாறுபாடுகள், வளர்ச்சிதை மாறுபாடுகள், குரோமோசோம் மாறுபாடுகள், பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றிகாக செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகளை முறைப்படுத்தவும் இந்த சட்டம் 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

1980 மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக 'லேன்செட்' என்ற சர்வதேச மருத்துவ சஞ்சிகையின் ஆய்வறிக்கை கூறுகிறது.

பெண் சிசுக்களை கொல்வதை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை மீறும் மருத்துவருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

கருவின் வாழும் அதிகாரத்தை முடிவு செய்வது யார்?

பெண் சிசுக் கொலைகளைத் தவிர, கருவில் இருக்கும் குழந்தையை கலைப்பதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன. உதாரணமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட ஒரு பெண் கருவுற்றால், அந்த கருவை கலைக்க, பாதிக்கப்பட்ட பெண் விரும்பலாம்.

அதேபோல், கருத்தடை வழிகள் பயனளிக்காமல் போகும் நிலையிலும், குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாத சந்தர்ப்பத்திலும், கருவை சுமக்க பெண் தயாராக இல்லாத நிலையிலும் கருவை கலைக்கும் முடிவை எடுக்க நேரிடலாம்.

இந்தியாவில் சில தசாப்தங்களுக்கு முன்னதாக, கருக்கலைப்பு செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. குழந்தை பிறந்தால், கருவுற்ற பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படும் நிலைமை இருந்தது.

அதிகரிக்கும் மக்கள்தொகை, தவறான ஆட்களிடம் போய் கருக்கலைப்பு செய்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 1971 ஆம் ஆண்டில், மருத்துவ முறை கருக்கலைப்புச் சட்டம் (The Medical Termination of Pregnancy Act) இயற்றப்பட்டது. அதன்படி, 20 வாரங்கள் வரையிலான கருவை கலைப்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது. கருவை சுமப்பதால், கருவுற்ற பெண்ணுக்கு உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியிலான பாதிப்புகள் ஏற்படும் என்ற நிலையிலும், பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கு உடல்ரீதியிலான, மனோரீதியிலான பாதிப்புகள் ஏற்படும் என்ற நிலையிலுமே கருக்கலைப்பு செய்யலாம்.

கருவில் உள்ள குழந்தையை கலைக்கும் முடிவை எடுக்கும் உரிமை கருவுற்ற பெண்ணுக்கும், கருவின் தந்தைக்கும் உண்டு. இருந்தாலும், இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் உரிமை மருத்துவருக்கே உண்டு.

படத்தின் காப்புரிமை BSIP

12 வாரங்களுக்கு உட்பட்ட கருவைக் கலைப்பதை முடிவு செய்யும் உரிமை பதிவு செய்யப்பட்ட மருத்துவருக்கு உண்டு. 12 முதல் 20 வாரங்கள் வரை வளர்ச்சியடைந்த கருவை கலைப்பதற்கு, பதிவுசெய்யப்பட்ட இரண்டு மருத்துவர்களின் ஒருமித்த கருத்து அவசியம்.

சட்ட விரோதமான கருக்கலைப்புக்கான தண்டனை

1971 ஆம் ஆண்டில், மருத்துவ முறை கருக்கலைப்புச் சட்டத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் ஒரு பெண் தனது கருவை கலைத்தாலோ அல்லது வேறு ஒருவர் அந்த முயற்சியை எடுத்தாலோ, அது குற்றம். அதற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

கருவுற்ற பெண்ணுக்கு தெரியாமல் யாராவது கருக்கலைப்பு செய்தது உறுதியானால், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். கருவை கலைக்கும் நோக்கத்தில் கர்ப்பிணியை தாக்கினாலோ, கொலை செய்தாலோ அல்லது குழந்தை பிறப்பதற்கு முன்பே கொலை செய்ய முயற்சி எடுத்தாலோ, குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஒருவரின் குறிப்பிட்ட நடவடிக்கையால் கர்பிணிக்கு மரணம் ஏற்பட்டாலோ அல்லது கருவுற்ற பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்களால் குழந்தை கருவிலேயே இறந்துபோனாலும், அது மரணத்தை ஏற்படுத்தும் செயலாக கருதப்பட்டு, அதற்கு பத்தாண்டுகள் தண்டனை விதிக்கப்படும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :