ஜெயலலிதாவுக்கு சட்டப்படியான வாரிசுகள் யாரும் உள்ளனரா?

இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.

தினத்தந்தி: 'ஜெயலலிதாவுக்கு சட்டப்படியான வாரிசுகள் யாரும் உள்ளனரா?'

ஜெயலலிதாவுக்கு சட்டப்படியான வாரிசுகள் யாரும் உள்ளனரா? என்பது குறித்து வருமான வரித்துறை தெரிவிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

படத்தின் காப்புரிமை Getty Images

"மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1997-1998-ம் ஆண்டு தனக்கு 4.67 கோடி ரூபாய் மதிப்புக்கு அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வருமான வரித்துறையிடம் கணக்கு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் 7.27 லட்சம் ரூபாய் சொத்து வரியாக நிர்ணயித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இந்தநிலையில் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, ஜெயலலிதாவுக்கு ரூ.3.83 கோடி மதிப்புக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பதாகவும், செல்வ வரி கணக்கை ஜெயலலிதா முறையாக காண்பிக்கவில்லை என்றும் வருமான வரித்துறைக்கு அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மறு மதிப்பீடு செய்து குறிப்பிட்ட தொகையை செல்வ வரியாக செலுத்த ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து, ஜெயலலிதா வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், வருமான வரித்துறை அதிகாரிகளின் திருத்திய மதிப்பீட்டை ரத்து செய்தது.

தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம், 'ஜெயலலிதாவுக்கு சட்டப்படியான வாரிசுகள் யாரும் உள்ளனரா? அல்லது அவர் தனது சொத்துகள் தொடர்பாக உயில் எதுவும் எழுதி வைத்துள்ளாரா? என்பது குறித்து வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ்.

இந்து தமிழ்: 'புல்லட்' நாகராஜன் கைதும் பின்னணியும்'

படத்தின் காப்புரிமை Getty Images

"சிறைத்துறை பெண் எஸ்பி உள்பட காவல் துறையினருக்கு தொடர்ந்து செல்போனில் கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ரவுடி 'புல்லட்' நாகராஜனை போலீசார் நேற்று பெரியகுளத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து டம்மி துப்பாக்கி, கத்தி, போலி, அடையாள அட்டைகள், சிறுவர்கள் வைத்து விளையாடும் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன." என்கிறது இந்து தமிழ் நாளிதழ்.

படத்தின் காப்புரிமை Facebook

"தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்பட 71 வழக்குகள் உள்ளன.

இவர் மதுரை சிறைத்துறை பெண் எஸ்.பி. ஊர்மிளாவுக்கு செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தென்கரை காவல் ஆய்வாளர் மதனகலாவையும் செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனால் ஒட்டுமொத்த காவல்துறையினருக்கே பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

மேலும், தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் பல காவல்துறை அதிகாரிகளின் பெயர்களைக் கூறி மிரட்டல் விடுத்த 3-வது ஆடியோவும் வெளியானது. இதனை புல்லட் நாகராஜனே வெளியிட்டார். இதிலும், காவல்துறையினரின் பல்வேறு நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் தன்னை முடிந்தால் பிடித்துப்பார் என காவல்துறைக்கு சவால் விட்டிருந்தார்.

புல்லட் நாகராஜனின் ஆடியோ பேச்சுகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவியபடி இருந்ததால் காவல்துறைக்கு நெருக்கடி அதிகரித்தது. அவரை உடனே கைது செய்ய டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

மதுரை ஜெயிலர் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீஸார் புல்லட் நாகராஜன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர் புல்லட் நாகராஜனி்ன் சொந்த ஊர், சில உறவினர்களின் வீடு, சென்னை உள்ளிட்ட இடங்களில் கண்காணித்தனர். அவரது செல்போன் கண்காணிக்கப்பட்டது. இதில், பெரியகுளம் பகுதியில் புல்லட் நாகராஜன் இருப்பது தெரியவந்தது. செல்போன் சிக்னல் மூலம் அவரை பின் தொடர்ந்த போலீஸார், பெரியகுளம் தென்கரை சர்ச் சாலையில் மோட்டார் சைக்கிளில் புல்லட் நாகராஜன் சென்றதை அறிந்தனர்.

பெரியகுளம் கூடுதல் எஸ்பி சுருளிராஜன் தலைமையிலான போலீஸார் அவரை சுற்றி வளைத்தனர். போலீஸாரிடம் இருந்து தப்பிக்க, துப்பாக்கியை காட்டி நாகராஜன் மிரட்டியுள்ளார். எனினும், போலீஸார் ஜீப், மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்றதால், நாகராஜன் மீது லேசான தாக்குதல் நடத்தி கைது செய்து ஜீப்பில் ஏற்றினர்.

அவரது பை, பைக்கில் சோதனையிட்டதில் டம்மி துப்பாக்கி, கத்தி, செல்போன்கள், போலி ரூபாய் நோட்டுகள், நிருபர், நீதிபதி, வழக்கறிஞர் என பல்வேறு பெயர்களில் போலி அடையாள அட்டைகள் கைப்பற்றப் பட்டன. நாகராஜனிடம் தேனி எஸ்பி பாஸ் கரன் தலைமையிலான போலீஸார், மதுரை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்." என்று விவரிக்கிறது இந்து தமிழ் நாளிதழ்.

தினமணி: 'ரூபாய் மதிப்பில் வரலாற்று வீழ்ச்சி'

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு திங்கள்கிழமை வரலாறு காணாத அளவில் 72.45-ஆக வீழ்ச்சி கண்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

"அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் வலுக்க கூடும் என்ற நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு , நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு, டாலருக்கான தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், திங்கள்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகத்தின் போது ரூபாய் ஒரு கட்டத்தில் 94 காசுகள் சரிவடைந்து 72.67 வரை சென்றது. அதன் பின்னர் வர்த்தகத்தின் இறுதிப் பகுதியில் சரிவிலிருந்து ஓரளவு மீண்டு மதிப்பு முன்னெப்போதும் காணப்படாத குறைந்தபட்ச அளவாக 72.45-ஆனது." என்கிறது அந்நாளிதழ் செய்தி.

"ரூபாய் மதிப்பு சரிவால் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளியான செய்தியும் பங்குச் சந்தைகளுக்கு பாதகமாகவே அமைந்தது. இதையடுத்து, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் பல துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனப் பங்கு குறைந்த விலைக்கு கைமாறின.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 467 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 37,922 புள்ளிகளில் நிலைத்தது. மார்ச் 16-ஆம் தேதிக்கு பிறகு ஏற்படும் ஒருநாள் அதிகபட்ச சரிவு இதுவாகும். தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 151 புள்ளிகள் சரிந்து 11,438 புள்ளிகளில் நிலைத்தது." என்று விவரிக்கிறது தினமணி நாளிதழ்.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'நிரம்பாத சீட்டுகள்'

மருத்துவ கவுன்சிலிங் முடிந்துள்ள சூழ்நிலையில் பல் மருத்துவ படிப்புகான அரசு கோட்டா 35 சீட்டுகள் இன்னும் நிரம்பவில்லை என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. அதும் சுய உதவின் கல்லூரிகளில் 505 சீட்டுகள் நிரம்பவில்லை என அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

இதுகுறித்து தேர்வு குழு செயலாளர் மருத்துவர் ஜி. செல்வராஜன், "மாணவர்கள் அனைவரும் எம்.பி.பி.எஸ் படிப்பில்தான் ஆர்வாக இருக்கின்றனர். அடுத்தாண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ் சீட் பெற தயாராக இருக்கிறார்களே தவிர பி.டி.எஸ் படிப்பில் சேர யாரும் தயாராக இல்லை" என்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்