தெலங்கானா: பேருந்து பள்ளத்தில் விழுந்து 53 பேர் பலி

தெலங்கானா மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று, செவ்வாயன்று ஜகித்தியால் எனும் நகரின் அருகே பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நகரம் ஹைதராபாத்தில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை FACEBOOK/KALVAKUNTLA KAVITHA

அந்தப் பேருந்து சனிவாரம்பேட்டா எனும் இடத்தில் இருந்து ஜகித்தியால் நோக்கி சென்று கொண்டிருந்தது.

கொண்டாங்கட்டு எனும் கோயிலுக்கு முந்தைய நிறுத்தத்தில் அந்தப் பேருந்து கீழே விழுந்ததாக சாலைப் பாதுகாப்புக்கான டி.ஜி.பி கிருஷ்ண பிரசாத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

86 பேர் பயணித்த அந்தப் பேருந்தில் ஓட்டுநர் ஸ்ரீனிவாஸ் என்பவரும் உயிரிழந்தார். கரீம்நகர் மற்றும் ஜகித்தியால் அரசு மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கிருஷ்ண பிரசாத் கூறினார்.

வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட தகவலின்படி அந்தப் பேருந்து அக்டோபர் 2007 முதல் பயன்பாட்டில் உள்ளது. அக்டோபர் 3, 2018 அன்று அதற்கு வருடாந்திர பாதுகாப்பு சோதனை செய்யப்பட வேண்டும்.

இதுவரை அந்தப் பேருந்து 14,95,116 கி.மீ பயணித்துள்ளது.

அறுபது பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அந்தப் பேருந்தில் அளவுக்கும் அதிகமானவர்கள் பயணித்ததாகவும், விபத்தின்போது ஒருவர் மீது ஒருவர் சரிந்து விழுந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

வேகமாக பயணித்த அந்தப் பேருந்து சாலையோரம் இருந்த இரும்புத் தடுப்பு ஒன்றின் மீது மோதி பள்ளத்தில் விழுந்ததாக உள்ளூர் கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK/KALVAKUNTLA KAVITHA

கொண்டாங்கட்டில் உள்ள அந்த 1.7 கி.மீ நீள கணவாய் அடிக்கடி விபத்து நடக்கும் இடமாகும். பிப்ரவரி 2012இல் அங்கு நடந்த விபத்தில் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் இறந்தனர்.

2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கான தேசிய சராசரியின்படி 1000 சாலை விபத்துகளுக்கு முறையே 285 மற்றும் 314 பேர் இறந்துள்ளனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி 2017இல் நாடு முழுதும் சாலை விபத்துகளில் சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் 80.3% விபத்துகளுக்கு ஓட்டுநரின் கவனக் குறைவே காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய சாலை பாதுகாப்பு சம்மேளனத்தின் தலைவர் வினோத் கணுமாலா இதுபற்றிக் கூறுகையில், "சாலைகளில் ஓடும் 80% பேருந்துகள் தகுதியற்றவை என்று ஓட்டுநர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் எல்லா மட்டத்திலும் ஊழல் இருப்பதுதான். ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஓட்டுநர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய புத்தாக்க பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை," என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்