விதர்பா: தற்கொலைகளில் தத்தளிக்கும் விவசாயிகள் வாழ்க்கை

  • 14 செப்டம்பர் 2018

பயிரை பாதுகாக்கும் விதர்பா பெண் விவசாயிகள் தங்கள் உயிரைப் பாதுகாக்க விரும்பாமல் தற்கொலை செய்துக் கொண்ட கண்ணீர்க் கதைகள் வெவ்வேறு கிராமங்களில் நடந்தாலும் ஒன்றுபோலவே இருக்கின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தின் சோந்துர்ஜனா, பிப்ரி புட்டி, பாக்வா ஆகியமூன்று கிராமங்களிலும் ஒன்று போலவே தற்கொலைகளையே கேள்விப்படுகிறோம்.

தலைநகர் டெல்லியில் இருந்து 1,200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தில் பருவமழை லேசான கருணை காட்டியிருந்தது. அகலமான சாலைகள், நாலாபுறமும் பசுமை சூழ்ந்த விதார்பா பகுதியின் வானத்தில் தோன்றும் வானவில்லை பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது.

இருமருங்கிலும் தேக்கு மரங்கள் வளர்ந்து கண்ணுக்கு ரம்யமான சூழல் நிலவினாலும், விதர்பாவில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் கரிசல் மண்சாலைகளில் செல்லும்போது மனதில் சோகமும்,சோர்வுமே எஞ்சியிருக்கிறது. விதார்பாவின் பிரச்சனை மற்றும் புள்ளிவிவரங்களை தெரிந்துக் கொள்வதற்கு முன்னதாக, மாவட்டத்தின் திவாசா தாலூகாவில் இருக்கும் சோந்துர்ஜனா கிராமத்திற்கு செல்வோம்.

அங்கு, பாஸ்கர் மற்றும் தேவ்கூ ராவ் அசோடேவின் வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாகவே இருந்தது. அவர்களின் இரண்டு மகள்களும் குடும்பத்தின் கடன் சுமை அதிகரித்து வருவதைக் கண்டு தற்கொலை செய்துகொண்டனர்.

24 வயது மதுராவும், 21 வயது சுவாதியும் தற்கொலை செய்துக் கொண்டது, விதார்பாவில் விவசாயக் குடும்பத்தை சேர்ந்த பெண்களின் அவலநிலையை படம் பிடித்துக் காட்டுகிறது என்று சொல்வதோடு, எதிர்காலத்தில் நிலைமை பெரிய அளவில் மோசமாகலாம் என்பதற்கும் கட்டியம் கூறுகிறது.

சேறாய் கிடந்த தெரு இருளில் மூழ்கியிருக்க, பச்சை நிற வண்ணம் பூசிய ஒரு வீட்டிற்கு சென்றோம். அந்த வீட்டின் சுவரில் அம்பேத்கரின் மிகப்பெரிய சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பதை கண்டோம்.

உள்ளே சென்றதும் 45 வயது தேவ்கூ அசோடேவை சந்தித்தோம். வெளுத்துப் போயிருந்த சேலையை உடுத்தியிருந்த அந்த தாய், சமையலுக்காக காய் நறுக்கிக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்த்தும், அவர் தனது கண்களை துடைத்துக் கொண்டு வறண்ட புன்னகையை வெளிக்காட்ட முயன்றாலும், கண்ணீர் தாரைதாரையாய் கொட்டியது. தண்ணீர் குடித்து ஐந்து நிமிடம் அமைதியாய் உட்கார்ந்த பிறகு, தோய்ந்த குரலில் எங்களிடம் பேசினார்.

"இவர்கள் இருவரும் இந்த முடிவுக்கு போவார்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. விவசாயத்திற்காக கடன் வாங்கியிருந்தோம். அது எங்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருந்தாலும், அதற்காக வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் அளவுக்கு முடிவெடுப்பார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" என்கிறார் அந்த தாய்.

"பெரியவள் அன்றும் வழக்கம்போலவே இயல்பாக இருந்தாள். காலையில் எழுந்தவுடன் வீட்டை சுத்தம் செய்தாள், பிறகு குளித்துவிட்டு வந்து சாப்பிட்டாள். மாலை நான்கு மணிக்கு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டாள். அதற்கு அடுத்த மூன்று மாதங்களில் இளைய மகளும் பெரியவளைப்போலவே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டாள். மாலையில் மொட்டை மாடிக்கு போய், அங்கு விஷம் குடித்துவிட்டாள்" என்று சொல்லியவாறு சுவரையே வெறித்துப் பார்க்கிறார் தேவகூ.

மகள்கள் இருவரும் இறந்தபிறகு, மனைவி தேவ்கூ மனச்சோர்வினாலும், மன அழுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார் 50 வயது பாஸ்கர் ராவ் ஒசோடே. மகள்களைப் பற்றி பேசும்போது அந்த தந்தை உடைந்து போகிறார்.

இரண்டு ஆண்டுகளாக விவசாயம் அதிக பிரச்சனையில்லாமல் இருந்தது. கடந்த ஆண்டு மகளுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பயிர்கள் நாசமடைந்தன.

மூத்த மகள் மாதுரியை நினைவுகூரும் தந்தை, "அவள் என் மகள் அல்ல, மகன், வயலில் எனக்கு உதவியாக விதைப்பில் இருந்து அறுவடை வரை எல்லா வேலைகளையும் எடுத்துச் செய்வாள். பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பது, பருத்தியை பறிப்பது என எல்லா வேலைகளும் அவளுக்கு தெரியும்".

"என்னுடைய கடன் பிரச்சனை மகள்கள், உயிரை பறிக்கும் அளவுக்கு அவர்களை பாதித்திருக்கும் என்று நாங்கள் நினைத்து பார்த்த்துகூட இல்லை. நான் கவலையாக இருந்தாலும், எனக்கு ஆறுதல் சொல்லி தேற்றும் என் மகள் எப்படி தற்கொலை செய்துக் கொண்டாள் என்று நினைத்தால், தூக்கமே வருவதில்லை."

இதைச் சொல்லிக்கொண்டே உடைந்து போய் அழுகிறார் பாஸ்கர் ராவ். ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதால், குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்வார் பாஸ்கர் ராவ்.

"மழை மற்றும் குளிர்காலங்களில் 4-5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வேன். எனவே ஆண்டுக்கு 10 முதல் 12 ஏக்கர் நிலத்திற்கு குத்தகைப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். முதல் இரண்டு ஆண்டுகள் பிரச்சனையில்லாமல் போனாலும், சென்ற வருடம் மகளுக்கு திருமணம் செய்யவிருந்த நிலையில், பயிர் பொய்த்துப்போய் தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது".

விவசாயம் செய்வதற்காக, கந்துவட்டிக்காரர்கள் முதல் சிறு மற்றும் குறு நிதி நிறுவனங்களிடம் இருந்தும் கடன் வாங்கியிருந்தார் பாஸ்கர் ராவ். சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி, விவசாயக்கூலி, பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், தண்ணீர் என செலவு செய்தார்.

"மகசூலும் சுமாராக இருந்தது, நல்ல விலையும் கிடைக்கவில்லை. 6 ஏக்கர் நிலக்கடலை பயிரிட்டதில், 90 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது. இருந்தாலும், மனம் தளராமல் அடுத்த பருவத்தில் பருத்தி பயிரிட்டோம். விளைச்சல் நன்றாக இருந்தாலும், அறுவடைக்கு முன்பு இளஞ்சிவப்பு காய்ப் புழு தாக்கியதில், பயிர் நாசமாகிவிட்டது".

"தொடர்ந்து இரண்டு சாகுபடியிலும் நட்டம் ஏற்பட்டதால், வீடே சோகத்தில் மூழ்கியது. "நாங்கள் கடுமையாக உழைக்கும் விவசாயிகள், எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கத் தயாராக இருக்கிறோம். ஆனாலும் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது".

"கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து கடனை திருப்பிக் கொடுக்கச் சொல்லி நெருக்கடி கொடுத்தார்கள், மறுபுறம் பயிர்கள் நாசமாகிவிட்டன. எஞ்சிய பயிருக்கும் உரிய விலை கிடைக்கவில்லை".

"இதையெல்லாம் விட பெரிய சோகம் என் இரண்டு மகள்களும் தற்கொலை செய்து கொண்டதுதான். அந்த சமயத்தில் இரண்டரை லட்ச ரூபாய் கடன் இருந்தது. இந்த ஆண்டு, நான் விவசாயமே செய்யவில்லை" என்று கூறுகிறார் பாஸ்கர்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உதாரணமாக இருக்கிறது பாஸ்கரின் குடும்பம். குடும்பமே கடினமாக உழைத்தாலும், போதுமான லாபம் கிடைப்பதில்லை என்பதோடு, கடன் சுமையும் ஏறிக்கொண்டே செல்கிறது. மகள்களுக்கு எளிமையான திருமணம்கூட செய்து வைக்கமுடியாத அவலநிலையில், அவர்கள் தற்கொலை செய்து கொள்வது விவசாயத்தை அடிப்படைத் தொழிலாக கொண்ட இந்தியாவின் தற்போதைய விவசாய நிலைமையை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

"மூத்த மகளை பெண் கேட்டு நிறைய பேர் வந்தார்கள், சில நேரங்களில் திருமணம் முடிவாகும் அளவுக்கு பேச்சுவார்த்தை போய்விடும். ஆனால், கடைசியில் எங்கள் கடன் சுமை எங்களை திருமணப் பேச்சை தவிர்க்க செய்துவிடும். திருமணத்திற்கு வரும் கொஞ்சம் பேருக்கு ஒருவேளை உணவு போட்டு, பெண்ணுக்கு மாற்றுத்துணி கொடுத்து அனுப்புவதற்குகூட பணம் தேவைப்படுமே?"

திருமணமாகாத இரண்டு பெண்களை வீட்டில் வைத்துக் கொண்டு பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் என்று உற்றார்-உறவினர்கள் ஏசினார்கள். இதையும் மகள்கள் இருவரும் கேட்டுக்கொண்டிருப்பார்கள், ஆனால் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவு அவர்கள் மனம் உடைந்து போயிருந்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் எல்லாமே ஒரு நாளில் முடிந்துவிட்டது".

தேவ்கூ-பாஸ்கர் தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருந்தாலும், பண விஷயத்தையெல்லாம் பார்த்துக் கொண்டது சுவாதிதான். மகன்களை படிக்க வைத்து, நல்ல வேலையில் அமரவைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்த குடும்பத்தினர், அவர்கள் இருவரையும் விவசாய வேலைகளில் ஈடுபடுத்தியதே கிடையாது.

பள்ளிப்படிப்பை முடித்திருந்த சுவாதி, பட்டயப் படிப்பு படிக்கும் விருப்பத்தில் இருந்தார். குடும்பத்திலேயே அதிகம் படித்தவர் சுவாதிதான்.

சகோதரிகள் இருவரும் மிகவும் இணக்கமாக இருப்பார்கள். மாதுரியின் மரணம் சுவாதியின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது. அக்காவின் தற்கொலைக்கு பிறகு, சுவாதி மன அழுத்தத்தில் இருந்தார்.

"வீட்டின் வரவு செலவு கணக்கை பார்த்துக் கொண்டது வீட்டிலேயே அதிகம் படித்த சுவாதிதான். யாரிடம் இருந்து எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறோம், யாருக்கு எவ்வளவு திருப்பிக் கொடுக்கவேண்டும், வீட்டு வருமானம் என்ன என்பதையெல்லாம் அவள்தான் பார்த்துக் கொள்வாள். வருமானத்தையும் அவளிடமே கொடுத்துவிடுவோம். மாதுரியை பார்க்க நிறைய மாப்பிள்ளைகள் வந்தாலும், பண நெருக்கடியால் திருமணத்தை முடிவு செய்ய முடியவில்லை."

மாதுரி இறந்த பிறகு, சுவாதிக்கு வேலை பளுவும் அதிகமாகிவிட்டது. மாதுரி செய்து வந்த வேலைகளும் அவளது தலையிலே விழுந்துவிட்டது. வயலில், வீட்டில் என தொடர்ந்து வேலை செய்யவேண்டும், வரவு செலவையும் பார்க்கவேண்டும். ஆனால், உயிரை விடும் அளவுக்கு அழுத்தம் இருந்தது என்பதை எங்களால் கனவில்கூட நினைத்து பார்க்க முடியவில்லை."

மாதுரி மற்றும் சுவாதியின் தற்கொலைகளுக்கு பிறகு திவ்ஸா தாலுக்காவின் தாசில்தார், பாஸ்கரின் வீட்டிற்கு வந்தார். அவர், குடும்பத்தினரிடம் பேசி, தகவல்களை கேட்டறிந்தார். ஆனால் இதுவரை எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை.

இந்திய விவசாயிகள் இனிமேல் விவசாயத் தொழிலில் இருந்து விலகிவிட வேண்டும் என்று சொல்கிறார் பாஸ்கரின் மகன் சாகர். சகோதரிகள் இருவருமே எங்களிடம் தாயைவிட அதிகமான பாசம் வைத்திருந்தார்கள் என்று சோகத்துடன் சொல்கிறார் சாகர்.

விவசாயம் செய்வதற்காக ஏக்கர் ஒன்றுக்கு 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால், 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஒரு பருவத்தில் ஒரு பயிருக்கு இவ்வளவு நட்டம் ஏற்பட்டால் விவசாயியால் இதை எப்படி தாங்க முடியும்? போட்ட பணமும் திரும்ப வரவில்லை, உழைப்புக்கு ஊதியமும் இல்லை என்னும்போது வாழ்வதற்கான வழி என்ன? எத்தனை நாள் பட்டினி கிடப்பது? தற்கொலை செய்து உயிரை விடுவதைவிட விவசாயத்தை விட்டு விலகுவதே நல்லது" என்கிறார் சாகர்.

புள்ளி விவரங்கள்

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த இரண்டு தசாப்தத்தில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில், விவசாயக் கடன்கள் மற்றும் நட்டத்தினால் 700 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

1995 முதல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதி விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சேந்துர்ஜனா கிராமத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்ற நாங்கள், மாதுரி மற்றும் சுவாதி தற்கொலை குறித்து தாசில்தார் ராம்.ஏ.லங்கேவிடம் பேசினோம்.

"தனிப்பட்ட மற்றும் குடும்ப விஷயங்களுக்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் குடும்பத்தில் நடைபெறும் தற்கொலைகள் அனைத்திற்குமே அவர்களின் தொழில்தான் காரணம் என்பதுபோல ஊடகங்கள் தவறாக பரப்புகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு மரணத்தின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம் என்பதை அனைவரும் மறந்துவிடுகிறார்கள்" என்று ராம்.ஏ.லங்கே கூறுகிறார்.

நாம் குறிப்பிட்ட சோந்துர்ஜனா சகோதரிகளின் மரணம் தொடர்பான ஆவணங்களை வரவழைத்து ஆய்வு செய்த அவர், "மாதுரி விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார் என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே அவரது தற்கொலைக்கு இழப்பீடு கொடுக்க முடியவில்லை. ஆனால் சுவாதி விவசாயி என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அவருக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன. இன்னும் சில நாட்களில் சுவாதியின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று ராம்.ஏ.லங்கே உறுதி கூறினார்."

உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, மாதுரிக்கு காதல் இருந்ததாக கற்பனைக் கதை உலாவியது தெரியவந்தது. அடிப்படை ஆதாரமற்ற அந்த அவதூறுகளால், மாதுரியின் மரணத்திற்கு விவசாயமே காரணம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று மாநில அரசு கூறிவிட்டதும் தெரியவந்த்து.

அந்த அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது, மாதுரியின் தந்தை பாஸ்கரின் வேதனை நிறைந்த வார்த்தைகள் என் மனதில் தோன்றின. "என் மகள் மாதுரி இரவு பகலாக என்னுடன் சேர்ந்து வேலை செய்தாள், ஆனால் அவளை விவசாயி என்பதை ஏற்க அரசு ஏன் மறுக்கிறது? மாதுரியின் இறப்புக்கு உரிய நேரத்தில் இழப்பீடு கிடைத்திருந்தால், சுவாதியின் தற்கொலையையாவது தடுத்திருக்கலாம்" என்று அவர் சொன்னார்.

வசந்த்ராவ் நாயக்

அமராவதியில் இருந்து யாவத்மால் மாவட்டத்திற்கு சென்றோம். இங்கு இரண்டு தசாப்தங்களாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே மாவட்டத்தில் பிறந்த வசந்த்ராவ் நாயக் மாநிலத்தின் முதலமைச்சராக 12 ஆண்டுகள் பதவி வகித்தவர் என்பதோடு, நாட்டின் பசுமைப் புரட்சியின் தந்தை எனவும் அறியப்படுகிறார்.

அமராவதியில் இருந்து யவத்மாலுக்கு செல்லும் வழியில் காணப்படும் குக்கிராமங்களில்கூட, சிவாஜியின் புகைப்படங்களுடன், வசந்த்ராவ் நாயக்கின் புகைப்படங்களையும் அடிக்கடி பார்க்க முடிகிறது. விவசாயிகளுக்கான சொர்க்கத்தை உருவாக்க விரும்பிய வசந்த்ராவ் நாய்க்கின் யவத்மாலே, விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய இடமாக அறியப்படும் என்று அவர் கற்பனைகூட செய்திருக்கமாட்டார்.

யவத்மாலில் உள்ள பிப்ரி பட்டி கிராமத்தில் இதுவரை 42 விவசாயிகள், கடன் மற்றும் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 30வயதான மோகன் பிரஹ்லாத் தஜானேவின் வீடு பார்ப்பதற்கு பெரிய வீட்டைப் போல தோன்றினாலும், வீட்டிற்குள் சென்றதும், உடையும் நிலையில் உள்ள கதவுகள், புழுதி நிறைந்த அறை, கால் உடைந்த கட்டில் ஆகியவை வீட்டின் மோசமான நிலையை காட்டுகிறது.

சாந்தா பாயி

மோகனின் தாயார் சாந்தாபாயி தஜாணே ஒரு விவசாயி. 2015இல் செப்டம்பர் மாதத்தில் விவசாயத்திற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டார். தற்போது மோகன் கூலி வேலை செய்து மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

மோகனின் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். மோகன் தனது மூன்றாவது குழந்தையை உறவினர் ஒருவருக்கு தத்துக் கொடுக்கும் முடிவில் இருக்கிறார். ஏற்கனவே இருக்கும் வறுமையான சூழ்நிலையில், மேலும் ஒரு குழந்தைக்கு செலவு செய்வது தனது சக்திக்கு அப்பாற்பட்டது என்று சொல்லி கண்ணீர் விடுகிறார்.

2011ஆம் ஆண்டு, விவசாயியான மோகனின் தந்தையும் கடன்சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்.

தந்தையின் மறைவுக்கு பிறகு, தாயே விவசாயப் பொறுப்புகளை கவனித்துக் கொண்டார். தங்களுடைய ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தாலும், பெரிய அளவிலான லாபம் கிடைக்கவில்லை. ஆனாலும், விவசாயத்தைவிட்டு மோகனின் தாய் சாந்தாபாயி விலகவில்லை.

Image caption மோகன்

முதலமைச்சர் வருகை

கிராமத்தில் விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், 2015 மார்ச் மாதத்தில், முதலமைச்சர் அங்கு வருகை தந்தார். முதலமைச்சர் பல வாகனங்கள் புடைசூழ வந்த காட்சியை மோகன் இன்றும் நினைவுகூர்கிறார்.

"கிராமமே அல்லோகோலப்பட்டது. முதலமைச்சர் கிராமத்திலேயே இரவு தங்குவார், கிராமத்தை தத்தெடுத்துக் கொள்வார் என்று சொன்னார்கள். சரி முதலமைச்சரிடம் நமது கவலைகளை எல்லாம் எடுத்துச் சொல்வோம், நமது பிரச்சனைகள் எல்லாம் முடிந்துவிடும் என்று பகல்கனவு கண்டோம்.

முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் எனது வீட்டிற்கும் வந்தார். என் வீட்டைப் பார்த்த அவர், 'அடடா, இந்த வீடு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறதே என்று சொன்னார். கிணறு வெட்ட நிதியுதவி செய்வதாகவும் சொன்னார். அரசு திட்டத்தின்கீழ் என் இடத்தில் கிணறு வெட்டப்பட்டது. அரசு உதவியுடன், நான் வெளியில் இருந்தும் கடன் வாங்கி கிணறு வெட்டினேன். ஆனால் வெட்டிய கிணற்றில் இன்றுவரை தண்ணீர் வரவேயில்லை" என்று கண்ணீர் விடுகிறார் மோகன்.

மகாராஷ்டிரா அரசின் 'தடக் யோஜனா' என்ற பொதுநல திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு கிணறு வெட்டுவதற்காக அரசு நிதியுதவி வழங்குகிறது. கிராமங்களில் கிணறுகளை வெட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில், 'விவசாயிகள் தற்கொலை' செய்துக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

அதனால் மோகனின் குடும்பத்திற்கு கிணறு வெட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் பட்டியலில் முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் நிலத்தை தேர்ந்தெடுப்பது முதல் கிணறு வெட்டுவதற்கான ஆட்களை தேர்வு செய்வதுவரை எல்லா அதிகாரமும் கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் அந்த பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நிர்வகிக்கும் நோடல் அதிகாரிகளிடம் இருந்தது.

சில நேரங்களில் தேவையான கருவிகள் இல்லாதது, சில சமயம் வேலைக்கு ஆட்கள் வராதது என பலவிதமான நிர்வாக குளறுபடிகளினால், கிணறு வெட்டும் பணி முழுமையடையவில்லை, ஆனால், கடன் அதிகரித்துக் கொண்டே சென்றது.

"அம்மாவின் செருப்பு கிணற்றுக்கு அருகே கிடந்தது"

"தடக் திட்டம் நல்லத் திட்டமாக இருந்தாலும், அதில் எனக்கு ஒதுக்கீடு கிடைத்தாலும், கிணறு மட்டும் கிடைக்கவேயில்லை. ஊரக வேலை உறுதித் திட்டத்தில் எப்போதும் வேலைகள் கிடைப்பதில்லை. என் அம்மா விவசாயம் செய்தாலும், அதில் லாபம் கிடைக்கவில்லை.

70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அம்மாவும் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பியிருந்தார். 2015 செப்டம் மாதம் அம்மாவும் நானும் பேசிக் கொண்டிருந்தபோது, கடனை எல்லாம் எப்படி அடைக்கப்போகிறோம் என்று கவலையுடன் பேசினார்.

மேலும் புதிய கடனை வாங்க முயற்சி எடுக்கலாம் என்றும், அதுவும் முடியாவிட்டால் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு, நிலத்தை குத்தகைக்கு கொடுக்கலாம் என்று அம்மா சொன்னார்.

பிறகு நான் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் நடந்துவிட்டு வரலாம் என்று சென்றுவிட்டேன். திரும்பி வந்தபோது அம்மா வீட்டில் இல்லை. அம்மாவை தேடியபோது அவரின் செருப்பு மட்டும் கிணற்றுக்கு வெளியில் கிடந்தது".

சாந்தபாயின் மரணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைத்தது. கடனை திருப்பிச் செலுத்த அந்த பணம் பயன்பட்டது. தற்போது விவசாயத்தின் நிலைமை எப்படி இருக்கிறது என்று அவரிடம் கேட்டதற்கு விரக்தி நிறைந்த சிரிப்பு அவர் முகத்தில் தோன்றியது.

"என்னிடம் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுகிறேன். விவசாயம் செய்தால் நட்டம்தான் ஏற்படுகிறது. குத்தகையில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடனை அடைக்கிறேன். நீங்கள் என்னுடைய கதையை கேட்பதாலும், எழுதுவதாலும், நிலைமை ஒன்றும் மாறிவிடப்போவதில்லை.

ஆனானப்பட்ட முதலமைச்சர் என் வீட்டிற்கு வந்து, நிலைமையை பார்த்து சென்ற பிறகே எந்த மாற்றமும் ஏற்படவில்லை.... இப்போது தினசரி 100 ரூபாய் கூலிக்கு வேலை செய்து குடும்பத்தை ஓட்டுகிறேன்" என்று துக்கம் தோய்ந்த வார்த்தைகளை பதிலாக அளிக்கிறார் அவர்.

கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரும் இளைஞருமான மங்கேஷ் ஷங்கர் ஜஹ்ரீல் என்பவருடன் பேசினோம். "முதலமைச்சர் இங்கே வந்து உணவு சாப்பிட்டுவிட்டு போனது தான் மிச்சம். எங்களுக்கு வேறு எந்த நன்மையும் நடக்கவில்லை.

முதலமைச்சர் இந்த கிராமத்தை தத்தெடுத்த பிறகு, ஒரு சாலையும், பேருந்து நிறுத்தமும் வந்தது. விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோதி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் நான்காண்டுகள் கழிந்தும் அது நடைபெறவில்லை. 42 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில், வெறும் 12 குடும்பங்களுக்கு அதற்கான இழப்பீடு கொடுத்திருக்கிறார்கள்" என்று கோபத்தில் பொருமுகிறார்.

தேவேந்திர ராவ்

விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் சமூக சேவையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கும் தேவேந்திர ராவ் பவார் என்பவரை யவத்மால் கிராமத்தில் சந்தித்தேன்.

விதர்பாவில் தொடரும் விவசாயிகளின் தற்கொலைப் பற்றி பேசும் அவர், "பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் என்று அறியப்படும் வசந்த் ராவ் நாய்க்கின் மாவட்டத்தில் இன்று தற்கொலை செய்துக் கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வெட்கக்கேடு.

2014 மார்ச் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி இங்கு வந்தார். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்துவதாகவும், விவசாயிகளின் முதலீட்டிற்கு, 50% லாபம் ஏற்படும் அளவிற்கு விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்துச் சென்றார்.

தன்னுடைய ஆட்சியில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்துக் கொள்ளாத நிலையை ஏற்படுத்துவேன் என்று முழங்கினார். அவர் சொன்ன வாக்குறுதிகளை நம்பினதற்கு எங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. முன்பைவிட அதிகமானவர்கள் யவத்மாலில் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள்".

கடன் தள்ளுபடிக்காக அண்மையில் மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்திய 'சத்ரபதி சிவாஜி மகாராஜ் விவசாயி சம்மான் யோஜனா' பற்றியும் தேவேந்த்ரா கூறுகிறார். இந்தத் திட்டத்தின் கீழ், 1.5 லட்சம் அல்லது அதற்கு குறைவான கடன் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆனால் இந்தத் திட்டம் ஏட்டளவிலேயே தங்கிவிட்டது, நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ரேணுகா செளகான்

யவத்மால் அருகே, பண்டர்க்வடா தாலூகாவில் பாக்தா கிராமத்தில் வசிக்கும் ரேணுகா செளஹானின் குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. 2018 மே மாதம் அந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். 3 மகன்கள், கணவர், உடல்நலம் குன்றிய மாமனார்-மாமியார் என அனைவரையும் தவிக்கவிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் ரேணுகா.

60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி விவசாயம் செய்த பயிரை பூச்சிகள் நாசம் செய்ததால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. 'சத்ரபதி சிவாஜி மகாராஜ் விவசாயி சம்மான் யோஜனா' திட்டத்தின்கீழ் தனது கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு நடையாய் நடந்த பிறகு 15 ஆயிரம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

Image caption ரேணுகா செளகான்

"ஆவணங்களில் மட்டுமே எங்கள் கடன் தள்ளுபடியானது. உண்மையில் எங்களுக்கு 45 ஆயிரம் ரூபாய் கடன் இருந்தது. வெளியிடங்களில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்க முடியுமா? கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? வீட்டிற்கு வந்து கடனை திருப்பிக் கொடு என்று கடன் கொடுத்தவர்கள் கண்டபடி பேசுவதைக் கேட்டு அவமானத்தால் கூனிக்குறுகிப்போவார் அம்மா. அரசின் திட்டத்தின்படி, எங்களது கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், என் அம்மா தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்" என்று சொல்கிறார் அங்குஷ்.

மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு சென்று அங்கிருக்கும் அதிகாரிகளுடம் பேசி பிரச்சனைக்கான தீர்வை கண்டறிய முற்பட்டோம். ரெசிடென்ட் மாவட்ட ஆட்சியரான நரேந்த்ர ஃபுல்ஜுலே, சிவாஜி மகாராஜின் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 'பலிராஜா சேத்னா அபியான்' மற்றும் 'பிரேர்ணா பிரகல்ப்' என்ற இரண்டு புதிய அரசு திட்டங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.

நரேந்த்ர ஃபுல்ஜுலே

"பிற மக்களைப் போலவே, இங்குள்ள விவசாயிகளுக்கும் மன அழுத்தம், நிதி மற்றும் சமூக நெருக்கடி என பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. நானும் இங்கே வசிக்கிறவன் என்பதால் எனக்கு இதைப்பற்றி புரிகிறது. மக்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்களாக உள்ளனர். குடும்பம் தொடர்ந்து பெரிதாகும் நிலையில், நிலத்தின் அளவு மட்டும் மாறாமல் தொடர்ந்தால், பற்றாக்குறை ஏற்படுவது இயல்புதானே? எனவே, சிறிய பிரச்சனைகள் கூட இவர்களுக்கு மிகப்பெரியதாக தோன்றுகிறது " என்கிறார் அவர்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பதில்லையே என்ற கேள்விக்கு பதிலளிக்கும் அவர், "எந்தவொரு தொழிலிலும் ஈடுபடுபவர்கள் 1000 ரூபாய் முதலீடு செய்தால், அதற்கு 1100 ரூபாய் விற்பனை விலை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இந்த சிறிய அளவிலான லாபம்கூட விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. கடன் தள்ளுபடி மற்றும் பாசன வசதி முதல் விவசாயிகளின் மனோபலத்தை அதிகரிக்கும் முயற்சிகள் என அனைத்துவிதமான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது" என்கிறார் அவர்.

அந்த அலுவலகத்திற்கு சற்று அருகிலேயே விவசாயிகளின் மனோநிலை தொடர்பாக பணியாற்றிவரும் 'ப்ரேர்ணா ப்ரகல்ப்' திட்ட அலுவலகத்தில் மனநல மருத்துவர் சர்ஃப்ராஜ் செளதாகாரை சந்தித்தோம்.

மனம் தளர்ந்து, தற்கொலை முடிவுக்கு செல்லும் விவசாயிகளின் மனோபலத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு மனோரீதியான உதவிகளை செய்வதற்காகவும் இந்த மையம் திறக்கப்பட்டிருக்கிறது.

சர்ஃப்ராஜ் செளதாகர்

"விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் மாவட்டங்களாக கருதப்படும், யவத்மால் மற்றும் ஓஸ்மனிய்பாத் பகுதி விவசாயிகளுக்கு மனோரீதியிலான பலத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதுவரை 3350 விவசாயிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறோம்.

சிகிச்சை எடுத்துக் கொண்ட யாரும் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஏனெனில் இதுபோன்ற மனோபாவம் நிலவும் சமுதாயத்தில் தற்கொலை எண்ணம் அதிகமாகும் ஆபத்துகளும், தற்கொலை செய்வதற்கு ஒருமுறை முயன்று அது நிறைவேறவில்லை என்றால், மீண்டும் முயற்சிக்கும் ஆபத்துகளும் அதிகம். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம், அவர்கள் வாழ்க்கையை தைரியத்துடன் எதிர்கொள்ள வைப்பதே எங்கள் வேலை." என்கிறார் அவர்.

நம்பிக்கைக் கொண்ட, சிறந்த பயிற்சி பெற்ற தனது குழுவினருடன் இணைந்து சர்ஃபாரஸ் பணிபுரிகிறார். அவர்கள் மனோபலத்தை ஊக்குவிக்கிறார்கள், தற்கொலைகள் எண்ணம் தோன்றாமல் அவர்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வைக்கிறார்கள். ஆனால், கடன்சுமை என்ற பெரும் சுமையில் இருந்து மீள்வதற்கான உபாயங்களை அவர்களால் தர முடிவதில்லையே?

"தற்கொலை செய்துக் கொள்வதற்கு பதிலாக, வாழ்க்கையை எதிர்த்து போராட நாங்கள் தயார் செய்கிறோம். சொந்தக்கால்களில் நிற்கும் உறுதியை அவர்கள் மனதில் விதைக்கிறோம்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :