சாலை இல்லாததால் மலையில் நிகழ்ந்த பிரசவம் - தொப்புள் கொடியை அறுக்க கல்

Tribal Woman
Image caption கல்லைக்கொண்டு வெட்டப்படும் குழந்தையின் தொப்புள் கொடி

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள எம்.சிந்தல்லவலசா எனும் மலை கிராமத்தைச் சேர்ந்த 25 வயதாகும் முத்தையம்மா எனும் கர்ப்பிணி பெண்ணுக்கு சுகாதார மையத்துக்கு செல்லும் வழியில் திறந்த வெளியிலேயே, கடந்த செப்டம்பர் நான்காம் தேதி பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு விரைவாகச் செல்வதற்கு ஏற்ற சாலை வசதி இல்லாததால் இந்த நிலை உருவானது.

இந்த அவல நிலையை அப்பெண்ணை மருத்துவமனைக்கு சுமந்து சென்றவர்களில் ஒருவரான இளைஞர் தனது செல்பேசி மூலம் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டார். அங்கு சமூக ஊடகங்களில் இது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது."எங்கள் வாழ்வும் சாவும் இந்த சாலையின் கையில்தான் உள்ளது. சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை ஆறு கிலோ மீட்டர் தூரம் சுமந்து செல்ல வேண்டியுள்ளது," என்று அந்தக் காணொளியில் மலைவாழ் வகுப்பைச் சேர்ந்த ஆண் ஒருவர் கூறுகிறார்.

அவர் அந்தக் காணொளியில் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவருக்கு பின்னால் முத்தையம்மா சிசுவைப் பிரசவிக்கிறார். சிசுவின் தொப்புள் கொடியை அருகில் கிடைக்கும் கல்லைக் கொண்டு மலைவாழ் பெண்கள் துண்டிக்கின்றனர்.

இந்தக் காணொளியும், ஆந்திர மாநிலத்தின் ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு முகமை (Integrated Tribal Development Agency ) அதிகாரிகளுக்கு அம்மக்கள் எழுதிய திறந்த மடலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Image caption சிந்தல்லவலசா மலை கிராமம்

இந்தக் காணொளியை பதிவு செய்த 26 வயது பழங்குடி இளைஞர் சோடிப்பள்ளி சூரய்யா பிபிசி தெலுங்கு சேவையிடம் பேசினார்.

"பிரசவத்துக்காக ஒவ்வொரு முறையும் நாங்கள் கர்ப்பிணியை தோளில் சுமந்துகொண்டுதான் செல்லவேண்டுயுள்ளது. சில நேரங்களில் கர்ப்பிணிப் பெண்கள் இறந்துவிடுகிறார்கள். சில நேரங்களில் குழந்தைகள் இறந்துவிடுகிறார்கள்," என்கிறார் சூரய்யா.

Image caption சூரய்யா

அதிகாரிகளின் கவனத்தை பெறுவதற்காக சூரய்யா மற்றும் அவரது மலை கிராம நண்பர்கள் சிலர் இந்தத் துயரத்தை காணொளியாக பதிவு செய்து வெளியிட முடிவு செய்தனர்.

அவரது நண்பர் ராஜூ எனும் இளைஞர் அந்தத் திறந்த மடலை எழுதுவதில் பங்காற்றியுள்ளார்.

"நாங்கள் மலையில் வேளாண்மை செய்வதையே நம்பியுள்ளோம். எங்களால் வேறு எங்கும் செல்ல முடியாது. எங்களுக்கு சாலை வசதி இருந்தால் மருத்துவமனை செல்வதற்கான நேரம் குறையும். என் திறந்த மடலுக்கு யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை," என்கிறார் ராஜூ.

தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும், தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இணை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் ரவி குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.

"அங்கு சாலை வசதி இல்லாததால் கழியில் துணியைக் கட்டி நோயாளிகளை சுமந்து வர வேண்டியுள்ளது. எங்களுக்கு தகவல் தெரிந்ததும், செவிலியர் ஒருவரை மலைக்கு அனுப்பி வைத்தோம்," என்கிறார் அவர்.

ஜூலை 2018இல் அருகில் உள்ள சிறிவரம் எனும் மலை கிராமத்தை சேர்ந்த தமரகொண்டா ஜிந்தாமி எனும் பெண்ணுக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அவரது ஐந்து மாத கரு கலைந்தது.அவரது நிலைமை தனது மனைவிக்கும் வருமோ என்று முத்தையம்மாவின் கணவர் சோடிப்பள்ளி ஜம்பி அச்சப்பட்டார். "செப்டம்பர் நான்காம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு என் மனைவிக்கு மகப்பேறு வலி உண்டானது. உடனே தூக்கிக்கொண்டு கீழே கிளம்பிவிட்டோம். தாய் அல்லது சேய் உயிருக்கு ஆபத்து உண்டாகுமோ எனும் அச்சம் உண்டானது. நல்ல வேளையாக எதுவும் நடக்கவில்லை," என் பிபிசி தெலுங்கு சேவையிடம் அவர் கூறினார்.

Image caption முத்தையம்மாவின் கணவர் சோடிப்பள்ளி ஜம்பி

அந்தப் பகுதியில் உள்ள 10% மலை கிராமங்களுக்கு போதிய சாலை வசதி இல்லை என்று கூறிய ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குநர் லட்மிசுஷா, மகப்பேறுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கர்ப்பிணிப் பெண்களை கீழே அழைத்து வரும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது என்றார்.

அங்கு 5.5 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்க 2017இல் நிதி ஒதுக்கப்பட்டாலும், அந்த 9.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க ஐந்து முறை ஏலம் அறிவிக்கப்பட்டு, யாரும் ஒப்பந்தப்புள்ளிகள் கோர முன்வரவில்லை என்கிறார் லட்மிசுஷா.

கடினமான மலைப்பாதையில் சாலை அமைக்க ஒப்பந்தம் எடுத்தால் லாபம் இருக்காது என்று யாரும் முன்வரவில்லை போலும் என்பது அவர் கருத்து.

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அருகிலேயே அப்பெண்களைத் தங்க வைப்பதே எங்கள் திட்டம். 50 - 60 பெண்கள் தங்கப் போதுமான இடம் கிடைப்பதுதான் கடினம் என்கிறார் ரவி குமார் ரெட்டி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :