அமெரிக்காவின் புகழ் பெற்ற விருதுக்கு தமிழ்ப் பெண் ராஜலட்சுமி நந்தகுமார் தேர்வு

இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.

டெக்கான் குரோனிக்கல்: அமெரிக்காவின் புகழ் பெற்ற விருதுக்கு தமிழ்ப் பெண் தேர்வு

Image caption மாணவி ராஜலட்சுமி நந்தகுமார்

அமெரிக்காவில் வாழும் தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ராஜலட்சுமி நந்தகுமார் அமெரிக்காவின் புகழ் பெற்ற 'மார்கோனி சொசைட்டி பால் இளையோர்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக டெக்கான் குரோனிக்கல் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திறன்பேசிகளை பயன்படுத்துவதால் உயிருக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் உடல்நல கோளாறுகளை கண்டறிய உதவிய பணிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ராஜலட்சுமி, சாதாரண திறன்பேசியை, உடலியக்கம் மற்றும் மூச்சுவிடுதல் போன்ற உடல் சார் செயல்பாடுகளை அளவிடும் அமைப்பாக மாற்றுகின்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

இந்த கருவி உடலோடு இணைந்திருக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிக்காக 2018 மார்கோனி சொசைட்டி பால் பரான் இளையோர் விருதுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று டெக்கான் குரோனிக்கல் செய்தி வெளியிட்டுள்ளது.


தினமணி: பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பார்த்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால், தாக்கல் செய்துள்ள அறிக்கையில், அளவீடு செய்து சப்-டிவிஷன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது உத்தரவாதங்களை வழங்கிவிட்டு, பின்னர் அதற்கு மாறாக செயல்படுவது ஏற்புடையதல்ல. அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விருப்பம்போல் செயல்பட்டால் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.


தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: கிரிக்கெட் - 4-1 என டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து

படத்தின் காப்புரிமை Getty Images

லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது என்ற செய்தியை 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது.

ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) தோல்வியை தவிர்க்க இந்தியா கடுமையாக போராடியது. இந்திய வீரர்கள் ராகுல் மற்றும் ரிஷப பந்த் ஆகியோர் சதமடித்தனர்.

இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 345 ரன்களை மட்டுமே பெற்றது என்று அந்த நாளிதழ் மேலும் விவரித்துள்ளது

இதன்மூலம் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் 4 -1 என்று இங்கிலாந்து வென்றுள்ளது.


தினமலர்: வராக்கடன் பிரச்சனைக்கு காங்கிரஸ்தான் காரணம்

படத்தின் காப்புரிமை Reuters

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அள்ளி கொடுக்கப்பட்ட கடன்களே, வங்கிகளின் வராக்கடன்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ரகுராம் ராஜன் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொதுத் துறை வங்கிகளின் வராக்கடன் அளவு அதிகரித்திருக்கும் பிரச்சனை பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான மதிப்பீட்டு குழு விசாரித்து வருவதாக இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :