கேரள கன்னியாஸ்திரீயின் பாலியில் குற்றச்சாட்டை மறுக்கும் ஜலந்தர் ஆயர்

கேரள கன்னியாஸ்திரி தன் மீது வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டை மறுத்துள்ள பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ஆயர், அந்த கன்னியாஸ்திரி ஒரு காதல் விவகாரத்தில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AS SATHEESH/BBC

"என் மீதான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை. குற்றம் சுமத்தியிருப்பவர் பெரியதொரு பெண்மணி. தொடர்ந்து, பலமுறை, நீண்ட காலமாக எவ்வாறு நடந்திருக்க முடியும்" என்று ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிரான்கோ முலக்கால் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஆயர் பிரான்கோ மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

2014 முதல் 2016ம் ஆண்டு வரை பலமுறை தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக இந்த கன்னியாஸ்திரி தமது புகாரில் ஆயர் முலக்கால் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

'மறைமாவட்டம்' என்று அழைக்கப்படும் திருச்சபை வகுத்துள்ள பகுதியின் உயரதிகாரிதான் ஆயர். இந்தியாவிலுள்ள மொத்தம் 144 மறை மாவட்டங்களுக்கு 145 ஆயர்கள் உள்ளனர்.

இந்த கன்னியாஸ்திரிக்கு எதிரான தனிப்பட்ட புகாரை விசாரித்த காரணத்தால் தான் இலக்கு வைக்கப்படுவதாக ஜலாந்தர் ஆயர் கூறியுள்ளார்.

அதே வேளை, இந்த வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை எதிர்த்து கன்னியாஸ்திரிகள் குழு ஒன்று போராட்டம் நடத்தி வருகிறது.

ஜலந்தரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கொச்சியின் 'மிஷ்னரிஸ் ஆப் ஜீஸஸ்' சபையிலுள்ள கன்னியாஸ்திரீகளுக்கு இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AS SATHEESH/BBC

இந்த போராட்டக்காரர்களோடு, கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த பலரும், பிற உள்ளூர் மக்களும் இணைந்துள்ளனர்.

2018ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி காவல்துறையில் புகார் அளிப்பதற்கு முன்னால், ஆயர் முலக்கால் மீதான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை திருச்சபை அதிகாரிகளிடம் இந்த கன்னியாஸ்திரி கொண்டு சென்றார்.

தனது குற்றச்சாட்டை யாரும் ஏற்கவில்லை என்று இந்த கன்னியாஸ்திரீ குற்றஞ்சாட்டுகின்றார்.

போராட்டங்களை தொடங்கும் முன், கடந்த ஜனவரி, ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த கன்னியாஸ்திரீ டெல்லியிலுள்ள போப் பிரான்சிஸின் பிரதிநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை எதிர்த்து கேரள கத்தோலிக்க திருச்சபை சீர்திருத்த இயக்கத்தை சோந்த ஜார்ஜ் ஜோசப் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆயருக்கு எதிராக போதிய சான்றுகளை திரட்டியுள்ளதாக நீதிமன்றத்திடம் காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்கை மிகவும் கவனமாக கையாளும்படி காவல்துறையிடம் கூறியது நீதிமன்றம்.

4 முக்கிய அம்சங்களில் நீதிமன்றம் வழிகாட்ட வேண்டும் என்று ஜோசப் கோரிக்கை வைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AS SATHEESH/BBC

"இந்த ஆயர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த விசாரணை உயர் நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட வேண்டும். வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஆயர் முலக்காலுக்கு தடை விதிக்க வேண்டும். பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாட்சி பாதுகாப்பு நெறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்தார் ஜோசப்.

ஆனால், தன்மீது புகார் அளித்துள்ள கன்னியாஸ்திரீக்கு எதிராக தொடக்க விசாரணை ஒன்றை நடத்தியதால் தான் இலக்கு வைத்து பழிவாங்கப்படுவதாக ஆயர் முலக்கால் பிபிசியிடம் கூறியுள்ளார்.

"இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த ஆணோடு வைத்துள்ள முறையற்ற உறவால், அந்த குடும்பத்தை இந்த கன்னியாஸ்திரீ சீர்குலைத்துள்ளார்" என்று கூறும் ஆயர் முலக்கால், "தனக்கு எதிரான விசாரணையில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே, இந்த கன்னியாஸ்திரி என் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்" என்று அவர் கூறியுள்ளார்.

கொச்சியில் போராட்டங்களை வழிநடத்தி வரும் கன்னியாஸ்திரீ அனுபமா இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையில், "இவை பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீக்கு எதிரான போலியான குற்றச்சாட்டுக்கள். கன்னியாஸ்திரி இந்த குடும்பத்தை உடைத்திருந்தால், அவர்கள் சேர்ந்து வாழ்வதேன்? ஆயர் இந்த தம்பதியை கட்டாயப்படுத்தி கடிதம் ஒன்றில் கையெழுத்திடச் செய்துள்ளார்" என்கிறார் அனுபமா.

சமூகத்தின் பல்வேறு நிலை மக்களிடம் ஆயருக்கு எதிரான இந்த போராட்டம் ஆதரவு பெற்று வருகிறது.

கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கெமால் பாஷா, இந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளார்,

"குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வது காவல்துறையின் கடமை. புலனாய்வு அலுவலர் உயர் நீதிமன்றத்திடம் வழங்கியுள்ள உறுதிமொழிப் பத்திரத்தில் இந்த ஆயரை கைது செய்வதற்கு போதிய சான்றுகள் உள்ளதாக ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்" என்று அவர் கூறியுள்ளார்.

சிரோ மலபார் திருச்சபையின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான பாதிரியார் பால் தெலாகாத்தும், திருச்சபை சீர்திருத்த இயக்கத்தின் உறுப்பினரும், வழக்கறிஞருமான இந்துலேகா ஜோசப்பும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :